Saturday, April 05, 2008

அன்புள்ள கோவி.கண்ணன் அவர்களுக்கு......

நீங்கள் இட்ட பின்னூட்டதிற்கு நான் அங்கேயே மறுமொழி கொடுத்திருக்க முடியும். நீங்கள் கொடுத்த சுட்டிகளை பொறுமையாக படித்தபோது, நிறைய சொல்லவேண்டும் என்று தோன்றியது, அதன் விளைவே இந்த பதிவு. நீங்கள் சுட்டிய உங்கள் பதிவுகள் அனைத்திலும் ஹிந்தியை எதிர்த்து உரக்க குரல் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றாக என்னுடைய இடுக்கையை இன்னொருமுறை படித்துப்பாருங்கள், நான் எந்த இடத்துலேயும் தமிழை வெறுக்கவும் இல்லை ஹிந்தி உட்பட எந்த மொழியையும் எதிர்க்கவுமில்லை. ஏன் அன்றாட வாழ்கையில் பின்பற்ற முடியாத போது எல்லா வார்த்தைகளையும் தமிழ் படுத்துகிறீர்கள் என்கிற ஒரு சிறு ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அந்த இடுக்கை.

எறும்பு ஊர கல்லும் தேயும் என்பதைப்போல் இப்படி மொழிபெயர்ப்பத்தின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் ஆங்கிலத்துக்கு மாற்றான அறிமுகப்படுத்தும் வார்த்தைகளை அறிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறீர்கள். அன்றாட வாழ்கையில் நாம் பயன்படுத்தும் இரண்டு ஆங்கில வார்த்தைகளையும் அதற்கு நிகராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளையும் எடுத்துகொள்வோம்.

ATM -- தா.ப.வ (தானியங்கி பணம் வழங்கி),
A/C Chair Car (Train) -- குளிர்சாதன நாற்காலி வகுப்பு.
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், முதலில் நீங்கள் இந்த வார்த்தைகளைத்தான் உபயோகப்படுதுகிறீர்களா? அல்லது இந்த தமிழ் வார்த்தையை தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி வழக்கத்தில் கொண்டுவரமுடியும் என்று நம்புகிறீர்களா? சில வார்த்தைகளை அப்புடியே ஏற்றுக்கொள்ளுங்கள் அதனால் தமிழ் எந்த அளவும் பாதிக்கப்படாது என்று தான் சொன்னேன்.

சரி நீங்கள் சுட்டிக்காட்டிய உங்களுடைய இடுக்கைகளுக்கு வருகிறேன்.
தமிழ்நாட்டில் ஹிந்தி நுழைந்திருந்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்
"சாருக்கான்களும், சல்மான்கான்களும் சென்னை வீதிகளில் போஸ்டர்களில் சிரிப்பார்கள், காங்கிரஸ் தலைவரோ, வாஜ்பாயோ வணக்கம் என்று தமிழில் தடுமாறிச் சொல்லி புழகாங்கிதம்
அடைய வேண்டி இருக்காது."
ஒரு மொழியை அனுமதித்தால் இதுதான் நடக்கும் என்று நீங்கள் சொல்லியிருப்பது எனக்கு விசித்தரமாக இருக்கிறது. ஒரு மொழியை கறப்பது என்பது அவர்களுடைய கலாச்சாரத்தை நாகரீகத்தை கற்பதற்கு சமம். ஒரு மொழியை வெறுத்து ஒதுக்குவது அம்மொழி பேசும் மக்களை மறைமுகமாக வெறுக்கிறோம் என்று அர்த்தம். அதைத்தான் இன்று கர்நாடகாவில் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
"இந்தி அறிந்தால் இந்தி சீரியல் / சினிமா பார்க்கலாம் என்ற பலனைத்தவிர மொழிவாரி மாநிலத்தவர் கண்ட பலன் வேறு எதுமில்லை" என்று சொல்கீறீர்கள்.
ஆங்கிலத்தில் Dan Brown எழுதிய Angels & Demons என்ற Novel படித்த போது, அந்த கதையில் எது கற்பனை எது நிஜ சம்பவம் என்று பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு அற்புதமாக இருக்கும். கிட்டத்தட்ட கல்கியின் பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் படிக்கும் போது கிடைக்கும் உணர்வு இதை படிக்கும் போதும் எனக்கு கிடைத்தது. ஹிந்தியும் மலையாளமும் படித்திருந்தால் இன்னும் எவ்வளவு இலக்கியங்களையும் நல்ல புத்தகங்களையும் படித்திருக்க முடியும் என்று எனக்கு அடிக்கடி தோன்றும். பலன் என்பது அவரவர் பார்க்கும் விதத்தை பொருத்தது. உங்களுக்கு வேண்டுமானால் மொழி அறிவு என்பது சினிமா பார்க்க மட்டுமே உதவுவதாக இருக்கலாம் ஆனால் பலருக்கு அப்படியல்ல.

"மாநிலங்களின் மொழியை விழுங்கி ஏப்பமிடவும், புறக்கணிக்கவும் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளும் இந்தி மொழிக் கொள்கை என்ன வகையான தேசிய வாதம் ?" என்று கேட்டுள்ளீர்கள்.
நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை வைத்துதான் ஒரு மொழி ஒரு இடத்தில் வளரும். 10 மொழிகள் தெரிந்திருந்தால் கூட நீங்கள் உங்கள் தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் கொடுப்பீர்கள், அப்புடியிருக்கும் போது ஹிந்தியை அனுமதித்தால் அது தமிழை விழுங்கி ஏப்பம் விடும் என்பதெல்லாம் நடக்காத காரியம்.
"உமக்கு பிடிகிறதே என்பதற்காக நானும் மற்றும் என்னைப் போன்ற
பலரும் ஏன் அந்த வேண்டாத ஒன்றை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவேண்டும் ?"
படித்தால்தானே அது வேண்டுமா வேண்டாமா என்கின்ற முடிவுக்கே வரமுடியும். படிக்காமலேயே வேண்டாம் என்பது சுவைக்காமலேயே கசக்கிறது என்று சொல்வது போல் இருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலத்தில் உள்ளவர்களும் உங்களை போல் தன் தாய்மொழியை தவிர வேறு மொழியை வேண்டாம் என்று சொன்னால் என்னவாகும்? மொழியை வேண்டாம் என்று சொல்லுவதுதான் பிரிவினைக்கான முதல் படி. நீங்கள் ஹிந்தியை எதிர்ப்பது போல் இன்று கர்நாடகாவில் அவர்கள் தமிழை எதிர்கிறார்கள். பிரச்சனைக்கு மூல காரணமே இதுதான்.

நீதிமன்றத்திலே தீர்ப்புகள் தமிழில்தான் எழுதவேண்டும் என்று போராட்டம் நடந்த போது, கண்ணதாசன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார்
"எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சுவை தமிழ்மொழிக்கு உண்டு, ஒரு வார்த்தையை பிரித்தால் ஒரு பொருள் தரும் சேர்த்தால் இன்னொரு பொருள் தரும். அப்படி இருக்கும் போது தீர்ப்பை எப்படி தமிழில் எழுத முடியும்? ஒரு நீதிபதி எழுதிய தீர்ப்பை என்னிடம் தாருங்கள்,
அதை மாற்றாமல் அதற்கு நேர் எதிர்மறையான பொருள் தரும்படி என்னால் வாசித்து காட்ட முடியும். ஆங்கிலேயர்களே சில முக்கியமான தீர்ப்புகளை french மொழியில் எழுதினார்களாம் காரணம் ஆங்கிலத்தை விட அந்த மொழியில்தான் ஒரு சொல் ஒரே பொருள்
தரும்."
என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆக கண்மூடித்தனமாக வேறு மொழிகளை எதிர்ப்பதை விட்டு, வரட்டு பிடிவாதத்தை தளர்த்தி வேற்று மொழிகளை சில இடங்களில் ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை என்பது என்னுடைய எண்ணம்.

ப்ரியமுடன்,
ராஜா

6 comments:

SP.VR. SUBBIAH said...

///ஆக கண்மூடித்தனமாக வேறு மொழிகளை எதிர்ப்பதை விட்டு, வரட்டு பிடிவாதத்தை தளர்த்தி வேற்று மொழிகளை சில இடங்களில் ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை என்பது என்னுடைய எண்ணம்.///

அதானே!
கோவி.கண்ணன் நோட் திஸ் பாயிண்ட்!

புருனோ Bruno said...

http://kick-off.blogspot.com/2008/04/blog-post.html
http://kick-off.blogspot.com/2008/04/blog-post_05.html

// debit கார்டுஐ செலவட்டை என்றும் UPSஐ தடங்கலில்லா மின் வழங்கி//

//ATM -- தா.ப.வ (தானியங்கி பணம் வழங்கி),
A/C Chair Car (Train) -- குளிர்சாதன நாற்காலி வகுப்பு.
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், முதலில் நீங்கள் இந்த வார்த்தைகளைத்தான் உபயோகப்படுதுகிறீர்களா? அல்லது இந்த தமிழ் வார்த்தையை தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி வழக்கத்தில் கொண்டுவரமுடியும் என்று நம்புகிறீர்களா? சில வார்த்தைகளை அப்புடியே ஏற்றுக்கொள்ளுங்கள் அதனால் தமிழ் எந்த அளவும் பாதிக்கப்படாது என்று தான் சொன்னேன்.//

ஏன் ஐயா, இந்த வார்த்தைகளில் என்ன தவறு. தவறென்றால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறோம்.

ஆங்கிலம் தெரியாதவர் ஒருவருக்கு ஏ.சி.சி.சி என்றால் எப்படி புரியும். அதை தமிழில் சொன்னால் தானே புரியும்.

உங்களுக்கு தெரியுமா, சேக்ஸ்பியர் இருந்த காலத்தில் ஆங்கிலத்தில் இந்த வார்த்தைகள் எதுவும் கிடையாது. இவை எல்லாம் ஆங்கிலத்திற்கும் புது வார்த்தைகள் தான்

இவை எல்லாம் 20ஆம் நூற்றாண்டில் தான் ஆங்கிலத்தில் "புதிதாக" வந்த வார்த்தைகள். ஒரு நூற்றாண்டு மட்டுமே இவைகளின் வயது.

டெபிட் கார்ட் என்ற வார்த்தை தமிழகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளும் என்றால் செலவட்டை ஏன் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது

ஏ.டி.எம் என்பது ஆங்கிலத்திலும் புது வார்த்தை தான். ஐரோப்பாவின் ஏ.டி.எம் என்றால் யாருக்கும் தெரியாது geld automat தான். அவர்கள் ஏ.டி.எம் என்று சொல்வதில்லை. ஏன் தெரியுமா. அவர்கள் தங்கள் மொழியில் பேசுபவர்கள்.

புதிதாக வந்த ஆங்கில வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் புதிதாக வந்த தமிழ் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதேன் ??

ஏ.டி.எம் என்பதை தானியங்கி பணம் வழங்கி என்று தமிழில் சொல்வதற்கும், சேக்ஸ்பியர் என்பதை ஈட்டி ஆட்டு என்பதற்கும் நிறைய வேறு பாடு உள்ளது.

புருனோ Bruno said...

//ஏ.டி.எம் என்பதை தானியங்கி பணம் வழங்கி என்று தமிழில் சொல்வதற்கும், சேக்ஸ்பியர் என்பதை ஈட்டி ஆட்டு என்பதற்கும் நிறைய வேறு பாடு உள்ளது.//
புரியவில்லை என்றால் கூறுங்கள்.

கோவி.கண்ணன் said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...

கோவி.கண்ணன் said...
திரு ராஜா,

மறுமொழி நீண்டுவிட்டதால் சுட்டியை இங்கே இணைக்கிறேன்.

Raja said...

எங்கோ படித்ததாக நினைவு....
"கலாசாரம் மாறுகிறது, நடை உடை பழக்கவழக்கம் மாறுகிறது ஏன் மொழி மட்டும் மணிமேகலையை போல் துறவு பூனவேண்டும்" என்று.
-- நிச்சயம் வரும்காலம் பதில் சொல்லும்.