Friday, October 26, 2007

நான் ரசித்த பழமொழிகள்......

எப்படி கதை, கவிதை, கட்டுரை, இலக்கியம் போன்றவை ஒரு மொழியின் வளர்ச்சியில் இன்றியமயாத இடத்தைப் பெறுகிறதோ, அதே போன்ற ஒரு முக்கிய இடம் பழமொழிக்கும் உண்டு. ஆனால், கதை, கட்டுரை போல, காலத்திற்கேற்ப பழமொழி தன்னை புதுப்பித்துக் கொள்ளாதது ஒரு வருத்தமே. ஏதோ ஒரு காலத்தில் மக்கள் வழக்கத்தில் உருவாக்கிய பழமொழியே இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. சில நேரங்களில், SMSல் வரும் தத்துவங்களும், சினிமாவில் வரும் punch டயலாக்குகளும் தான் உருமாறி இருக்கும் நவீன பழமொழியோ அல்லது அவற்றுக்கு நாம் அந்த அந்தஸ்த்தை கொடுக்கவில்லையோ என்று கூட தோன்றும். சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது என்பது தான் பழமொழியின் சூத்திரம். சில பழமொழிகள் நகைச்சுவை என்னும் அரிதாரத்தை பூசிக்கொண்டு, படிக்கும் போது கூடுதல் சுவை தரும்.
இங்கே நான் காலத்தால் உருமாறிப் போன இரு பழமொழியின் உண்மையான விளக்கத்தை சொல்ல விரும்புகிறேன்.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானாய் வளரும்.
நான் ஒரு பெண்ணை திருமணம் செய்கிறேன். என்னை திருமணம் செய்தவுடன், என் குடும்பத்தில் ஒரு அங்கமாக அவள் மாறினாலும், பிறப்பால் இன்னொரு குடும்பத்தை சேர்ந்தவள் தான் என் மனைவி. அவள் கர்பமாக இருக்கும்போது, அவளை நான் ஊட்டசத்து மிக்க உணவுகளை கொடுத்து வளர்க்க வேண்டும். அதாவது இன்னொரு வீட்டுப் பெண்ணான/பிள்ளையான அவளை நான் ஊட்டி வளர்த்தால்தான் அவள் வயிற்றில் இருக்கும் என் பிள்ளை தானாக வளரும். இவ்வளவு அற்புதமான கருத்தின் சுருக்கம் தான் இந்த பழமொழி.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை
இங்கே பூதம் என்பது பஞ்ச பூதங்களாகிய நீர், நிலம், காற்று, அக்னி, ஆகாயம் ஆகியவற்றை குறிக்கும். கிணறு வெட்டும் போது, முதலில் நிலத்தின் உள்ளேயிருந்து, மண் வெளிவரும். மண்ணை எடுக்க எடுக்க வெகு நாட்களாக உள்ளே இருந்த காற்றானது வெளியேறும். குறிப்பிட்ட அளவு வெட்டியபின்பு, அடியில் இருந்து ஊற்றின் வழியாக நீர் வெளிவரும். அந்த நீரானது, தெளிவில்லமல், கலங்கலாக இருக்கும். அந்த நீரின் மீது, சூரியனுடைய(அக்னி) கதிர்கள் பட்டு, அந்த தண்ணீர் தெளிவு பெறும். தெளிந்த நீரின் மீது ஆகாயத்தின் பிம்பம் அற்புதமாய் தெரியும். இதன் சுருக்கம் தான் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை.

எனக்குப் பிடித்த சில பழமொழிகள்...
 • அவசரதுக்கு அண்டாக்குள்ளே கை நுழையாது.
 • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
 • உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது.
 • உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
 • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
 • கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
 • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
 • தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
 • கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
 • அவிசாரி ஆனாலும் முகராசி வேணும் , அங்காடி போனாலும் கைராசி வேணும்.
 • ஓய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்

4 comments:

Gowri Shankar said...

அருமையான தொகுப்பு. மேலும் பல நகைச்சுவையான பழமொழிகளை நினைவுகூர்ந்து, அடுத்த பதிவில் போடவும்.

jaya said...

"வெட்டின கைக்கு சுண்ணாம்பு தரமாட்டான்" - சுயநலத்திற்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் பழமொழி. இதே போல், கிராமங்களில் நிறைய பழமொழிகள் இன்னும் வழக்கில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன!

Gowri Shankar said...
This comment has been removed by the author.
Gowri Shankar said...

"அடியே-னு கூப்பிட ஆத்துக்காரி இல்ல, குழந்தை பேரு கோபாலகிருஷ்ணணாம்"

"கோணா மாணா பொண்டாட்டி, மாணிக்கம் போல குழந்தை பெத்தாளாம்"

"ஏன்டா ராமா கல்யாணம் பண்ணிக்கலை-னு கேட்டா, நீயே பொண்டாட்டியா இரு-னு சொன்னானாம்"

ராஜா, மேற்கண்ட பழமொழிகளுக்கு விளக்கம் தர முடியுமா?? ;)