Thursday, April 03, 2008

தமிழ் தானாய் வளரும்.....

தமிழ் மொழி எந்த அளவுக்கு லாவகமாக வருகிறதோ அந்த அளவுக்கு மக்களின் கவனத்தை நம் பக்கம் திருப்பமுடியும் என்பது ஒரு வரலாற்று உண்மை. தமிழ் மொழியை அழகாக கையாள தெரிந்தால் பொது வாழ்கையில் முன்னேறுவது எளிது என்பது ஒரு சூத்திரமாகவே மாறியுள்ளதால், இன்றுவரை எந்த கட்சியும் அமைப்பும் அதை விட்டு வெளியே வர மறுக்கின்றன. தமிழ் மொழி எப்போது தோன்றியது என்பது யாருக்கும் தெரியாது. அதன் வயது சுமார் 2000 ஆண்டுகள் என கணக்கிட்டுள்ளனர். இதுநாள் வரையில் அது தானாகவே தன்னை காத்துவந்துள்ளது.

மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எந்த ஒன்றுமே இந்த பூமியில் நிலைத்து நிற்க முடியாது. ஆதிகாலத்தில் மனிதன் உடம்பில் இலையை கட்டிக்கொண்டு வாழ்ந்துவந்தான். ஆனால் இன்று நாம் நாகரிக உடைகளை அணிகிறோம். இது ஒரு பரிணாம வளர்ச்சி. ஆதிகாலத்தில் அவன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தான் என்று சொல்லி இப்போது நாம் அப்படி வாழமுடியாது. வாழவும் கூடாது. தமிழ் மொழியும் பல காலகட்டத்தில் பலவாக மருவி வந்துள்ளது நமக்கு தெரியும். என் தாத்த பாட்டி பேசியது தூய தமிழ், என் பெற்றோர்கள் பேசுவது தமிழ், இப்போது நான் பேசுவது ஆங்கிலம் கலந்த தமிழ். இது ஒரு உருமாற்றமே தவிர அழிவல்ல.

அண்மையில் மக்கள் தொலைகாட்சி செய்தியை கேட்டபோது எனக்கு பாதி செய்தி புரியவே இல்லை. காரணம், தேவையே இல்லாமல் பல வார்த்தைகளை தமிழ் படுத்தியதுதான். உதாரணத்திற்கு, lorryயும் Jeepபும் மோதிக்கொண்டது என்பதை "மூடுந்தும் சீருந்தும் மோதிக்கொண்டது" என்று வாசிக்கிறார்கள். இப்படி உச்சரிப்பதால் என்ன பயன்? ஒருவருடன் பேசும்போது இதுபோன்ற வார்த்தைகளை practicalலாக நம்மால் கடைபிடிக்க முடியுமா? இப்படி பேசினால் எத்தனை பேர் புரிந்துகொள்வார்கள்?. Lorry, Computer, Shirt, Pant, Shoe போன்ற வார்த்தைகள் தமிழில் கலப்பதால் தமிழ் மொழி தனித்தன்மையை இழந்துவிடும் என்று நினைப்பது அதிக வெயில் அடித்தால் கடல் தண்ணீர் வற்றிவிடும் என்று நினைப்பதற்கு சமம்.
Language is a process of free creation; its laws and
principles are fixed, but the manner in which the principles of generation are
used is free and infinitely varied. Even the interpretation and use of words
involves a process of free creation--Noam Chomsky
ஆங்கில வார்த்தைகளே இல்லாமல் வசனம் எழுதி சமிபத்தில் வாழ்த்துக்கள் என்று ஒரு படம் தமிழில் வந்தது. அந்த படம் எந்த அளவுக்கு வெற்றிபெற்றது என்பதை நான் சொல்ல தேவையில்லை. சில தமிழாக்கம் அபத்தமாக இருக்கிறது, ஒரு வலைப்பதிவில் firefox browser "நெருப்பு நரி" என்றும் debit கார்டு செலவட்டை என்றும் UPS தடங்கலில்லா மின் வழங்கி (த.மி.வ ) என்றும் குறிப்பிட்டுள்ளனர். என்ன கொடுமை சார்? டீ கடையை தேநீர் அகம் என்றும் Cellphone கைபேசி என்றும் தமிழாக்கம் வேண்டுமானால் செய்யலாம் ஆனால் நடைமுறையில் அதை கடைபிடிக்கமுடியாது. இப்படி நடைமுறையில் சாத்தியமே இல்லாத போது எதற்காக இத்தனை சிரத்தை எடுத்து இப்படி தமிழ்ப்படுத்த வேண்டும்?.

ஏற்கனவே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி ஒரு தலைமுறையையே ஹிந்தி படிக்காமல் வளர்த்தாகிவிட்டது. ஹிந்தி தெரியாமல் வடமாநிலங்களுக்கு வேலைக்கு போய் நம்மவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அங்கு போய் பார்த்தல் தெரியும். ஆங்கிலத்தை அனுமதித்த நீங்கள் ஏன் ஹிந்தியை அனுமதிக்கவில்லை?. உலக மொழியான ஆங்கிலத்தை பயிற்று மொழியாக ஏற்றுக்கொண்ட நீங்கள் ஏன் தேசிய மொழியான ஹிந்தியை எதிர்கிறீர்கள்?. இன்னொரு மொழியை எதிர்ப்பதாலும் பிறமொழி சொற்கள் கலக்காமல் பாதுகாப்பதும் தமிழை வளர்க்காது, கல்லூரிகளில் girls boys பேசவிடாமல் குண்டர்களை போட்டு தடுப்பதால் கலாச்சாராம் வளராது, தமிழில் பெயர் வைப்பதால் படத்தின் தரம் உயராது, குழந்தைக்கு தமிழில் பெயர் சுட்டுவதால் அது புலவர் ஆகாது, தமிழில் அர்ச்சனை செய்வதால் தெய்வம் நேரில் வராது. இப்படி செய்வதால் தமிழும் கலாச்சாரமும் ராக்கெட் வேகத்தில் வளர்ந்தும்விடாது, செய்யாவிட்டால் தேய்ந்தும் விடாது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ் புத்தகங்கள் நிறைய விற்பதாக புள்ளி விபரங்கள் சொல்லுகின்றன. நல்ல எழுத்தாளர் வருகிறார் என்றாலோ நல்ல பேச்சாளர் வருகிறார் என்றாலோ அவர் சார்ந்து இருக்கும் அமைப்பை தாண்டியும் அவரது தமிழை ரசிப்பதற்காக இன்றும் கூட்டம் கூடுவதை பார்க்க முடிகிறது. இவையெல்லாம் தமிழ் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான எடுத்துகாட்டுக்கள். தமிழ் மொழி ஒரு சுயம்பு, நீங்கள் வளர்க்கவேண்டாம் அது தானாய் வளரும்.
There are about 5 billion! languages in the world. Each of us
talks, listens, and thinks in his/her own special language that has been shaped
by our culture, experiences, profession, personality, mores and attitudes. The
chances of us meeting someone else who talks the exact same language is pretty
remote--Anonymous

10 comments:

கோவி.கண்ணன் said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...

//Lorry, Computer, Shirt, Pant, Shoe போன்ற வார்த்தைகள் தமிழில் கலப்பதால் தமிழ் மொழி தனித்தன்மையை இழந்துவிடும் என்று நினைப்பது அதிக வெயில் அடித்தால் கடல் தண்ணீர் வற்றிவிடும் என்று நினைப்பதற்கு சமம். //

எறும்பூர கல்லு தேயும், அடிமேல் அடி கொடுத்தால் அம்மியும் நகரும் என்று சொல்கிறார்கள்.

உங்கள் இடுகையின் நடுப்பொருள் தொட்டு, இது போன்ற கேள்விகளுக்கு முடிந்த அளவுக்கு பதில் சொல்லி இருக்கிறேன்.

பொறுமையாக படிக்க முடிந்தால் பயன்படலாம்.

http://govikannan.blogspot.com/2007/11/blog-post_15.html

http://govikannan.blogspot.com/2007/09/blog-post_7181.html

http://govikannan.blogspot.com/2007/07/blog-post_18.html

http://govikannan.blogspot.com/2006/05/blog-post_114767424348424355.html

http://govikannan.blogspot.com/2007/05/blog-post.html

ரவிசங்கர் said...

//தமிழில் அர்ச்சனை செய்வதால் தெய்வம் நேரில் வராது//

நல்ல தகவல். வேறு எந்தெந்த மொழிகளில் போற்றினால் கடவுள் வருவார்?

பூங்குழலி said...

இவ்வளவு அருமையான பதிவை தமிழில் எழுதிய நீங்கள் மேற்கோள்களை ஆங்கிலத்தில் எழுதவேண்டிய அவசியம் என்ன?

தமிழில் எழுதினால் புரியாதா?

மேற்கண்ட உங்களின் வராதா? வளராதா? போன்ற கேள்விகளில் உள்ள செயல்களை செய்தால் குறைந்தது தமிழில் மேற்கோள் கொடுக்கும் அளவுக்காவது சிந்திக்க முடியும்.இல்லையென்றால் மற்றவரின் கண்டுபிடிப்புகளில், சிந்தனைகளில் ஓட்டுன்னியாய் வாழ்ந்து கொண்டிருக்கவேண்டியதுதான் ....

இராம.கி said...

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்ற பாரதிதாசனின் முழுக்கத்தோடு உள்ள வலைப்பதிவுக்கு ஒரு தமிழ்ப்பெயர் கூட வைக்க முடியவில்லையா? "ராஜா சொக்கலிங்கத்தின் பார்வைகள்" என்று கூடச் சொல்ல முடியாதா? உங்கள் முழக்கத்தின் பொருளை உணர்ந்திருக்கிறீர்களா? அந்த "மங்காத" என்ற பெயரடை என்ன சொல்லுகிறது என்றாவது புரியுமா?

மக்கள் தொலைக்காட்சி மக்களைக் கவர்ந்து விட்டது என்ற காரணத்தால், அங்கு விளம்பரங்கள் கூடிவருகின்றன என்று அறிவீர்களோ?

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று யாரோ ஒரு முட்டாள் சொன்னானாம்.

அன்புடன்,
இராம.கி.

Raja said...

@ கோவி.கண்ணன்
நீங்கள் சுட்டிய அனைத்து இடுக்கைகளையும் பொறுமையாக படித்தேன். தனி பதிவிலேயே பதில் சொல்லுகிறேன்.

@ ரவிசங்கர்
//எந்தெந்த மொழிகளில் போற்றினால் கடவுள் வருவார்?//
உண்மையாக மனம் உருகி வேண்டினால் பலன் கிடைக்கும். மொழி முக்கியமல்ல...

@ பூங்குழலி
//....மேற்கோள்களை ஆங்கிலத்தில் எழுதவேண்டிய அவசியம் என்ன? தமிழில் எழுதினால் புரியாதா?//
என் ஆதங்கமே எதற்காக அனைத்தையும் தமிழ் படுத்த வேண்டும் என்பதுதான். Noam Chomsky சொன்னதை அப்படியே கொடுதிருக்கிறேன். இதை எதற்காக நான் தமிழ் படுத்த வேண்டும்.
//.....குறைந்தது தமிழில் மேற்கோள் கொடுக்கும் அளவுக்காவது சிந்திக்க முடியும்.இல்லையென்றால் மற்றவரின் கண்டுபிடிப்புகளில், சிந்தனைகளில் ஓட்டுன்னியாய் வாழ்ந்து கொண்டிருக்கவேண்டியதுதான் ....//
குழப்பமாகவும் ஒன்றுமே புரியாமலும் இருந்தால்தான் ஓட்டுன்னியாய் வாழவேண்டும், இந்த பதிவே சுயமாக சிந்திதத்தின் விளைவுதான்.

@இராம.கி
//பாரதிதாசனின் முழுக்கத்தோடு உள்ள வலைப்பதிவுக்கு ஒரு தமிழ்ப்பெயர் கூட வைக்க முடியவில்லையா? "ராஜா சொக்கலிங்கத்தின் பார்வைகள்" என்று கூடச் சொல்ல முடியாதா?//
நான் ஒரு தமிழன். தமிழ் எனக்கு பிடித்த மொழி. அதற்காக என் வலைப்பூ முழுவதும் தமிழில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நீங்களே உங்களுடைய ஒரு வலைபூவிற்கு "Muhappu" என்றுதானே பெயர் வைத்து இருக்கிறீர்கள், ஏன் "முகப்பு" என்று வைக்கவில்லை?

பூங்குழலி said...

/////....மேற்கோள்களை ஆங்கிலத்தில் எழுதவேண்டிய அவசியம் என்ன? தமிழில் எழுதினால் புரியாதா?//
என் ஆதங்கமே எதற்காக அனைத்தையும் தமிழ் படுத்த வேண்டும் என்பதுதான். Noam Chomsky சொன்னதை அப்படியே கொடுதிருக்கிறேன். இதை எதற்காக நான் தமிழ் படுத்த வேண்டும்.////


மன்னிக்கவும் உங்களின் வரையறையின்படி தமிழர்கள் என்றால் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலமும் தெரிந்திருக்கவேண்டுமென்று நான் அறிந்திருக்கவில்லை.
தமிழ் மட்டும் எழுதப்படிக்கத் தெரிந்த அரைத்தமிழர்களுக்கு உங்களின் தமிழ்ப் பதிவு முழுதாகப் புரியாது போய்விடுமோ என்ற அச்சத்தில்தான் அவ்வாறு கேட்க நேரிட்டது.
பொருத்தருள்க...

தங்கள் பதிவின் கருப்பொருளை நோக்கும்போது உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருக்கும் வேளையில் நீங்கள் நினைத்தாலும், இப்பதிவிற்கு வலு சேர்க்கக்கூடிய மேற்கோள்களை
தமிழில் சொல்ல (மொழி பெயர்க்க) இயல்பாய் முடிகிறதா என முயற்சித்துப் பார்க்கவும்.


தாய் மொழியில் இருந்து இரண்டாம் மொழிக்கு மொழிபெயர்க்கும்போது சில தடங்கல் வருவது இயல்பு.
ஆனால் இரண்டாம் மொழியில் இருந்து தாய் மொழிக்கு மாற்றும் போது அதே தொல்லை என்றால்......


செந்தமிழ் மட்டுமன்று எம்மொழியும் நாப்பழக்கத்தின் மூலமே வலுப்பெறுகின்றன.

மற்றபடி, மற்றுமொரு தமிழனாய் தானாய் சிந்தித்து (நானும் இன்றுவரை முயன்றுகொண்டிருக்கிறேன், இயலவில்லை) இப்பதிவு எழுதியமைக்கு வாழ்த்துக்கள்.

நன்றி...

புருனோ Bruno said...

http://kick-off.blogspot.com/2008/04/blog-post.html
http://kick-off.blogspot.com/2008/04/blog-post_05.html

// debit கார்டுஐ செலவட்டை என்றும் UPSஐ தடங்கலில்லா மின் வழங்கி//

//ATM -- தா.ப.வ (தானியங்கி பணம் வழங்கி),
A/C Chair Car (Train) -- குளிர்சாதன நாற்காலி வகுப்பு.
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், முதலில் நீங்கள் இந்த வார்த்தைகளைத்தான் உபயோகப்படுதுகிறீர்களா? அல்லது இந்த தமிழ் வார்த்தையை தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி வழக்கத்தில் கொண்டுவரமுடியும் என்று நம்புகிறீர்களா? சில வார்த்தைகளை அப்புடியே ஏற்றுக்கொள்ளுங்கள் அதனால் தமிழ் எந்த அளவும் பாதிக்கப்படாது என்று தான் சொன்னேன்.//

ஏன் ஐயா, இந்த வார்த்தைகளில் என்ன தவறு. தவறென்றால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறோம்.

ஆங்கிலம் தெரியாதவர் ஒருவருக்கு ஏ.சி.சி.சி என்றால் எப்படி புரியும். அதை தமிழில் சொன்னால் தானே புரியும்.

உங்களுக்கு தெரியுமா, சேக்ஸ்பியர் இருந்த காலத்தில் ஆங்கிலத்தில் இந்த வார்த்தைகள் எதுவும் கிடையாது. இவை எல்லாம் ஆங்கிலத்திற்கும் புது வார்த்தைகள் தான்

இவை எல்லாம் 20ஆம் நூற்றாண்டில் தான் ஆங்கிலத்தில் "புதிதாக" வந்த வார்த்தைகள். ஒரு நூற்றாண்டு மட்டுமே இவைகளின் வயது.

டெபிட் கார்ட் என்ற வார்த்தை தமிழகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளும் என்றால் செலவட்டை ஏன் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது

ஏ.டி.எம் என்பது ஆங்கிலத்திலும் புது வார்த்தை தான். ஐரோப்பாவின் ஏ.டி.எம் என்றால் யாருக்கும் தெரியாது geld automat தான். அவர்கள் ஏ.டி.எம் என்று சொல்வதில்லை. ஏன் தெரியுமா. அவர்கள் தங்கள் மொழியில் பேசுபவர்கள்.

புதிதாக வந்த ஆங்கில வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் புதிதாக வந்த தமிழ் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதேன் ??

ஏ.டி.எம் என்பதை தானியங்கி பணம் வழங்கி என்று தமிழில் சொல்வதற்கும், சேக்ஸ்பியர் என்பதை ஈட்டி ஆட்டு என்பதற்கும் நிறைய வேறு பாடு உள்ளது.

புருனோ Bruno said...

//ஏ.டி.எம் என்பதை தானியங்கி பணம் வழங்கி என்று தமிழில் சொல்வதற்கும், சேக்ஸ்பியர் என்பதை ஈட்டி ஆட்டு என்பதற்கும் நிறைய வேறு பாடு உள்ளது.//
புரியவில்லை என்றால் கூறுங்கள்.

ரவிசங்கர் said...

உங்கள் கடைசி இடுகையையும் பார்த்தேன். இது போன்ற பிதற்றல்களைப் பல இடங்களில் பார்த்துச் சலித்து மறுமொழிகள் எழுதுவதில் பயனில்லை என்று விட்டு விடுவதுண்டு. இங்கு உரையாடலைத் துவக்கி விட்டதால் முடித்தும் விடுகிறேன் :) உண்மையிலேயே அறியாமையினால் நீங்கள் இக்கருதுக்களைக் கொண்டிருந்தால் திருந்தலாமே என்ற நப்பாசை தான்.

* உங்கள் கருத்துக்களுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் - எல்லா தமிழர்களுக்கும் ஆங்கிலம் தெரியும் அல்லது தெரிய வேண்டும் என்ற அபத்தச் சிந்தனை. Noam Chomsky சீன அறிஞராக இருந்திருந்தால் அப்படியே சீன எழுத்துக்களில் பொன்மொழியை எழுதி இருப்பீர்களா? தமிழ்நாட்டில் ஒருவனுக்கும் புரியாது என்பதற்காகச் சீனத்தைத் தமிழாக்கும் போது 90% மக்களுக்குப் புரியாது என்பதற்காக ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்ககூடாதா?

atm, ac எல்லாம் மக்களுக்குப் புரியாதா என்று விதண்டாவாதம் வேண்டாம். இது ஒரு சிலச் சொற்களைப் பற்றிய உரையாடல் அல்ல.


ATMஐயாவது தடவிப் பார்த்துப் பொருள் புரிந்து கொள்ளலாம். Noam Chomsky போன்றவர்களின் கருத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ள ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களால் தான் இயலும். இத்தகையோர் தமிழ்நாட்டில் எத்தனை பேர்? தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு உயர்ந்த கருத்துக்களைக் கொண்டு சேர்க்க தமிழும், தமிழாக்கமும் தேவை. இல்லாவிட்டால், ஆங்கிலம் கற்றோருக்கே அறிவு என்றாகிவிடும். ATM போன்ற சொற்களைத் தமிழாக்குவது ஒரு தொடக்கமே. துறை தோறும் முழுமையாக தமிழாக்கித் தமிழ் வழிச் சிந்தனை, செயற்பாடுகளைப் பெருக்குவதே நோக்கம்.

* மனம் உருகி வேண்டினால் கடவுள் வருவார் என்கிறீர்கள். அருமை. எனக்குப் புரியாத மொழியில் எப்படி மனம் உருக முடியும்? அர்ச்சனை, பாடல்கள் என்பவை மன உருகலின் வெளிப்பாடுகள் தாமே? மனதில் தமிழில் உருகிவிட்டு அதை வெளிப்படுத்துவது புரியாத மொழியில் என்றால் வெற்று இரைச்சலுக்கும் அந்த புரியாத மொழிக்கும் என்ன வேறுபாடு? நமக்குப் புரியாவிட்டால் பரவாயில்லை, கடவுளுக்குப் புரியும் என்கிறீர்களா :) கடவுளுக்கு வேற்று மொழி புரியும் என்றால் தமிழ் புரியாதா :) எந்த மொழியில் பாடினாலும் கடவுள் வரமாட்டார் என்பது வேறு. கடவுளைப் பாட இந்த மொழியில் தான் பாட வேண்டும் என்று திணிப்பது வேறு.