Wednesday, March 05, 2008

திசைகாட்டி

நாம் சினிமாவில் பார்க்கும் கதாநாயகனின் குணாதிசயங்களோடு ஒருவரை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்? அவரே நம் நெருங்கிய சொந்தமாக இருந்தால்? அப்படிப்பட்டவர் தான் என் மாமா திரு அ.சொ. அண்ணாமலை. 10 வயதில் விடுமுறைக்கு எங்கள் ஆயா வீட்டிற்கு செல்வது வழக்கம், அப்போது பயந்துபோய் மாமாவை பார்த்த நான் இன்று வியந்து பார்க்கிறேன். ஒரு மனிதனால் இப்படி ஒரு தன்னலமற்ற வாழ்க்கையை வாழ முடியுமா? இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள், என் மாமாவை பொறுத்த வரையில் அது இடது கையிலே கொடுத்த விரல்களை தவிர மற்ற விரல்களுக்கு கூட தெரியாது. நல்லெண்ணம் , நேர்புத்தி, நிறைசெயல், திடமான மனம், ஆரோக்கியமான அரசியல் -- இதுதான் என் மாமா.

சிறுவயதில் எனக்கு மணி பார்க்க தெரியாது, என் அம்மா மணி பார்க்க சொன்னால், முகப்பில் உள்ள மிகப்பெரிய கடிகாரத்தில் சின்ன முள் மற்றும் பெரிய முள் எங்கு இருக்கிறது என்று பார்த்து சொல்லுவேன். ஒருமுறை என் மாமா எத்தனை நாளைக்குத்தான் இப்படி மணி பார்க்க தெரியாம இருப்ப என்று சொல்லி, ஒரு டைம் பீஸ்ஐ எடுத்து வந்து, புரியாமல் முழித்த என் தலையில் இரண்டு கொட்டு கொட்டி சொல்லிக்கொடுத்தார். அன்று அவரிடம் கற்றுகொண்டதுதான் இன்று வரை எனக்கு காலத்தை புரிந்து கொள்ள உதவுகிறது.

எங்கள் ஆயா வீட்டில் அடிக்கடி பாம்பு வரும். எங்கே பாம்பை பார்த்தாலும் நாங்கள் அழைப்பது எங்கள் மாமாவைதான். ஒரு பெரிய கூர்மையான ஈட்டி ஒன்று வைத்திருப்பார், அதை வைத்து அந்த பாம்பின் தலையில் குறி பார்த்து குத்துவார். பாம்பை பார்த்து பயந்து நடுங்கும் என் முன்பு ஒருவர் பாம்பை இப்படி வதம் செய்தால் எப்படி இருக்கும்?
செட்டிநாட்டு வீடுகளுக்கே உண்டான பிரம்மாண்டத்திற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத மிகப்பெரிய வீடு அது. கொட்டகையில் இருந்து toilet செல்ல வேண்டுமென்றால் இடையில் உள்ள கூடம், ஆல்வீடு, முகப்பு தாண்டித்தான் செல்ல வேண்டும், கிட்டத்தட்ட 1 பர்லாங் இருக்கும். இரவிலே பயந்து பயந்து toilet சென்றால் அங்கே மாமா தலையிலே ஒரு தலைப்பாகை கட்டிக்கொண்டு சுருட்டு பிடித்துகொண்டிருபார். இருட்டிலே நடக்கவே பயப்படும் எனக்கு, அங்கே தனியாக சுருட்டுடன் நிற்கும் மாமா அதிசயமாகவே தோன்றுவார்.

அவர் குளித்துக்கொண்டிருந்தார், ஆல்வீடில் ஆயாவுக்கு அன்று உடல்நிலை மிகவும் மோசமானது, குளியலறை கதவை தட்டி செய்தியை சொன்னோம். உடனே வேகமாக வந்து பார்த்தார், ஆயாவின் தலையை தன் மடியில் வைத்துக்கொண்டார். என் ஆயாவின் உயிர் பிரிந்தது. எத்தனை தாய்க்கு சாகும் தருவாயில் பிள்ளையின் மடி கிடைக்கும்? எத்தனை பிள்ளைக்கு தாய் சாகும்போது தலைமாட்டில் இருக்க கொடுத்துவைக்கும்? அவர்கள் இருவருக்குமே இது சாத்தியமாயிற்று. பூர்வ புண்ணியம் என்பது இங்கேதான் தலைகாட்டுகிறதோ?

நேர்மையாக, தன்னம்பிக்கையுடன், தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் மனிதர்கள் எப்போதுமே ஆச்சரியமானவர்கள். இவர்களிடம் பொய்யிருக்காது, புரட்டிருக்காது, தன்னலமிருக்காது. வாழும் போது மகாத்மாவாய் வாழ்ந்தவர், இன்றைக்கும் எனக்கு போதிமரமாய் இருப்பவர்.
KEYWORDS: A.S.Annamalai Chettiar, அ.சொ.அண்ணாமலை செட்டியார், Melaisivapuri, அ.சொ, கற்பக விலாஸ் , மேலைச்சிவபுரி.

2 comments:

mohanasundaram said...

அன்பிற்கினிய ராஜா.
தற்செயலாக உங்கள் மின்தளம் பார்த்தேன்.மகிழ்ந்தேன்.வாழ்க.
ஆயா.அம்மான்மார் பாசம் அளவிடற்கரியது.

அ.சொ.அ. அவர்களின் புகைப்படம் இன்னும் தெளிவாக வெளியிடலாம்.

உங்கள் எழுத்திலும் நடையிலும் தேர்ந்த தெளிவிருக்கிறது. உங்கள் எர்ணாகுளம் மாமா பார்த்தால் மகிழ்வுறுவார்கள். நிற்க!

நினைவிருக்கிறதா?

கடல் நீரே குடிநீராய்
மாறிப்போனால்
அடி நீரைத்தேடி
எந்த அரசாங்கம்
செலவு செய்யும்

என்ற கண்ணதாசன் வரிகள்.?

Nilofer Anbarasu said...

@ mohanasundaram ...
பதிவை படித்தமைக்கும், மறுமொழி இட்டதற்கும் ரொம்ப நன்றி அண்ணே.

//அ.சொ.அ. அவர்களின் புகைப்படம் இன்னும் தெளிவாக வெளியிடலாம்.// அ.சொ.அ மாமாவின் வித்தியாசமான புகைப்படம் ஒன்று தேடிக்கொண்டிருக்கிறேன்,கிடைத்தவுடன் தற்ப்போது உள்ளதை மாற்றிவிடுகிறேன்.