Wednesday, August 27, 2008

அமெரிக்கா மியுசியத்தில் அய்யனார் சிலை

டென்வர் ஆர்ட் மியுஸியம். இரண்டு கட்டிடங்கள், மொத்தம் சேர்த்து 10 தளங்கள் கொண்ட இந்த மியுசியத்தை முழுவதுமாக சுற்றிப்பார்க்கவேண்டுமென்றால் குறைந்த பட்சம் 2 நாட்கள் தேவை. ஒவொரு தளமும் ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தை பிரதிபலிக்கும் படி இருக்கும். உதாரணமாக மூன்றாவது தளம் முழுவதும் American Indian கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும், அதுபோல் மற்ற தளங்கள் Asian, Western American, Modern & Contemporary, European & American Textiles, Northwest Coast, Pre-Columbian Spanish Colonial என்று பிரித்து வைத்திருந்தார்கள். மூன்றாவது தளத்தில் உள்ள American Indian கேலரியை பார்க்கும் போது கூட அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. அங்கு இருந்த எல்லாமே நம் நாட்டு பழங்காலப் பொருட்கள்தான். உதாரணமாக சொல்லவேண்டுமென்றால், உணவு பரிமாறும் கரண்டி, தட்டு, ஓலையால் செய்யப்பட்ட கூடை போன்றவைதான். அங்கிருந்த சில பொருட்கள் இன்னும் கூட நாம் பயன்படுத்தும் பொருட்கள்தான் என்பதால் அவ்வளவு வியப்பாக இல்லை.

ஐந்தாவது தளமான Asian கேலரிக்குள் நுழைந்த போதுதான் ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது. Asian கேலரியில் அதிகம் இருந்தது இந்திய பொருட்கள்தான் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுப் பழங்காலப் பொருட்கள்தான். சிவன், விஷ்ணு, துர்கை போன்ற கடவுளின் அந்தக்கால சிறிய சிலைகள் இருந்தன. ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வரும்போது, திடீரென கண்ணில் பட்டது அந்த பெரிய அய்யனார் சிலை. பார்த்தவுடன் சற்றே மெய்சிலிர்த்துப்போனேன். அப்படியொரு அருளோடு கூடிய சிலை. சற்றே உணர்ச்சிவசப்படும் நம்மவர்கள் யாரேனும் பார்த்திருந்தால் அருள் வந்து ஆடியிருப்பார்கள். "Rampant horse & Rider, India Madura, Nayak Dynasty, 17th century stone. Charles Baylly Jr. Collection by exchange 1966.14" என்ற குறிப்போடு இருந்தது. இத்தனை கடல் தாண்டி பல மைல்களுக்கு அப்பால் உள்ள நம் கலாச்சாரத்தை, நாம் வழிபட்ட காவல் தெய்வத்தை, சிலையின் கம்பீரம் சற்றும் சிதையாமல் எதன்மூலம் கொண்டுவந்திருப்பார்கள், இதற்க்கெல்லாம் யார் initiative? எப்படி Negotiation நடந்திருக்கும்? என்று அடுக்கடுக்கான ஆச்சர்ய கேள்விகள். God is a circle whose centre is everywhere and circumference nowhere என்பதை தவிர வேறு என்ன பதில் இருக்க முடியும். சில நேரங்களில் நடக்கப்போகும் விஷயங்களை விட நடந்துமுடிந்த விஷயங்களே அதிக வியப்பை தருகிறது. சிவனும் விஷ்ணுவும் துர்கையும் இருப்பதில் வியப்பில்ல்லை, காரணம் அவை இந்தியா முழுவதும் வழிபடும் தெய்வங்கள். ஆனால் அய்யனார் என்பது நம் தமிழகத்தில் அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் ஊருக்கு வெளியே எல்லையில் உள்ள காவல் தெய்வம். அது எப்படி இங்கே? அதுவும் மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்டது என்ற குறிப்போடு!

ஹும்ம்ம்ம்ம்.... அய்யனார் ஒருபுறம் என்றால் சற்றே திரும்பினால் ஒரு மிகப்பெரிய ஹனுமார் சிலை, மரத்திலேயே செய்யப்பட்ட ஹனுமார் சிலை. மரத்திலே செய்யப்பட்ட கடவுள் சிலையை நான் நம்ம ஊரில் கூட பார்த்ததில்லை. ஆனால் இங்கே இருக்கிறது. அருகில் இருந்த குறிப்பில் Hanumaar என்றே ஆங்கிலத்தில் எழுதியிருக்கலாம் அதை மொழிபெயர்த்து Monkey God என்று எழுதியிருந்ததுதான் சற்று உறுத்தலாக இருந்தது. Monkey God என்பதை மீண்டும் தமிழ்ப்படுத்திப் பார்த்தேன்...சகிக்கமுடியவில்லை. "Monkey God (Hanuman), India, 1800, Wood" என்ற குறிப்போடு இருந்தது. அதேபோல் "Goddess Durga with lion. India, Propably Uttar Pradesh about 950, Sand stone. Gift of Elizabeth B. Labrot in memory of Marjorie Mclnsoch Bwell. 1983.266" என்ற குறிப்போடு மண்ணால் செய்யப்பட்ட ஒரு சிறிய துர்கை சிலை. "Shiva & Parvathy (Uma Maheswara) India, Madhya Pradesh, 1000's, Sand Stone" என்ற குறிப்போடு சிவன் பார்வதி சிலை. "God Shiva & his sacred bull nandhi, central India, Red Sand Stone" என்ற குறிப்போடு நந்தியுடன் கூடிய சிவன் சிலை. அதே போல் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விஷ்ணு மற்றும் அவருடைய அவதாரங்கள், அதாவது கல்லில் விஷ்ணுவுடைய உருவம் பெரிதாகவும், உருவத்தை சுற்றியும், கை கால்களுக்கு இடையே அவருடைய அவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

அதே போல் இன்னொரு பொருளும் பார்த்தேன், அதை பற்றி நான் சொல்லுகிறேன் அது என்னவென்று நீங்கள் சொல்லுங்கள். ஒரு மிகப்பெரிய உருண்டையான கல், எப்படி அளந்தாலும் அதனுடைய diameter கண்டிப்பாக ஒரே அளவுதான் இருக்கும். இன்றும் காரைக்குடி பக்கம் உள்ள செட்டிநாட்டு கிராமங்களில் கோவில் அருகேவோ அல்லது ஊரணிக்கு அருகிலேயோ அது போன்ற கல்லை பார்க்கலாம். அனேகமாக உடனே எல்லோரும் சொல்லிவிடலாம் அது இளவட்டக்கல் என்று. ஆனால் இந்தப்பொருள் Asian கேலரியில் இல்லாமல் ஏனோ Pre-Columbian Spanish Colonial கேலரியில் இருந்தது. அதை பற்றிய குறிப்பு ஒரு புத்தக வடிவில் அருகில் வைக்கப்பட்டிருந்தது, படிக்க பொறுமை இல்லாததால் வந்துவிட்டேன். ஒரு ஆப்ரிக்காவின் நாகரிகத்தையோ, ஐரோப்பாவின் தொன்மையையோ விளக்கும் படியான மியுஸியம் நம்ம ஊரில் எனக்கு தெரிந்து இல்லை. ஆனால் இங்கே இருக்கிறது. அனைத்து நாகரிகத்தையும் இங்கே பார்க்க முடிகிறது. மியுசியத்தில் மட்டுமல்ல, சாதரணமாக தெருவில் நடந்து போனால் கூட, எதிரே வரும் 10 பேர்களில் குறைந்தபட்சம் 2 மெக்சிகன், 2 சைனீஸ், 2 இந்தியர், 4 அமெரிக்கர்களை பார்க்கமுடிகிறது.

5 comments:

ILA (a) இளா said...

Question ://ஒரு ஆப்ரிக்காவின் நாகரிகத்தையோ, ஐரோப்பாவின் தொன்மையையோ விளக்கும் படியான மியுஸியம் நம்ம ஊரில் எனக்கு தெரிந்து இல்லை.//

Answer: சாதரணமாக தெருவில் நடந்து போனால் கூட, எதிரே வரும் 10 பேர்களில் குறைந்தபட்சம் 2 மெக்சிகன், 2 சைனீஸ், 2 இந்தியர், 4 அமெரிக்கர்களை பார்க்கமுடிகிறது.

So here is the question and Answer :)

யாத்ரீகன் said...

reminds me of an Malgudi Days episode where due to miscommunication a britisher/european thinks that the villager is selling such a statue, but the villager would be negotiating and selling his goats.. each of them talking in thier mothertongue and finishing the deal with both of them happy at the end fo the deal :-)

>>> God is a circle whose centre is everywhere and circumference nowhere <<<<

nice one !!

Anonymous said...

பார்க்கவே மகிழ்ச்சியாய் இருக்கிறது. மில்வாக்கியில்( விஸ்கான்ஸின்) காந்தி சிலை நிறுவியபோது இப்படித் தான் எல்லோரும் கூட்டமாய் போய் ரசித்தோம். அதில் ஒரு சந்தோசம் :)

Nilofer Anbarasu said...

@ ila..
நீங்க சொல்றது கரெக்ட்தான்.

@ யாத்ரீகன்...
Thanks for ur visit n comment.

@ சேவியர்...
//மில்வாக்கியில்( விஸ்கான்ஸின்) காந்தி சிலை நிறுவியபோது இப்படித் தான் எல்லோரும் கூட்டமாய் போய் ரசித்தோம்.//
மில்வாக்கியில் காந்தி சிலை இருக்கிறதா? புதிய தகவலுக்கும் வருகைக்கும் நன்றி சேவியர்.

Nilofer Anbarasu said...

@ Anonymous...
உங்களுடைய மறுமொழியில் உள்ள சுட்டி ஒரு தவறான தளத்திற்கு அழைத்துச்செல்வதால் அவை அனைத்தும் இங்கிருந்து நீக்கப்படுகிறது.