Friday, November 16, 2007

கடவுளே...இது சரிதானா?

மனிதன் இன்றைக்கு எதையும் எளிதில் நம்புவது கிடையாது, சாதாரண ஒரு கைக்குட்டை வாங்குவதற்கு கூட பல கடைகள் ஏறி இறங்கிய பின்புதான் வாங்குகிறான். உலகில் நடக்கும் அத்தனை பித்தலாட்டங்களும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளதால் எதையும் சந்தேக கண்கொண்டு பார்த்து பழகிவிடான். ஒரு நகரத்தில் உஷார் நிலை பிரகடனபட்டுள்ளது போல் தன்னை எப்போதும் தற்காத்து கொள்வதிலேயே கவனமாக இருக்கிறான். கண்ணால் பார்க்காமல் எதையும் நம்ப மறுக்கும் மனிதன் நம்பும் ஒரே விஷயம் கண்ணனுக்கு தெரியாத கடவுளை மட்டுமே. எந்த மதத்திற்கும் இல்லாத ஒரு சுதந்திரம் இந்து மதத்திற்கு உண்டு. கடவுளை நீ எப்படி விரும்புகிறாயோ அப்படி வழிபடலாம். நான் முருகனை பழனி மலை படிக்கட்டில் ஏறிச்சென்று பல முறை வழிபடிருகிறேன். திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து சிவனை வழிபடிருகிறேன். இருமுடி கட்டி சென்று ஐயப்பன்னை வழிபடிருகிறேன். ஆனால் உடம்பை கடுமையாக வருத்திக்கொண்டு நான் வழிபட்டதில்லை அதில் எனக்கு உடன்பாடுமில்லை.

சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் Pothys அருகே நான் கண்ட காட்சி சற்றே அதிரவைத்தது. ஒரு பக்தர் தன் முதுகில் அலகு குத்திக்கொண்டு ஆட்டோவை இழுத்துச்சென்றார். பக்தரை சுற்றி இருந்த சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒரு நிமிடம் திகைத்து நின்றுவிட்டனர். என் அருகில் இருந்த ஒரு பெண் சற்றே கண் கலங்கிவிட்டார். போலீசார் அனைத்து பக்கமும் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி அவருக்கு வழிவிட்டனர்.

இது எந்த வகையான பக்தி? இந்த முரட்டு பக்தியை இறை நம்பிக்கை உள்ள என்னால் நிச்சயம் கேலி செய்ய இயலாது, அப்படியே கேலி செய்தாலும் இன்னொருவர் 16கி.மீ கிரிவலம் வருவது எந்த வகை என்று என்னை பார்த்து நகைக்ககூடும். அதே சமையம் என்னால் இதை மேலோட்டமாகவும் எடுத்துக்கொள்ள முடியாது.

ஒரு பக்கம் மது கடைகளில் "சாமிக்கு தனி கிளாசில் மது உண்டு" எனும் விளம்பரத்தை பார்கிறேன், அங்கே கூட்டதையும் பார்கிறேன். இன்னொருபுறம் தீ மிதிப்பதையும், தலையில் தேங்காய் உடைக்கும் விழாவையும், ஆட்டோ இழுப்பதையும் பார்கிறேன். இது இரண்டிற்கும் நடுவில் எது சரி எது தவறு என்று உறுதியாக தெரியாத நிலையில் என்னை பார்கிறேன் . ஆனால் வழிபாடு செய்வதிலும் ஒரு லாஜிக் இருக்கவேண்டும். ஓவிய போட்டியில் முதல் பரிசு வாங்குவதற்கு விரல்களை காணிக்கையாக்க கூடாது. அதற்கு பெயர் பக்தியல்ல முட்டாள்தனம். அதே நேரத்தில் காணிக்கை கொடுக்காமல் பலனையும் எதிர்பார்ககூடாது. அதற்கு பெயர் புத்திசாலித்தனம் அல்ல. ஆக முதலில் Self-Evaluation என்று சொல்லப்படும் தன்னாய்வு சோதனைக்கு எல்லோரும் தங்களை முதலில் உட்படுத்திகொள்ளவேண்டும். தன்னாய்வு மேற்கொள்ளும்போது ஆன்மீகத்தோடு சற்றே அறிவியலையும் கலந்து முடிவு எடுக்க வேண்டும், காரணம் ஆட்டோ இழுப்பது ஒன்றும் பாரம்பரியமாக வந்த வழிபாடு முறை கிடையாது யாரோ இடையில் புகுத்தியிருக்க வேண்டும். அந்த காலத்தில் கடும் தவம் இருந்தே கடவுளை நேரில் பர்த்தவர்களுண்டு என்பதை நினைவில்கொள்ளவேண்டும். என்னை பொறுத்த வரையில் உன்னை உணர்ந்துகொள்வதே பாதி கடவுளை அடைந்ததற்கு சமம்

விடை விடாது உகந்த விண்ணவர் கோவே
வினையனேனுடைய மெய்ப் பொருளே
முடை விடாதடியேன் மூத்தற மண்ணாய்
முழுப் புழுக் குரம்பையிற் கிடந்து
கடை படா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணை மா கடலே
இடை விடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவது இனியே.
-- திருவாசகம்

ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.
-- திருமுறை

No comments: