Friday, October 24, 2008

ராமன் தேடிய சீதை - சில நேரங்களில் சில மனிதர்கள்நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா
உனை நீயே தாழ்வாய் பார்க்காதே
அட நீ உன்னிடம் தோற்காதே
எதுவும் முடியும் என்று நினை
நீ எழுந்து நடக்கும் ஏவுகணை

மேலே உள்ள பாடலின் கருத்தே படத்தின் கதை. வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் சோகங்களால் நிலைகுலைந்து போய் இருக்கும் ஒருவன் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை தரமான முறையில் சொல்லி இருக்கும் படம். நெடுமாறன், தமிழிசை, கயல்விழி, செந்தாமரை என முக்கிய கதாபாத்திரங்களின் தூய தமிழ் பெயர்களே ஏதோ ஒரு புதுமையான படம் பார்க்கின்றோம் என்கின்ற உணர்வை தூண்டிவிடுகின்றன. சிறு வயதில் மன அழுத்தம் ஏற்ப்பட்டு சில மாதங்கள் மன நல மருத்துவமனையில் இருக்கிறார் சேரன். திருமணத்திற்காக பெண் பார்க்கப் போகின்ற இடத்தில், பெண்ணிடம் இதை பற்றி முன்பே சொல்ல, அதனால் அச்சப்படும் பெண்கள் இவரை ஏற்க்க மறுக்கின்றனர். திருமணத்திற்கு முன்பு சராசரி பெண்களின் மனநிலமையையும், பல பெண்களால் வெறுக்கப்பட்ட ஒரு கண்ணியமான ஆணின் மனநிலையையும் மாறி மாறி காட்டி உணர்ச்சிகளின் போராட்டமாகவே தொடங்குகிறது படம்.
"வெற்றிபெறுவோம் நிகழ்ச்சியில் காலை வணக்கத்துடன் தோழன் நெடுமாறன். வணக்கம் நண்பர்களே. உங்கள் கைகள் பணியை செய்யட்டும் செவிகள் நிகழ்ச்சியை கேட்கட்டும். இந்த நொடியும் நாளும் வாழ்வில் திரும்ப வராது. ஆகவே செய்வதை மிக சரியாக செய்து விடுங்கள். வெற்றி உங்கள் வீட்டுக் கதவை தட்டி நிற்கும்"
என்று சொல்லும் ரேடியோ ஜாக்கியாக பசுபதி. நெடுமாறான் என்கின்ற தமிழ் பெயருக்கு ஏற்றாற்போல் சுத்தமான தமிழ் உச்சரிப்புடன் கலக்குகிறார். கண்பார்வையற்ற பசுபதிக்கும் கஜாலாவுக்கும் இடையே வரும் காதல் ஆரவாரமான பாடல்களுக்கு நடுவே வரும் ஒரு அழகிய ரிங்டோன்.

சேரனின் வாழ்க்கையில் விமலா ராமன், ரம்யா, நவ்யா நாயர், கிருத்திகா என ஒவ்வொரு பெண் வரும்போதும் இவரைத்தான் கை பிடிக்கப் போகிறார் என்று எண்ண, அது வெறும் கை குலுக்கும் நட்பாகவே முடிந்துபோவது எதிர்பாராத திருப்பம். திருடனாக வரும் நிதின் சத்யா தன் பங்கிற்கு சேரன் பார்க்கும் மூன்றாவது பெண்ணை (கிருத்திகா) தட்டிக்கொண்டு செல்கிறார். அனைவரின் இயல்பான நடிப்புக்கிடையில் நிதின் சத்யாவின் நடிப்பு மட்டும் ஏனோ மிகவும் artificialஆகா தெரிகிறது. டயலாக் டெலிரியில் timing sense மிஸ் ஆவதால் அதிகம் சிரித்திருக்க வேண்டிய காட்சிகள் கூட சப்பென முடிந்துவிடுகிறது (உ.ம்: ஓட்டபந்தயத்தில் வென்றவுடன் பேட்டி எடுக்கும் காட்சி) .

சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் நவ்யா நாயரை பெண் பார்க்க போய், லத்தி சார்ர்ஜ்ல் மாட்டி சேரன் அடி வாங்கும் காட்சி செம்ம சூப்பர். அங்கங்கே ஆட்டோகிராப்ஐ நினைவுபடுத்தினாலும் படம் பார்த்து முடித்தவுடன் ஒரு புதிய படத்தை பார்த்த உணர்வே ஏற்படுகின்றது. யதார்த்த நாயகனாக சேரன் என்னதான் அழுது புரண்டாலும் தன்னம்பிக்கை நாயகனாக வரும் பசுபதியே வசீகரிக்கிறார். அனைவரையும் நல்லவர்களாக காண்பித்து, சிலர் செய்யும் தவறைக் கூட, "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற போக்கில் மன்னித்து பிறருக்கு உறுத்தாத ஒரு வாழ்வை படைத்துககாட்டி இருக்கும் அறிமுக இயக்குனர் பாராட்டுக்குரியவரே.

No comments: