Friday, July 25, 2008

புத்தக விலை

ஸ்கூலில் ஆறாவது ஏழாவது படிக்கும் போது தமிழ் துணைப்பாடத்தில் ஒரு எழுத்தாளனை பற்றிய அகிலனின் கதையில் ஆரம்பித்த வாசிப்பு பழக்கம், குமுதம், விகடன், புதிய பார்வை போன்ற புத்தகங்களின் வழியேயும், ஜெயகாந்தன், சுஜாதா, கண்ணதாசன், தி.ஜானகிராமன், பாலகுமாரன், சுரா போன்றோரின் மூலமும் வளர்ந்து இன்று வாசிப்புப் பழக்கம் என்பது மிகப்பெரிய ஆலமரம் போல் என்னுள் வளர்ந்து நிற்கிறது. புத்தக கடை வர வர ஏதோ ஒரு வசிய மருந்து போல் ஆகி வருகிறது. அதிக புத்தகங்களுடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ள shelf பார்த்தாலே போதை தலைக்கேறுகிறது. வாங்கி இன்னும் படிக்காத புத்தகங்களே நிறைய இருக்க வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகின்றன. விலையும் ஏறிக்கொண்டே போகின்றன. பதிப்பாளர்களின் முக்கிய நோக்கம் புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதாக இருக்கவேண்டும். ஆனால் விலையை பார்க்கும் போது அவர்கள் அதில் இருந்து லேசாக தடம் மாறிப் போய்க்கொண்டிருப்பதாக தோன்றுகிறது. புத்தக கண்காட்சியில் ஒவொரு வருஷமும் ஏறிக்கொண்டே போகும் ஸ்டால்களின் எண்ணிக்கையும், மக்கள் கூட்டமும், புத்தகங்களின் விற்பனையும் ஆரோக்கியமான தோற்றத்தை ஏற்படுத்தினாலும் விலையை குறைத்தால் இன்னும் பலரை சென்றடையும் என்பது நிதர்சனமான உண்மை.

விலைவாசி ஏற்றத்தையும், மூலப் பொருளான பேப்பரின் விலை ஏற்றத்தை காரணம் காட்டினாலும் இன்னும் மலிவான விலையில் சில பதிப்பகங்கள் புத்தகத்தை வெளியிட்டுக்கொண்டுதானே இருக்கின்றன. கண்ணதாசன் பதிப்பகத்தின் அனைத்து புத்தகமும் சராசரியாக 50 ரூபாயை ஒட்டியே இருக்கின்றன. கண்ணதாசனுடைய புத்தகங்கள் இன்றைக்கும் 15 ரூபாய்க்கு (எண்ணங்கள் ஆயிரம்) கிடைக்கிறது. ஆனால் இன்றைக்கு பல எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் சராசரியாக ரூபாய் 150ஐ தொடுகின்றன. கேட்டால் கனமான அட்டை தரமான பேப்பர் என்கிறார்கள், யாருக்கு வேண்டும் அட்டையும் பேப்பரும்? இழை, தட்டு என எதில் பரிமாறினாலும் நான் சாப்பிடப்போவது அதில் உள்ள உணவை மட்டுமே.

அல்லது ஒவ்வொரு புத்தகத்தையும் Low price edition என்று சொல்லி சுமாரான குவாலிட்டியில் சில பிரதிகள் போடுங்கள். வாங்குபவர்கள் தங்கள் வசதி / விருப்பத்திற்கேற்ப எது வேண்டுமோ அதை வாங்கிக்கொள்ளட்டும். சில எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தின் புத்தக விலையை பார்த்தாலே கண்ணை கட்டுகிறது. இதை விட கொடுமை, இந்த சூழ்நிலையிலும் தேடிப்போன புத்தகம் கிடைக்காமல் ஏதேதோ புத்தகத்தை எல்லாம் வாங்கி வருவதுதான். சரி, இவ்வளவு விலை விற்கிறதே வாங்குவதை குறைத்துக்கொள்ளலாம் என்றால் அது கனவிலும் முடியாத காரியமாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் வாங்க வேண்டிய புத்தகத்தின் பட்டியல் நீளுகிறதே தவிர குறைந்த பாடில்லை. வாங்க வேண்டிய பட்டியலில் தற்போது இருக்கும் புத்தகங்கள்.

தப்புத் தாளங்கள் -- சாரு நிவேதிதா.
ஊருக்கு நல்லது சொல்வேன் -- தமிழருவி மணியன்
படித்தேன் ரசித்தேன் -- கல்கி
கிழக்கு தூரமல்ல, அடிக்கல் -- ஜோ.மல்லூரி
புதுமைப்பித்தன் பற்றி -- இளசை மணியன்.
கடலோடி -- நரசய்யா
என் அன்புக் காதலா -- பாலகுமாரன்
ஒரு புளியமரத்தின் கதை -- சுந்தர ராமசாமி
மலர்மஞ்சம் -- தி.ஜானகிராமன்
etc.,
பட்டியலில் எக்சற்றாவை நன்றாக கவனியுங்கள். அடுத்த முறை சென்னை செல்லும் போது குறைந்தபட்சம் இந்த லிஸ்டில் இருந்து ஒரு 5 புத்தகங்களையாவது வாங்க வேண்டும். இதில் கடலோடியும், கிழக்கு தூரமல்ல புத்தகமும் நான் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கிடைக்காத காரணத்தாலோ என்னவோ அதன் மீதான என் மோகம் அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஆக மோகம் இருக்கும் வரை தேடல் இருக்கும், தேடல் இருக்கும் வரை நல்ல படைப்புகள் வந்துகொண்டே இருக்கும். ஆனால் விலை?

6 comments:

தாமோதர் சந்துரு said...

//இதில் கடலோடியும், கிழக்கு தூரமல்ல புத்தகமும் நான் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.\\
சென்னையில் தி.நகரில் உள்ள நியூ புக் லேண்ட்டில் கேளுங்கள். கண்டிப்பாக கிடைக்கும்.
அன்புடன்
சந்துரு

சித்தன் said...

//யாருக்கு வேண்டும் அட்டையும் பேப்பரும்? இழை, தட்டு என எதில் பரிமாறினாலும் நான் சாப்பிடப்போவது அதில் உள்ள உணவை மட்டுமே.//

ரிப்ப்பீட்ட்ட்ட்ட்ட்டே....

கோவை விஜய் said...

மலிவுப் பதிப்பு நல்ல யோசனை

செய்வார்களா?

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

கோவை விஜய் said...

please remove the word verification

கோவை விஜய்

R A J A said...

@Chandru,
நியூ புக் லேண்ட் பற்றி நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.....நிச்சயம் போய் பார்க்கிறேன்.
@ கோவை விஜய்,
I did not kept the word verification. Let me double check with my settings once more time.

R A J A said...

@Chandru,
நியூ புக் லேண்ட் பற்றி நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.....நிச்சயம் போய் பார்க்கிறேன்.
@ கோவை விஜய்,
I did not kept the word verification. Let me double check with my settings one more time.