Friday, September 14, 2007

விநாயகர் சதுர்தி - ஒரு நேரடி ரிபோர்ட்

இடம் : பாண்டிபஜார்
நேரம் : மாலை 6.30

விநாயகர் சதுர்தியை முன்னிட்டு மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. திரும்பிய பக்கமெல்லாம் விதவிதமான விநாயகர் சிலைகள். 30 ரூபாயில் இருந்து 2500 ரூபாய் வரை களிமண்ணால் ஆன சிலைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அனைத்து கடை படிகளையும் தனது சிம்மாசனமாக்கி விநாயகர் அமர்ந்திருந்தார். ஷார் ஆட்டோபோல் ஒரே இருக்கையில் பல விநாயகரும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. விநாயகர் சிலைக்கு அருகிலேயே ஒருவர் குண்டுமணி வைத்துக்கொண்டு நிற்கிறார். சிலை வாங்குவோர் ஒவ்வொருவரும் இவரிடத்தில் ஒரு குண்டுமணி ஒரு ரூபாய் என இரண்டு, மூன்று வாங்கிச் செல்கிறார்கள். குண்டுமணி எதற்கு என விசாரித்தால், அதுதான் பிள்ளையாரின் கண்களாம். கண் இருக்கும் இடத்தில் இதை பதித்தால் சற்றே விநாயகர் கூடுதல் உயிரோட்டமாக தெரிவதென்னவோ உண்மைதான்.

அருகிலேயே பிள்ளையார் குடை வேறு விற்கிறார்கள். 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை விற்கிறது. கையில் பத்து குடை வைத்துக் கொண்டு இருக்கும் ஒருவர், ‘இந்தா சார், மழை பேஞ்சாக்கூட நனையாத குடை, வாங்கிட்டு போ சார் ஒண்ணு’ என்று சத்தம் போட்டு விற்க, அவரை கடந்து செல்பவர்கள் முகத்தில் ஒரு சிரிப்பலை. சரி விநாயகரும், குடையும் வாங்கிக்கொண்டு நகர்ந்தால், நாலைந்து சிறுவர், சிறுமிகள் ‘இந்தா அண்ணே, பிள்ளையார், குடை வாங்கிட்ட, 2 ரூபாய்க்கு மாலை வாங்கிக்கண்ணே’ என்று பின்தொடர்கிறார்கள். இவர்களிடம் இருந்து தப்பித்தால் இன்னொரு சிறுவர் படை தோரணங்களோடு நம்மை சூழ்ந்து கொள்கிறார்கள்.

வருடம் முழுவதும் வணங்கினாலும் வருடத்தில் ஒரு நாள் மட்டும், தங்களுக்கு இருக்கும் வேலை பளுவையும் ஒதுக்கிவைத்துவிட்டு, விநாயகர் சிலை, குடை, தோரணம், மாலை என அனைத்தையும் வீட்டுக்கு வாங்கிச்சென்று பின்னர் அதே விநாயகாரை தண்ணீரில் கரைத்து வணங்கும் முறை சற்றே விநோதமாக தோன்றினாலும், காலாகாலமாக பழகிப்போன மக்களுக்கு இதுவும் ஒரு அற்புதமான வழிபாட்டு முறையே. மேலும் படங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும். புகைப்படங்கள் எடுப்பதை பார்த்துவிட்டு பலரும் ‘என்ன சார் பிரஸ்சா?’ என்று கேட்டபோது, ‘இல்லை’ என்று சொன்னாலும், உள்ளுக்குள் ஓர் அசட்டுத்தனமான மகிழ்ச்சி ஏற்பட்டதென்னவோ உண்மைதான்.

No comments: