Friday, September 04, 2020

தொண்டையில் முள்

 என் வீட்டில் எல்லோருமே பிறவி சைவம், நான் தான் முதலில் அசைவம் சாப்பிட ஆரம்பித்த ஆள், பக்கத்து வீட்டு மினர்வா ஆன்ட்டி மீன் சமைக்கும் போது அந்த வாடை வீட்டில் உள்ள அனைவருக்கும் உமட்ட எனக்கு மட்டும் பிடித்துப்போய்விட்டது, அவர்கள் வீட்டில் சாப்பிட்டது தான் முதல் அசைவ உணவு. பின்னர் அவர்கள் வீட்டில் செய்யும் போதெல்லாம் எனக்கு கொடுத்து அனுப்புவார்கள். அவர்கள் விரும்பி கொடுத்தாலும், அடிக்கடி வாங்குவது சரியல்ல என்று என் அம்மா அவர்களிடம் செய்முறை கேட்டு எனக்கு மட்டும் குறைந்த அளவு வாங்கி செய்து கொடுப்பார், ருசி பார்க்காமல் அவர் செய்தாலும் மிகவும் ருசியாக இருக்கும்.  


எனக்கு பத்து பதினோரு வயதிருக்கும், ஒரு முறை மீன் சாப்பிடும் போது முள் தொண்டையில் சிக்கிக்கொண்டது, நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அது வெளியே வரவில்லை. காலையில் மீன் வாங்கிய போது அது பக்கத்துக்கு வீட்டுக்கு கூட  தெரியாது ஆனால் தொண்டையில் முள் குத்திய பிறகு அது தெருவுக்கே தெரிந்துவிட்டது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வைத்தியம் சொன்னார்கள். அதன்படி வாழைப்பழத்தை அப்படியே விழுங்கினேன், வெள்ளை சோ(று)றை மெல்லாமல் முழுங்கினேன், எதற்கும் அந்த முள் அசைந்து கொடுக்கவில்லை. பின்னர் என் தந்தை மாலை அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்,  காத்திருக்கவில்லை உடனே அழைத்தனர், உள்ளே சென்றோம், டாக்டர் விஷயத்தை கேட்டுவிட்டு சிரித்துக்கொண்டே ஒரு tounge depressorஆல் நாக்கை அழுத்திக்கொண்டு உள்ளே டார்ச் அடித்துப் பார்த்தார், முள் தெரிந்தது. என்னை 'அ ..ஆ ஆ..' என்று சொல்ல சொல்லியவாறே ஒரு கத்திரிக்கோல் போன்ற ஒன்றை உள்ளே விட்டு முள்ளை எடுத்துவிட்டார். எனக்கும் உறுத்துதல் நின்று எளிதாக சுவாசம் விட முடிந்தது. பத்து ரூபாய் பீஸ் வாங்கிக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்து வெகு நாட்களுக்கு என் அம்மா '5ரூபாய்க்கு மீன் வாங்கி 10ரூபாய் கொடுத்து  முள் எடுத்தது நம்மளாதான் இருப்போம்' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். 


இப்போது, சரியாக 30 ஆண்டுகள் கழித்து, சென்ற வாரம், மீன் வாங்கி ரொம்ப நாள் ஆச்சு, மீன் வாங்கிட்டு வாங்க என்றாள் என் மனைவி. நானும் வாங்கி வந்தேன். என் மகனுக்கு இப்போது வயது பதினொன்று ஆகிறது, மதியம் சாப்பிடும் போது லேசாக இருமினான், என்ன என்றேன், 'தொண்டையில் லேசாக முள் மாட்டியது போல் இருக்கிறது' என்றான். இவன் இதுபோல் சொல்வது இயல்பு  என்பதால் லேசாக எடுத்துக்கொண்டேன். இரவு அதிகம் உறுத்துகிறது என்றான், தொண்டையின் மேல் பகுதியை வெளியே தொட்டு காண்பித்து அந்த இடத்தில உறுத்துவதாக சொன்னான். சரி என்று ஒரு வாழைப்பழம் கொடுத்து முழுங்கச்சொன்னோம், வெள்ளை சோறு கொடுத்தோம், எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு ஒரு வாந்தியும் எடுத்துவிட்டு தூங்கிவிட்டான். காலை எழுந்தவுடன் அதே பல்லவி, உறுத்துகிறது என்றான். சரி டாக்டரிடம் காண்பிக்கலாம் என்று முடிவு செய்தேன். பொதுவாக பெரிய மருத்துவமனைக்கு எப்போதும் நான் செல்வதில்லை, இருந்தாலும் இது Corona டைம்  என்பதால், அருகில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றேன்.  மருத்துவமனையின் மெயின் எண்ட்ரன்ஸ்க்கு வெளியே இரண்டு மீட்டர் இடைவெளியில் குறியீடுகள் போடப்பட்டிருந்தன, அதில் ஒரு 15 நிமிடம் காத்திருந்தோம். பின்னர் ஒரு நர்ஸ் வந்து எங்கள் இருவருக்கும் temperature  check  செய்தார், கைகள் இரண்டிலும்  Sanitiser தெளித்து உள்ளே  போகச் சொன்னார். சரியாக கதவருகே சென்ற போது 'சார் ஆரோக்யா சேது app இருக்கா  என்றார்'. நான் 'இல்லை' என்றேன். 'சாரி சார், App is  mandatory, நீங்க சைடுல நின்னு  இன்ஸ்டால் பண்ணீட்டு வாங்க' என்றார். இன்ஸ்டால் செய்து அவர்களிடம் காண்பித்துவிட்டு உள்ளே சென்று கன்சல்டேஷன் பீஸ் ருபாய் 600 கட்டிவிட்டு காத்திருந்தேன். 'ENT  டாக்டர்கு போன் பண்ணி இருக்கோம் ஒரு half-an-hour வந்து விடுவார்' என்றனர்.  டாக்டர் வந்தார், எங்களை உள்ள அழைத்தார், பிரச்னையை சொன்னோம். எங்கே குத்துகிறது என்று என் பையனிடம் கேட்டார். அதுவரை   மேல் பகுதியை தொட்டு காண்பித்த அவன், அவர் கேட்டவுடன், அதிலிருந்து ஒரு இன்ச் கீழிறக்கி தொண்டையின் கீழ் பகுதியை  தொட்டு காண்பித்தான். எனக்கே கொஞ்சம் தூக்கி வாரிப்போட்டது. டாக்டர் உடனே 'ஓ  மை  காட்..... He  is  showing  so  deep ... நான் ஏதோ consultation அப்படினு நினச்சு வந்தேன்... I  need  instruments... இங்க instruments இல்ல பெட்டெர்  நீங்க  என்னோட கிளினிக்கு வந்துருங்க' அப்படினு சொல்லி அவர் சொந்தமாக நடத்தும்  கிளினிக் அடையாளத்தை சொல்லி  கிளம்பிவிட்டார்.

அவரை பின்தொடர்ந்து அவரது கிளினிக்ஐ சென்றடைந்தோம்.  நாக்கை கையில் பிடித்துக்கொண்டு கண்ணாடி போன்ற ஒன்றை  வைத்து முதலில் பார்த்தார், gloves மாட்டிக்கொண்டு விரல் வைத்துப் பார்த்தார்.  நன்றாக பார்த்துவிட்டேன் எதுவும் தென்படவில்லை என்றார். என் பையனோ  உறுத்துவது நிற்கவில்லை என்று திடமாக சொன்னான். குத்துன  இடம் புண்ணாக  இருந்தால் கூட உறுத்துவது போல்   இருக்கும், டேப்லெட் எழுதியிருக்கேன் குடுங்க சரியாகிடும் என்றார்.   400 ரூபாய்க்கு மாத்திரை மருந்து எழுதியிருந்தார். வீட்டிற்கு வந்த பிறகு இரவு  உறங்குவதற்கு முன்பு எப்படி இருக்கிறது என்று கேட்டேன், அப்படியே தான் இருக்கிறது என்றான். ஒரே யோசனையோடு உட்கார்ந்திருந்தேன், மதியம் வாங்கிய பலாச்சுளையில் இரண்டு மீதம் இருந்தது, எங்கள் யாருக்கும் அதை சாப்பிட விருப்பமில்லை.  இவன் என்ன நினைத்தானோ, அந்த இரண்டு சுளையையும்  எடுத்து சாப்பிட்டான். சாப்பிடும் போது ஒரு  இரண்டு முறை இறுமினான், உறுத்துகிறது போலும் என்று நினைத்துக்கொண்டேன். சற்று நேரம் கழித்து என்னருகில் வந்தான், பலாப்பழம் சாப்பிடும் போது லேசா இருமுச்சு அதுக்கப்புறம் தொண்டை free  ஆகிடுச்சு என்றான். சுத்தமாக எதுவும் செய்யவில்லை என்று தெளிவாக சொன்னான். பலாச்சுளையை சாப்பிடும்போது அது முள்ளை  உள்ளே கொண்டு சென்றிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.  டாக்டரால் செய்ய முடியாததை இந்த பலாச்சுளை செய்துவிட்டது. இந்த பலாச்சுளையை மதியமே கேட்டான், நான் தான் டாக்டர் கிட்ட போறோம், வாந்தி ஏதும் எடுத்துவைக்காதே... இப்ப சாப்பிட வேண்டாம் என்றேன். யோசித்துப்பார்த்தால் அப்பொழுதே கொடுத்து இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. 

இதிலிருந்து தெரிந்துகொண்ட சில விஷயங்கள்,

1. என் தந்தை அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை. அவர் என்னை திட்டவே இல்லை ஆனால் நான் என் பையனை நன்றாக திட்டினேன்.

2. என் அளவுக்கு என் பையனுக்கு சகிப்புத்தன்மை இல்லை. டாக்டர் தொட்டவுடனேயே கத்த  ஆரம்பித்துவிட்டான்.

3. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என்று சொல்லக்கூடிய  பரம்பரையாக வரும் வியாதியை போல் இது ஒரு பரம்பரை நிகழ்வாக இருக்குமோ!! என்று கூட தோன்றுகிறது.

எது எப்படியோ, என் அம்மா சொன்ன மாதிரி '300 ரூபாய்க்கு மீன் வாங்கி 1000 ருபாய் டாக்டர்க்கு கொடுத்தது நானாகத்தான் இருப்பேன்'.
Thursday, August 13, 2020

விலாசம்

 நிறைய கடைகளில் குறிப்பாக ஹோட்டல்களில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும், அந்த கடையின் பெயரை டம்ளர்களில் பொறித்திருப்பார்கள்.  சென்னையில் நான் வேலை பார்த்தபோது பூந்தமல்லி ரோட்டில் (Chetpet) உள்ள ஒரு உணவகத்துக்கு அடிக்கடி செல்வதுண்டு, அந்த உணவகத்தில் உள்ள பொருட்களில் "இது  ஹோட்டலில் திருடப்பட்டது' என்று பொறித்திருப்பார்கள்.  யாரேனும் எடுத்துச் சென்றால் உபயோகிக்க முடியாது என்ற நோக்கில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் நான் சொல்ல வருவது இது போன்ற ஒன்று அல்ல,  "பெயர் வெட்டுதல்"  என்கிற இரண்டு வார்த்தையை மிகவும்  நேர்த்தியான முறையில் தமிழகத்தின் ஒரு பகுதியை சேர்ந்த மக்கள்  பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு எழுத்தை (initial) வைத்து அந்த பொருளின் காலத்தையும் அவர்களுடைய முனோர்களையும் (குறைந்தது இரண்டு  தலைமுறை) தெரிந்துகொள்ளும்படி பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஏதோ தங்கத்திலும் ,  வெள்ளியிலும் விலையுயர்ந்த பொருட்களில் மட்டும் தான் போடுவார்கள் என்று எண்ணுவீர்களாயின் அது தவறு, நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத விலை குறைந்த சிறு பொருட்களில் கூட வெட்டியிருப்பார்கள். 

தட்டு, கரண்டி தொடங்கி, மர சாமான்கள், மங்கு சாமான்கள், பீங்கான் சாமான்கள், கல்லு சாமான்கள், பித்தளை சாமான்கள் இரும்பு சாமான்கள் தொட்டு வெள்ளி சாமான்கள் வரை தொடரும். சாதாரண கர்ச்சீப் திரைச்சீலைகளில் கூட உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

உதாரணத்திற்கு எனக்கு சட்டென நினைவுக்கு வரும் சில பொருட்கள்.

*சாவி *மேசை *நாற்காலி *சங்கு *விளக்கு *அம்மி *குழவி *ஆட்டுக்கல் *அலமாரி *ஜாடி *கைப்பை *கோலாட்டக்குச்சி *மெத்தை *தலையணை *பாய் *வடிகட்டி  இன்னபிற.

கல் மற்றும் மர சாமான்களில் விலாசத்தை செதுக்கி மை தீட்டியிருப்பார்கள், சில்வர் மற்றும் வெள்ளி சாமான்களில் பொறித்திருப்பார்கள், துணிகளில் ஒன்று பின்னியிருப்பார்கள் அல்லது அழியாத மையால் எழுதியிருப்பார்கள்.

சரி, இதனால் என்ன பயன்?

1. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த அந்த காலத்தில் யாரேனும் ஒரு பொருளை (சிறு பொருளாக இருந்தாலும் கூட) எங்கேனும் மறந்து வைத்துவிட்டால், இந்த விலாசத்தை பார்த்து எளிதில் அவரிடம் ஒப்படைக்க முடியும்.

2. நான்கு ஐந்து மருமகள்கள் இருந்தால் இன்னாருடைய பொருள் என்பது  எளிதில் தெரியும்.

3. யார் யாருக்கு கொடுத்தது என்பதையும் எப்போது வாங்கப்பட்டது என்பதையும் கண்டறிய முடியும்.

4. ஒருவேளை கடையில் வாங்காமல் இன்னொரு குடும்பத்திடம் இருந்து வாங்கியிருந்தால், அந்த விலாசத்தை அடித்துவிட்டு மேலே இவர்களுடைய பெயரை போடுவார்கள், ஆகா யாரிடம் இருந்து வாங்கினோம் என்பது 50 ஆண்டுகள் கழித்துக்கூட தெரிந்துகொள்ளலாம்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான பயன் இதுதான். என் வீட்டில் ஒரு பொருள் கீழே விழுந்து உடைந்துவிட்டால், நாங்கள் உடனே பார்ப்பது பெயரைத்தான். என் வீட்டுப் பொருளை அவளோ அல்லது அவள் வீட்டுப் பொருளை நானோ உடைத்துவிட்டால் "எங்க ஆயா வீட்டு சாமானை உடைச்சுட்டீங்களே" என்று அவளும் "எங்க அப்பத்தா காலத்து சாமானை உடைச்சுட்டியே" என்று நானும் சொல்லி வரும் சண்டை கிட்டத்தட்ட ஒரு வாரம் போகும் என்றால் இதன் முக்கியத்துவத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.

எனக்கு விபரம் தெரிந்து ஒரு திருமணம் பேசி முடித்த உடன் முக்கியமான வேளைகளில் ஒன்று பெயர் வெட்டுபவரை அழைப்பதுதான். மூன்று எழுத்துக்கு காலணா  அல்லது நான்கு எழுத்துக்கு எட்டணா என்று கூலி நிர்ணயித்துவிட்டு புதிதாக வாங்கிய சீர்வரிசை சாமான்கள் எல்லாவற்றிலும் பெயர் வெட்டுவார்கள். ஒரு சிறு தவறு கூட நிகழாமல்  இரு கால்களுக்கு நடுவில் வைத்து அவர்கள் பெயர் வெட்டும் அழகே தனி, அப்படி ஒரு நேர்த்தியான முறையில் அது இருக்கும். இது அவர்களுக்கு முக்கிய தொழிலாக இருக்காது, ஏதாவது பாத்திர கடைகளில் வேலை செய்துகொண்டு இதை பகுதி நேர வேலையாக செய்வார்கள். ஒரு சிறிய சுத்தியலும்  , சில வகையான ஆணிகளும் நல்ல பயிற்சியும் தான்  மூலதனம். காலப்போக்கில் அழிந்த கலைகளில்  இதுவும் ஒன்று, இன்றைக்கு சில கடைகளில் மிஷின் மூலம் வெட்டுகிறார்கள், ஏதோ  அடையாளத்துக்கு ஒரு குறி போட்டதுபோல் இருக்கிறது, எவ்வித அழகும் அதில் இல்லை. நகைக்கடையில் வாங்கும் நகையில் கூட கடையின் பெயரை எதோ கிறுக்கிதான் வைக்கீறார்களே தவிர அழகாக போடுவதில்லை. 

இப்படி வெட்டும் சாமான்களை எல்லாம் திருமணத்தின் போது  பரப்பி வைப்பார்கள். திருமணத்திற்கு  வந்தவர்கள் குறிப்பாக பெண்கள்  முகூர்த்தம்  முடிந்த பிறகு அந்த சாமான்களை எல்லாம் பார்த்து விட்டு செல்வார்கள். இப்போது எல்லாம் இது எல்லா கல்யாணத்திலும்  நடப்பதில்லை, வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில திருமணங்களில் மட்டும் பார்க்கலாம். கொரோனாவுக்கு பின்பு திருமணமே (விமர்சையாக) நடக்குமா என்று இருக்கும் சூழ்நிலையில் சாமான் பரப்புவதெல்லாம் நடக்காத காரியம், அப்படியே பரப்பினாலும் அதை அவர்களே பார்த்துக்கொள்ளவேண்டியது தான்.

எது எப்படி இருந்தாலும் இந்த பழக்கம் தொடரவேண்டும் என்பது எனது விருப்பம். அடுத்த தலைமுறையினருக்கு முன்னோர்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு  இந்த  பழக்கம் ஒரு கருவியாக இருக்கும் என்பது என் எண்ணம்.Saturday, November 30, 2019

தண்ணீர் தேசம்: படிக்கப் படிக்க பரவசம்திகட்ட திகட்ட காதல்...
இனிக்க இனிக்க அறிவியல் ....
ததும்ப ததும்ப தன்னம்பிக்கை ....
ரசிக்க ரசிக்க தமிழ், இது தான் தண்ணீர் தேசம்.

இதை பலரும் படித்திருக்க கூடும், பலரும் படித்த இந்த நாவலை நான் பலமுறை படித்திருக்கிறேன்.
கடலை விரும்பும் காதலன், தண்ணீர் பயம் கொண்ட காதலி, நான்கு நண்பர்கள் மற்றும் ஒரு சுண்டெலி. இது  மனிதர்களை எதிர்த்து மனிதர்கள் போராடும் கதை அல்ல, இயற்கையை எதிர்த்து  காதலர்கள் போராடும் கதை. கடலை பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்திருக்கிறார் ஆசிரியர், அதை சொல்வதற்காக அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட களம் காதல், அதுவும் ஒரு மெல்லிய காதல், அதற்க்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக கதாபாத்திரத்தின் பெயர்கள் கலைவண்ணன் - தமிழ்ரோஜா. 

எதேர்சையாக காதலர்கள் இருவரும் மீனவ நண்பர்களுடன் படகில்  பயணிக்கிறார்கள், நான்காவது அத்தியாயத்தில் படகு பழுதாகிறது , நடுக்கடலில் தத்தளிக்கும் இவர்கள் கரை வந்து சேருகிறார்களா என்பதே   கதை. இயற்கையோடு அவர்கள் போராடும் ஒவ்வொரு தருணத்தையும் நாம் படிக்கும் போது  நம் இதயம் நின்று நின்று துடிக்கும் என்பது மட்டும் நிஜம். 

கதையை சொல்லிக்கொண்டு போகும் போதே இடை இடையே  அறிவியலையும் தன்னம்பிக்கையையும் சொரிகிக்கொண்டே செல்கிறார். கதையின் நாயகன் ஒரு பத்திரிகையாளன், அனைத்தையும் அறிவியல் கண் கொண்டு பார்க்கும் ஒரு அறிவாளி. நாயகியோ  பணக்கார வீட்டு பெண், இயற்கைக்கும் அவளுக்கும் வெகு தூரம், தண்ணீர் பயம் கொண்டவள்.  அவள் பயம் கொள்ளும் போதெல்லாம் கலைவண்ணன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எதிர்மறை எண்ணம் கொண்ட அனைவரும் படித்து பருகவேண்டிய மருந்து. படகு பழுதானபோது வாழ்வே முடிந்துவிட்டது என்று தமிழ் ரோஜா புலம்பும்போது அவன் சொல்லுவான்...

"வாழ்வை கற்பனை செய்.
சாவை கற்பனை செய்யாதே..

பூக்கள் காற்றில் உதிர்ந்தால் பூகம்பம் 
வந்துவிட்டதென்று புலம்பித்  திரியாதே.
உச்சிவானத்தில் நிலா வந்தால் தலையில் 
விழுந்துவிடுமோ என்று சந்தேகப்படாதே..
இன்பத்தைக் கற்பனை செய்து பார்.
துன்பத்தைப் எதார்த்தமாய்ப் பார்.

படகு பழுதானதொரு சின்னஞ்சிறு செய்தி..

உடனே இதுதான் வாழ்வின் கடைசி 
இரவென்று சுருங்கிப் போகாதே..
இன்பத்தை இரண்டாய்ப் பார்,
துன்பத்தை பாதியாய் பார்...
விரல் விழுந்துவிட்டால் அழுதுகொண்டிருக்கக் கூடாது. 
நகம் வெட்டும் நேரம் மிச்சம் என்று நினைத்துக் கொள்வோம்.
படகு பழுதானால் பதறிக் கொண்டிருக்கக் கூடாது.
கடலில் ஓர் இரவு என்ற கட்டுரைக்கு குறிப்பெடுப்போம்."

 மனிதர்கள் உடைந்து போகும் நேரங்களில் இது போன்ற தன்னம்பிக்கை வார்த்தைகள்  சொல்ல ஆள் இல்லாததே இன்று இருக்கும் பெரும் பிரச்சனை. படிக்கும்போதே இவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்துகிறதே, ஒவ்வொருவருக்கும் வாழ்வில்  இப்படி ஒரு நபர் உடன்  இருந்தால் !!!. 

இங்கே முழு கதையையும் சொல்வது என் நோக்கமல்ல ஆனால் சில உரையாடல்களை சொல்ல விரும்புகிறேன். அதில் முக்கியமான ஒன்று கலைவண்ணனுக்கும் தமிழ்ரோஜாவின் தந்தைக்கும் மருத்துவமனையில் நடக்கும் உரையாடல். இரண்டு யதார்த்தவாதிகள் வெவ்வேறு துருவத்தில் நின்று பேசும் காட்சி.

சிகரெட்டை புகைத்துக்கொண்டே அகத்தியர் சொல்லுவார்...
"தமிழை இன்னும் கொஞ்சம் மென்மையாய் கையாண்டிருக்கலாம்"..

கலைவண்ணனுக்கு அவரிடம் பிடித்தது அவர்  பெண், பிடிக்காதது அவர் பிடிக்கும் சிகரெட்... "இப்படி நீரச்சம் கொண்டவள் என்று நினைக்கவில்லை நான், நீரச்சம் நிரந்தர அச்சம் அல்ல. இந்தத் தண்ணீர் பயத்தை தவிர்த்தாக வேண்டும்"

"கவனம்! தூசு எடுக்கும் அவசரத்தில் கருமணியே தூர்ந்துவிடக்கூடாது. எனக்கு அவள் ஒரே பெண்".

"நான் சகாராவின் சகோதரன். பகல் சுடும் - இரவு குளிரும் - இதுதான் என் பயணம்.நான் பத்திரிகையாளன். பேனாவின் மூடி திறந்தபோதே என் மார்பையும் திறந்துவைத்துக் கொண்டவன்..."

"தமிழை மனம் செய்துகொண்டால் உங்கள் பாலைவனம் கடக்கச் சொந்த விமானம் ஒன்று தந்துவிட மாட்டேனா?"

"சொந்தத்தில் விமானம் வாங்கலாம்.
அனுபவம் வாங்க முடியுமா?
உங்கள் பணம் எனக்கு குடைவாங்கித் தரலாம்.
மலை வாங்கித் தர முடியுமா?"

அகத்தியர் அவன் தோள்தொட்டு  சொல்லுவார்... "பணம் இல்லாதவன்தான் பணத்தை மதிப்பதில்லை.

இவர்கள் பேசிக்கொள்வது மட்டும் ஒரு பத்து பக்கம் இருக்கும், முழு உரையாடலும் தர்க்கத்தின் உச்சம். நீங்கள் படித்தால் மட்டுமே ரசிக்க முடியும்.

படகு நின்று பதினான்கு நாள் ஆகியிருக்கும், கரை சேருவது கடினம் என்ற நிலையில் கலைவண்ணனுக்கு ஒரு யோசனை வரும், தங்களுடைய நிலையை ஒரு கடிதத்தில் எழுதி புட்டியில் வைத்து அடைத்து கடலில் எறிந்தால் என்ன என்று, யார் கண்ணிலாவது பட்டால் அவர்கள் உதவிக்கு வரக்கூடும் என்று சொல்லுவான். இசக்கி அத்தோடு தன தாய்க்கு ஒரு கடிதத்தையும் வைத்து அனுப்ப முடியுமா என்று கேட்பான், கடைசியில் ஆளுக்கு ஒரு கடிதம் எழுதுவது என்று முடிவாகும். அவர்கள் ஒவ்வொருவர் எழுதும் கடிதமும் ஒவ்வொரு குட்டி கதை.  உதாரணத்திற்கு பரதனின் கடிதம்.

அன்புள்ள மீனா. 
என் ஆசை மகளே. நீ பிறந்தது முதல் உன்னைப் பத்து நாட்களுக்குமேல் பார்க்காமலிருந்தது இப்போதுதான். ஒருவேளை, உன்னை இனிமேல் பார்க்கவே மாட்டேனோ என்று பயமாகவும் இருக்கிறது. உன் பிரசவத்திலேயே உன் தாயைப் பறிகொடுத்த நான் அப்போதே செத்திருப்பேன். ஆனால், உன் பிஞ்சுக்கைகளின் உத்தரவுக்குத்தான் நான் பிழைத்துக் கிடந்தேன்.

எனக்கு ஒரே ஓர் ஆசை இருந்தது தாயே. அந்தத் தகரப்பெட்டியில் நாப்தலின் உருண்டைகளுக்கு மேலே மடித்து வைக்கப்பட்டிருக்கும் உன்தாயின் பழைய பட்டுப் புடவையை, நீ வளர்ந்த பிறகு உனக்குக் கட்டி
அழகு பார்த்து.. உன்னில் உன் தாயைப் பார்க்க ஆசைப்பட்டேன். என் நியாயமான ஆசை அநியாயமான கனவாகவே அழிந்துவிடுமா? உன் தாயின் பிரிவை நான் தாங்காதது போலவே என் பிரிவை அவளும்
தாங்கவில்லைபோலும். கண்ணுக்குத் தெரியாத கைநீட்டி என்னை அழைத்துக் கொண்டேயிருக்கிறாள். கரை
வந்தால் உன்னோடு வாழ்வேன். என்னைக் கடல்கொண்டால் உன் தாயோடு சேர்வேன். 
படி மகளே படி. நம் இனத்தைப் பரம்பரைத் துயரிலிருந்து மீனவர்மகளே... மீட்கப் படி. ஒரு விதையைப் பூமி
பாதுகாப்பதைப் போல உன்னை உன் தாத்தா பாதுகாப்பார் என்று நம்புகிறேன். ஜென்மங்களில் எனக்கு
நம்பிக்கை இல்லை மகளே. இருந்தால் - எவ்வளவு வசதியாக இருக்கும்.

உன் அன்பு அப்பா,
பரதன்

கிட்டத்தட்ட ஒவ்வொரு கடிதமும் ஒரு மரண வாக்குமூலம் போல்  இருக்கும்.

அதே போல்  சலிமுக்கும் சுண்டெலிக்கும் உள்ள உறவு ஒரு தனிக்கதை... நான் சொல்வதை விட நீங்கள் படித்து ரசிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சேமித்த உணவுகள் அனைத்தும் தீர்ந்துவிடும் குடிதண்ணீர் உட்பட. அப்போது தமிழ்ரோஜாவின் கைப்பையில் இருந்து ஒரே ஒரு சாக்லெட் கண்டெடுக்கப்படும்... அது ஆறு பங்காய் பிரிக்கப்படும்போது.. வைரமுத்து இப்படி எழுதியிருப்பார்.

"சாக்லெட் பிளக்கப்பட்டது.
இந்தியா-பாகிஸதான்
பிரிவினையைவிட அது
கவனமாகவே
கையாளப்பட்டது.

அவரவர் துண்டு அவரவர்
கைக்கு வந்ததும், உயிருக்கு
அது ஓர் அமிர்தச் சொட்டு
என்றே அறியப்பட்டது."

சலீம் தனக்கான பங்கை எடுத்துக்கொண்டு சுண்டெலியை தேடி ஓடுவான். அது கொல்லப்பட்டிருக்கும், அதை பார்த்து அவன் கதறி அழும் போது கதையில் வார்த்தைகள் இப்படி வரும்...

"தண்ணீர் குடிக்காத தேகத்தில் எப்படித்தான் அவ்வளவு கண்ணீர் இருந்ததோ."
"ஒரு மனிதன் -
எத்தனை நாடுகள் கடந்தான். எத்தனை கடல்கள் கடைந்தான். எத்தனை பேரைக் கொன்றான். எத்தனை மகுடம் கொண்டான். எத்தனை காலம் இருந்தான். எத்தனை பிள்ளைகள் ஈன்றான் - என்பவை அல்ல அவன் எச்சங்கள்.


இவையெல்லாம் நான் என்ற ஆணவத்தின் நீளங்கள். 
அவன் இன்னோர் உயிருக்காக எத்தனைமுறை அழுதான் என்பதுதான், அவன் மனிதன் என்பதற்கான மாறாத சாட்சி.

சலீம் அழுதான்.

அது சுயசோகத்திற்காகச் சொட்டிய கண்ணீரன்று. சுண்டெலியின் மரணத்திற்காகச் சிந்தப்பட்ட சுத்தக் கண்ணீர்."

இதைபோல் ஏகப்பட்ட சம்பவங்கள் உண்டு, அரை கிலோ அரிசியை கொண்டு ஆறு பேர் (மன்னிக்கவும் சுண்டெலியை சேர்த்து ஏழு) ஐந்து நாள் உட்கொள்ள அவர்கள் கையாளும் யுக்தி, புயலுக்கு நடுவே எஞ்சி இருக்கும் இரண்டு தீக்குச்சிகளை கொண்டு தீப்பந்தம் ஏற்ற எடுக்கும் முயற்சி, படகை கடக்கும் ஒரு கப்பலின் கவனத்தை பெற அவர்கள் செய்யும் செயல், கடல் நீருக்கு நடுவே இருந்தாலும் மழை நீரை சேமித்து வைக்க அவர்கள் படும் பாடு என்று உயிர் வாழ்வதற்காக அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் இதிலாவது வென்றுவிடமாட்டர்களா என்று நம்மை பதறவைக்கும்.

உடம்பில் எத்தனை சதவிகிதம் நீர், பெர்முடாஸ் முக்கோணத்தின் மர்ம முடிச்சு, அம்மாவாசையில் கடல் ஏன் பொங்குகிறது, தீவு எப்படி ஏற்படுகிறது,  இடி எப்படி உருவாகிறது போன்ற அணைத்து கேள்விகளுக்கும் விஞ்ஞான விளக்கத்தை  கவிதை நடையில் வாசிக்கலாம்.... ரசிக்கலாம். நாவலின் பின்னட்டையில் உள்ள குறிப்பு சொல்வதைப்போல் இது 'தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம்'.

நாவலில் இருந்து எனக்கு பிடித்த சில வரிகள்...

"நிகழும் வரைக்கும்தான் ஒன்று அதிசயம். நிகழ்ந்த பிறகு அது சம்பவம்." 

"இந்த விஞ்ஞான நெருப்பு வீசப்பட்டவுடன், அதுவரை நம்பப்பட்டு வந்த பிசாசு இறந்துவிட்டது."

"அவன் தூக்கமுயன்றான். அவள் துவண்டு விழுந்தாள்.
கைதட்டிச் சிரித்தன அலைகள். நாடகம் பார்த்தன நண்டுகள்.
அவள் தரைமேல் மீனாய் வலைமேல் உருண்டாள்".

"செருப்புக் கடித்துச் செத்துப்போகும் தேகங்களை வளர்த்துவிட்டோம்.
தந்திவந்தால் இறந்துபோகும் இதயங்களை வளர்த்துவிட்டோம்.
உங்கள் பெண்ணும் விதிவிலக்கல்ல, அவள் ஈசல் உடம்புக்காரி காளான் மனசுக்காரி".

"சாதிக்கும் முளையிருந்தும் சோதிக்கும் முயற்சி இல்லை".

"ஒரு காதல் கடிதம் படிக்கப்படும்போதே எண்பது சதவிகிதம் கழிக்கப்பட வேண்டும்".

"பெண்மீது காதலும் வெற்றிமீது வெறியும் இல்லையென்றால் இன்னும் இந்த பூமி பிறந்த மேனியாகவே இருந்திருக்கும்".  

"அவள் அவனை நிஜமாய்க் கிள்ளிப் பொய்யாய் அழுதாள்".

இப்படி நிறைய உண்டு.
பொதுவாக கவிஞர்கள் ஆயிரம் வார்த்தைகளைக்கொண்டு சொல்லவேண்டிய ஒன்றை இரு அடியில் சொல்லிவிடுவார்கள். அது அவர்களுக்கு கை வந்த கலை. அவர்களிடம் உலகில் மூன்றில் ஒரு பகுதியை கொண்ட கடலை கொடுத்தால்? அதையும் சுருக்கி மேன்மை குறையாமல் ஒரு கோப்பையில் அடைந்திருக்கிறார் வைரமுத்து என்றே சொல்லவேண்டும். இந்த பதிவை எழுத்துவதற்கே எனக்கு ஒரு வாரம் ஆனது, 300 பக்கம் கொண்ட இந்த நாவலை எழுதுவதற்கு எதனை மாதங்களை , ஆண்டுகளை அவர் செலவிட்டிருப்பார் என்று நினைத்தால்
கடலைப்போலவே அவரும் ஆச்சரியமாய் இருக்கிறார்.

பெயர்: தண்ணீர் தேசம்
ஆசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து
விலை: ரூ.150

Saturday, November 23, 2019

வரம் தரும் நிமிஷாம்பாள்

நிகழ்கால அதிசயம்.
கண்ணெதிரே நடந்த அற்புதம்.
ஒரு திருவிளையாடல்.
உன்னத அனுபவம்.

நிமிஷாம்பாள் கோயில்
மேற்கண்ட அனைத்து வார்த்தைகளும் இந்த பதிவிற்கு பொருந்தும். நேரடியாக என் கண் முன்னே, அதுவும் எனக்கே நேர்ந்த ஒரு அனுபவம் இது.
கடந்த 10 ஆண்டுகளாக வருடம் ஒருமுறையேனும் நாங்கள் சென்று வரும் கோயில் நிமிஷாம்பாள் கோயில். அந்த ஊரில் உள்ள சங்கமத்தில் நீராடி விட்டு கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். அப்படி சென்ற போது நடந்த நிகழ்வுதான் இது.
கோயில் இருக்குமிடம் ஸ்ரீரங்கப்பட்டினம், மைசூருக்கு அருகில் உள்ள ஒரு ஊர். காவேரி ஆற்றங்கரையின் ஓரத்தில் ரம்மியமாக அமைந்திருக்கும் ஸ்தலம் இது. நாங்கள் சங்கமத்தில் நீராடி விட்டு கோவிலுக்கு சென்றோம், சங்கமம் என்பது காவேரி, லோக்கபாவனி,பத்மாவதி என்று மூன்று ஆறு சேரும் இடம். கோயிலிலுள்ள அம்மனை தரிசிப்பது அப்படி ஒரு அற்புதமான உணர்வை தரும். அன்றும் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து அமர்ந்து இருந்தோம், பிள்ளைகள் இருவரும் ஆற்றங்கரை ஓரத்தில் கால் நனைக்க மேலேற என்று விளையாடிக்கொண்டிருந்தனர்.

திரிவேணி சங்கமம்

நீர்நிலை என்பதனால் என் கண்கள் அவர்களை விட்டு அகலாமல் கண்காணித்துக் கொண்டே இருந்தன. விளையாடிக் கொண்டிருந்த இருவரில் என் மகள் அருகே வந்து சிறுநீர் கழிக்கவேண்டும் என்று சொல்ல, நான் அவளுக்கான ஒரு இடத்தை காட்டி விட்டு திரும்பினால் என் மகனை அங்கே காணவில்லை, அருகில் இருந்தவர்கள் எல்லாம் 'உடுகா' 'உடுகா' என்று கத்தத் தொடங்கினர், நான் சற்றே அருகில் ஓடினேன் அங்கிருந்த சிலர் என்னை நோக்கி 'நிம் உடுகா' 'நிம் உடுகா' என்று சொன்னபடியே ஆற்றை கைநீட்டி காண்பித்தனர், அவன் விழுந்து விட்டான் என்பது எனக்கு விளங்கிவிட்டது, என்ன செய்வதென்று தெரியாமல் தம்பி தம்பி என்று கத்தியவாறே அங்கும் இங்கும் ஆற்றை பார்த்தேன் அவன் தென்படவே இல்லை.... அம்மா தாயே எப்படியாவது காப்பாற்றி விடு என்று கத்திவிட்டேன். அங்கே குளித்துக் கொண்டிருந்த ஒருவர் தண்ணீருக்குள் சென்ற என் பிள்ளையை மூழ்கி உள்ளே இருந்து வெளியே எடுக்கி விட்டார், இப்போது நானும் அவனைப் பார்த்து விட்டேன். போன உயிர் எனக்கும் என் மகனுக்கும் திரும்பி வந்தது.

அவன் ஆற்றில் விழுந்தது, மக்கள் உடுகா உடுகா என்று கத்தியது, உள்ளே சென்றவனை ஒருவர் நீருக்குள் சென்று மேலே எடுக்கி வந்தது இவை அனைத்தும் நடந்து முடிந்தது ஒரு 40திலிருந்து 50 நொடிக்குள் இருக்கும். இந்த இடத்தில்தான் நிமிஷாம்பாள் அற்புதத்தை நான் உணர்ந்த தருணம்.

என்னையும் அறியாமல் அம்மா தாயே காப்பாற்றிவிடு என்று நான் கத்திய நொடியிலிருந்து ஒரு நிமிடத்திற்குள்ளாக அவனைக் காப்பாற்றி கொடுத்து விட்டாள். அதற்குப் பிறகு இரண்டு முறை சென்று விட்டேன், வேண்டுதலோடு நன்றி சொல்லிவிட்டே திரும்பி வருகிறேன்.

சிறிது நேரத்திற்கு பிறகு, தண்ணீரில் இருந்து காப்பற்றியவரை பார்த்து நன்றி சொல்வதற்காக தேடினேன், ஆனால் அவர் தென்படவே இல்லை. பிறகு மீண்டும் ஒரு முறை கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு கிளம்பினோம்.
புராணக் கதைகளில் மட்டுமே கேட்டு வந்த அதிசயம் இந்த கலியுகத்திலும் நடந்தேறிய நாள் அன்று, நானும் என் பிள்ளைகளின் இஷ்ட்ட தெய்வத்தை கண்டுகொண்ட நாளும் கூட [குலதெய்வம், காவல் தெய்வம் நாம் சொல்லித்தெரிவது ஆனால் இஷ்ட்ட தெய்வம் அவரவர் உணர்ந்து தெரிந்துகொள்ளவேண்டும்]. கடவுள் நம்பிக்கை இது போன்ற நிகழ்வுகளுக்கு பிறகு தான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நம்பிக்கையாக நிலைபெறுகின்றன.

(அன்றைக்கு எடுத்த சில புகைப்படங்களை தேடிக்கொண்டு இருக்கிறேன், கிடைத்தவுடன் இப்பதிவோடு இணைக்கிறேன்)

Sunday, September 10, 2017

மென்சோகம் என்றோர் அழகு

பெண்கள் எப்போதுமே அழகானவர்கள், ஆண்களிடம் இல்லாத ஒரு மென்மை, நளினம் அவர்களிடம் உண்டு. ரயில்வே ஸ்டேஷனிலும், பஸ்
ஸ்டாண்டிலும் கொளுத்தும் வெயிலில் அரக்க பறக்க ஓடிக்கொண்டிருக்கும் போது, முன் பின் அறிமுகமில்லாத ஒரு அழகிய பெண் நம்மை கடந்து சென்றால் நம்மையும் அறியாமல் கண்கள் அவள் பக்கம் திரும்புவதும், பேருந்தில் ஜன்னலோர சீட் பிடித்து உட்கார்ந்த பிறகும் நம் நினைவை விட்டு விலகாமல் சற்று நேரம் இங்கேயும் அங்கேயுமாக ஓடியாடுவார்கள். குறிப்பாக பதின்ம வயதுடைய பசங்களுக்கு தினசரி வாழ்க்கையில் இது ஒரு அங்கமாகவே இருந்திருக்கும். அழகு, கவர்ச்சி, ஆபாசம், இந்த மூன்றுக்கும் என்னைக்கும் தண்ணிருக்குமானளவு வித்தியாசமிருந்தும் நடிகைகளுக்கு மட்டும் இது பாலில் கலந்த தண்ணிராக எப்போதும் பிரிக்கவே தெரியாது. கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை ஆனால், ஆபாசமாக நடிக்கமாட்டேன் என்று காலம் காலமாக சொல்லி வருகிறார்கள். கவர்ச்சியை மட்டுமே இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்றொரு மாயை இவர்களிடம் உள்ளது. உன்மையில் அரைகுறை ஆடை, கவர்ச்சி இரண்டையும் விட மென்சோகத்தில் உள்ள பெண்களை   சிலர் அதிகம் விரும்புவார்கள். பல பெண்கள் மென்சோகத்தில் ரொம்பவே அழகாக இருப்பார்கள். அதிலும் இது போன்ற தருணத்தில் அவர்களிடம் குடிகொள்ளும் அமைதி, முகத்திற்கு மேலும் சற்று வசிகரத்தை அதிகப்படுத்தும். எவ்வளவோ அழகானவர்களிடம் இல்லாத ஒரு வசீகரம் இந்த மென்சோகம் கொண்டவர்களிடம் நான் உணர்திருக்கிறேன். குறிப்பாக ஜானி படத்தில் ஸ்ரீதேவியும், பார்த்திபன் கனவு படத்தில் ஸ்ரீகாந்தின் மனைவியாக வரும் சினேகாவும், குஷி, மொழி போன்ற பல படங்களில் ஜோதிகாவும் இந்த மென்சோகத்தை ரொம்பவே அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்கள். ஆண்கள் கூட மென்சோகத்தில் ரொம்பவே நிதானமாக ஆண்மையுடன் தேஜஸ் ஆகா காணப்படுவதுண்டு. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாரும், இதயம் படத்தில் முரளியும் இதற்கோர் உதாரணம். பதிவர்களில் காயத்திரியின் எழுத்துக்களில் இதை உணரலாம். இவர் பதிவுகளில் ஒவ்வொரு வரியிலும் இந்த தாக்கத்தை அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். சற்றே தள்ளி நின்று யோசித்துப் பார்த்தால், இறுதியில் ஒரு கேள்விதான் எழுகிறது. சோகத்தை அழகாக பார்ப்பது என்னுடைய தவறா அல்லது மற்றவர்கள் அதை பர்ர்க்க தவறுகிறார்களா என்பது தான் புரியவில்லை.

Wednesday, February 19, 2014

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இது  என்   கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம். வெகு நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு நிகழ்வு. வெகு நாட்கள் என்று நான் இங்கு குறிப்பிடுவது சுமார் ஏழு ஆண்டுகள் என்று கணக்கிடலாம். சரியான நேரம் கிடைக்காததனால் தள்ளிக்கொண்டே சென்ற ஒன்று.

மறக்க முடியாத நிகழ்ச்சி என்றாலும் ஒரு நாள் மறந்துவிடும் போலும்; காலத்திற்கு எதையும் மறக்கடிக்கும் சக்தி உண்டு என்பது கல்லூரி முடித்து பத்து ஆண்டுகள் ஆனா பின்பு நன்றாகவே புரிகிறது.

முற்றிலும் மறப்பதற்கு முன்பு பதிவிட  விரும்பியே இந்த பதிவு. காலேஜில்  அந்த செமஸ்டரின் கடைசி தேர்வு எழுதிவிட்டு Hostelலில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்த நேரம் அது. காலேஜின் மெயின் கேட் அருகே வந்து நின்றால் வலது புறம் செல்லும் ரோடு கோவில்பட்டிக்கும் இடது புறம் செல்லும் ரோடு சிவகாசிக்கும் செல்லும். நாங்கள் கூட்டமாக ஒரு 20 அல்லது 25 பேர் சேர்ந்து கிளம்பினோம். காலேஜ் வாசலில் நிற்கும் போது, ஒரு பஸ் சிவகாசி நோக்கி வந்தது. நாங்கள் பஸ்சில்  ஏறிக்கொண்டிருக்கும் போது, Jebasingh பஸ்ஸின் முன்பு ஒரு சர வெடியை கொளுத்தி போட்டான், அது சர சர வென்று வெடித்து மிகப்பெரிய புகையை  அங்கு உருவாக்கியது. பஸ்சில் இடம் இல்லாததால் நாங்கள் எல்லோரும் பஸ்ஸின் மேற்கூரையில் ஏறி உட்கார்ந்துவிட்டோம். வெடி வெடித்து புகை ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்கிறது, நாங்கள் மேலே  ஏறி உட்கார்ந்து கத்திக்கொண்டிருக்கிறோம், Correspondent அங்கிருந்து எல்லாவற்றையும் எங்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஒரு அட்டெண்டெரை அழைத்து, இரு lecturer உடன் சென்று அந்த மொத்த போரையும் அழைத்து வர சொல்லியிருக்கிறார் . இவர்கள் ஒரு சுமோவில் கிளம்புவதற்கு முன்பு எங்கள் பஸ் கிளம்பிவிட்டது. வெடி வைத்த Jebasingh, எதிரே வந்த கோவில்பட்டி பஸ்சில் ஏறி சென்றுவிட்டான். எல்லோருடைய கண்ணும் சிவகாசி செல்லும் பஸ்சின் மீதே இருந்தது.

நாங்கள் பயணம் செய்யும் பேருந்து வேகமாக செல்ல பின்னாலேயே சுமோவில் காலேஜ் ஆட்கள் எங்களை துரத்திவந்து பஸ்ஐ overtake செய்து சுமோவை நிறுத்தினார்கள். கிட்டத்தட்ட விஜயகாந்த் பட சேசிங் போல நடந்தது.  

மேலே உள்ளவர்களை அப்படியே ஒவ்வொருவராக கீழே இறங்கசொல்லி அனைவரது பெயரையும் எழுதிக்கொண்டார்கள். லிஸ்டில் உள்ள அனைவரும் செமஸ்டர் லீவ்  முடிந்து திரும்பும்போது parents ஐ கூட்டிவரவேண்டும் என்று சொல்லி வேறு ஒரு பஸ்சில் அனுப்பிவைத்தார்கள். இங்கே குறிப்பிட வேண்டிய ஒரு பெயர் கருடன். இவன் காலேஜ் ஸ்டாப்க்கு இரண்டு ஸ்டாப் முன்பே ஏறி ஜன்னல் ஒர சீட்டில் உட்கார்ந்துகொண்டு வந்தவன், நாங்கள் மேலே ஏறியவுடன், "மாப்ள கருடா மேல வா" "மச்சான் மேல வா" என்று கத்த, அவனும் ஜன்னல் வழியாகவே மேலே ஏறி வந்து இப்போது லிஸ்டில் இடம் பிடித்து விட்டான். உண்மையில் பட்டாசு வைத்தவன் கோவில்பட்டி சென்றுகொண்டிருக்க நாங்கள் அனைவரும் மாட்டிவிட்டோம். கத்தியது, பட்டாசு வெடித்தது, மேலே பயணித்தது என்று எல்லா குற்றமும் எங்கள் மீது சுமத்தி அனுப்பிவைக்கப்பட்டோம்.

லீவ் முடிந்து திரும்பி வந்தோம், யாரும் parents ஐ கூட்டி வரவில்லை. அவர்களும் வகுப்புக்கு எங்களை அனுமதிக்கவில்லை.  இந்த விஷயம் தெரிந்து என் அப்பா காலேஜ்க்கு வந்தார், principal இடம் இனிமேல் செய்யமாட்டான் என்று எழுதி கொடுத்துவிட்டு, என்னிடம் "எத்தன கரண்ட் கம்பி மேல போகுது.....இனிமே பஸ்சு  மேலே எல்லாம் ஏறாதே" என்று மட்டும் சொல்லிவிட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு போனார். இருப்பினும் நிர்வாகம் என்னையோ மற்றவர்களையோ classசுக்கு அனுமதிக்கவில்லை. இப்படியே இரண்டு வாரம்  சென்றது, காலையில் வருவோம் பிரின்சிபால் ரூம் முன்பு நிற்போம் சாயங்காலம் ஆனவுடன் ஹாஸ்டலுக்கு   போய்விடுவோம்.மூன்று professor கொண்ட குழு ஒன்று ஏற்படுத்தி அவர்களை விசாரித்து அறிக்கை தர சொன்னார் Correspondent, அவர்களும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விசாரித்தனர், போர் அடிக்கும் போதெல்லாம் வந்து விசாரித்தார்கள், வித விதமாக விசாரித்தனர், கடைசியில்  ஒரு லிஸ்டஐ  மேனேஜ்மெண்ட்டிடம் கொடுத்தார்கள். அவர்களும் எங்களிடம் ஒரு மெமோ கொடுத்தார்கள். இந்த சம்பவம் நடந்தது 23 December 2000.  இவர்கள் விசாரித்து மெமோ கொடுத்தது     19 January 2001. மெமொவில் பலரை விட்டுவிட்டு ஒரு பத்து பேரை மட்டும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு punishment கொடுத்திருந்தார்கள். Category A வுக்கு 5 நாள் suspend, category  B க்கு 500 ருபாய் பைன் போட்டிருந்தார்கள். Category A வில் வந்தவர்கள் ஜாலியாக வீட்டுக்கு சென்றுவிட்டனர். நான் Category B, Category A வில் வந்திருக்கலாமே என்ற ஏக்கத்துடன்  500 ரூபாயை கட்டிவிட்டு Classசுக்கு சென்றேன்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இதற்க்கு மூல காரணமான Jebasing  பெயர் எங்குமே அடிபடவில்லை, நாங்களும் காட்டிக்கொடுக்கவில்லை.  மாட்டியதற்காக வருத்தப்படவும் இல்லை