Sunday, November 02, 2008

தாடி, மீசை, ரேசர்

பளபளக்கும் முகத்தில் உதட்டிற்கு மேலே தூசி போல் முடி முளைத்திருக்க கீழே புல் போல் தாடி இருக்க, முகத்தில் ரோமங்கள் எட்டிப் பார்க்க ஆரம்பித்த வயசு முதல் இந்த தாடி மீசையை ஒழுங்குபடுத்துவதில் எனக்கொரு தணியாத ஆர்வம் எப்போதும் உண்டு. அதிலும் முதல் முறை ஷேவ் செய்வதற்காக காத்திருந்ததை ஒரு தவம் என்றே சொல்லலாம் . இளம்வயதிலேயே ஷேவ் செய்வதால் முகமும் முடியும் கரடு முரடாக வளர்வதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் அப்பா மறுக்க, ஆர்வம் அதிகமானதே தவிர குறையவில்லை. ஒரு வழியாக வெகு நாட்களுக்குப்பின் அப்பா தன்னுடைய சிசரை கொடுத்து ட்ரிம் பண்ண மட்டும் அனுமதித்தார்.

படிப்பதற்காக வெளியூர் சென்றபோது அவர் சொன்ன பல அறிவுரைகளில் ஒன்று, எக்காரணம் கொண்டும் கடையில் ஷேவ் செய்யாதே, அப்படியே செய்ய நேர்ந்தாலும் ரிவர்ஸ் போடாதே என்பதும் ஒன்று. படிக்கும் போது முதல் இரண்டு வருடம் தாடி இல்லாமலும் பின்னர் தாடி மீசை, பிரெஞ்சு மீசை என பலப்பல அவதாரங்கள் எடுத்திருக்கிறேன். எந்த ரேசரை உபயோகப்படுத்தினாலும், அடுத்து இருக்கும் லேட்டஸ்ட் மாடலை வாங்கவேண்டும் என்று எப்போதும் தோன்றும். சிசரில் ஆரம்பித்து எந்த பிராண்ட் ரேசர், பிளேடு, க்ரீம்மையும் நான் விட்டு வைத்தது இல்லை, எந்த ரேசரும் என்னோடு ஒரு வருடத்திற்கு மேல் இருந்தும் இல்லை. ஒன்று உடைந்து விடும் அல்லது ஹோஸ்டலில் எனக்கு தெரியாமல் நண்பர்கள் யாராவது எடுத்து உபயகப்படுதிவிட்டு அதை பாத்ரூமிலேயே வைத்து விடுவார்கள். ஒரு வாரம் கழித்து பரிதாபமான நிலையில் என் கண்ணில் படும். அதற்குப் பிறகும் அதை நான் எப்படி உபயோகப்படுத்துவேன்? எடுத்து அடக்கம் செய்து விட்டு, குறைந்த விலைக்கு வேறு ஒன்று வாங்குவேன். அதிகநாள் உபயோகித்தது 7'o Clock ரேசரும், brushம் தான்.

இந்தியாவில் இருந்து கொண்டுவந்த ரேசர் ஒருநாள் காலை திடீரென மக்கர் பண்ண Gillet Fusion ஒன்று வாங்கினேன். வெகுநாட்களாக எலெக்ட்ரானிக் ரேசர் ஒன்று வாங்கவேண்டும் என்கிற எண்ணம் அவ்வப்போது எழுந்து விலையின் காரணமாக (Rs.1500) அப்பொழுதே மரித்துப்போகும். அமெரிக்கா வந்த ஒரு மாதத்தில், முடி வெட்டிக்கொள்வதர்க்காக சலூனுக்கு சென்ற போது, கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்பதைப்போல் கதியும் இன்றி கத்திரிக்கோலும் இன்றி மிஷினால் ஐந்தே நிமிடத்தில் வெட்டி விட்டு 12 டாலர் கறந்துவிட்டார். முடி வெட்டியவர் ஒரு மெக்சிகன் இளம் பெண் என்பதை தவிர வேறு ஒன்றும் விசேஷமாக சொல்வதற்கில்லை. இப்படி பலமுறை 12 டாலர் கொடுத்த பிறகுதான் தோன்றியது, இப்படி கொடுப்பதற்கு பதில் ஒரு எலெக்ட்ரானிக் ட்ரிம்மர் வாங்கியிருக்கலாம் என்று.

கடைக்கு சென்று பார்த்தால் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேலான மாடல் இருந்தன. சற்றே குழம்பி எதுவும் வாங்காமல் திரும்பிவிட்டேன். இந்தியாவில் இருந்த வரையில் விளம்பரத்தை பார்த்தே பொருள் வாங்கிய நான் அமெரிக்கா வந்ததில் இருந்து review பார்த்து வாங்கும் பழக்கம் தொற்றிக்கொண்டது. கூகிளில் தேடியதில் Philips Norelco G380 மற்ற மாடல்களைக் காட்டிலும் நாலரை ஸ்டார் வாங்கி முதலில் இருந்தது. Mini shaver, hair clipper, beard & moustache trimmer, nose trimmer, precision trimmer, full size trimmer, cleaning brush, traveling pouch என்று கிட்டத்தட்ட மொத்தம் 10 item கொண்ட இதை 42 டாலர் கொடுத்து ஒரு வழியாக வாங்கிவிட்டேன். கடந்த ஒரு வாரமாக அதைத்தான் பயன்படுத்துகிறேன்.

Brush, scissor, பிளேடு, கிரீம், after shave lotion என்று எதுவும் தேவை இல்லை, நம்ம விஜயகாந்த் (அவர்தாங்க one man army) மாதிரி அனைத்தையும் அந்த ஒரு மிஷனே பார்த்துக்கொள்கிறது. தாடி மீசை மட்டுமல்ல தலைமுடி கூட நன்றாக வெட்டுகிறது. Adjustable head இருப்பதால் முடியின் நீளத்திர்கேற்ப்ப அதை மாற்றிக்கொள்ளலாம். இது போன்ற மிஷின் இந்தியாவில் வராமல் இருப்பது நல்லது, அப்படி வந்து பாப்புலர் ஆனால், முடி வெட்டும் தொழில் நசுக்கப்படுகிறது என்று கண்டன குரல் எழும்பலாம். சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாக நலிவடைந்து வரும் முடிவெட்டும் தொழில் மேம்பட அரசு உதவவேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கலாம். இந்த தொழிலில் உள்ளவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டுமென நாடாளும் மக்கள் கட்சி சார்பாக கார்த்திக் போராடலாம். இது போன்ற காமெடிகள் அரங்கேற நிறைய வாய்ப்பு உண்டு. அந்த அளவுக்கு மிஷின் சூப்பராக இருக்கிறது. குறிப்பாக சிறு சிறு வெட்டுக்காயங்கள், கீறல்கள் விழுவதற்கு வாய்ப்பே இல்லை. ஷேவ் செய்த பிறகு அறவே எரிச்சல் கிடையாது. பிறர் உதவியின்றி நாமே அனைத்தையும் செய்துகொள்ளலாம்.மொத்தத்தில் வெகு நாட்கள் தேடலுக்குப் பிறகு ஒரு நல்ல ரேசர் கிடைத்திருக்கிறது.

3 comments:

ஆட்காட்டி said...

மஞ்சள் பூசினா தாடி வளராதாமே?

Senthil said...

me the second
useful post

R A J A said...

@ ஆட்காட்டி...
//மஞ்சள் பூசினா தாடி வளராதாமே?//
:-)

@ Senthil...
//me the second
useful post//

Thanks for ur visit.