Sunday, January 25, 2009

மூன்று முடிச்சு - சரியான வில்லன் மூஞ்சி

ரஜினி என்றாலே ஸ்டைல் என்றான பிறகு அவர் நடித்த படங்களில் ஏதாவது ஒரு வகை ஸ்டைல் ரசிகர்களுக்காக திணிக்கப்படுவதுண்டு. ஆரம்ப கால படங்களில் ஸ்டைல் என்ற முத்திரை அவர் மீது விழுவதற்கு முன்பு வந்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை இந்த மூன்று முடிச்சு. இந்த படத்தில் ரஜினியினுடைய எல்லா மேனரிசமும் ஒரு வகை ஸ்டைல்தான். ஸ்டைல் என்று சொல்லத்தெரியாமல் மக்கள் அவரை ரசிக்கத் தொடங்கிய காலம். கமலும் ஸ்ரீதேவியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, ரஜினி ஸ்ரீதேவியை ஒருதலையாய் காதலிப்பார். சாதாரண முக்கோண காதல் கதை போல் ஆரம்பித்தாலும், ரஜினியின் கோரமுகம் வெளிப்படும் போது சற்றே வேகமெடுக்கிறது கதை. வில்லனான ரஜினியே படம் முழுவதும் பூரணமாக நிறைந்திருக்கிறார். வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்போது எடுக்கப்பட்டிருந்தாலும் இப்போது பார்க்கும்போது ஏதோ ஆன்டி-ஹீரோ சப்ஜெக்ட் போலத்தான் தெரிகிறது. ரஜினி மட்டும் ஹீரோவாக நடிக்காமல் வில்லனாகவே தொடர்ந்திருந்தால் சூப்பர்ஸ்டார் ஆகியிருக்கமாட்டார் ஆனால் நிச்சயம் சூப்பர் வில்லனாகியிருப்பார்.

தொடர்ந்து தப்பு செய்யும் வில்லன் போல் இல்லாமல், மூர்கமாக தவறு செய்துவிட்டு பின்னர் மனசாட்சிக்கு பயந்து ஓடி ஒளியும் வில்லன். கடந்த 15 வருடங்களாக ரஜினிக்காகவே எழுதிய வசனங்களை கேட்டு பழகிப்போன நமக்கு, சாதரண ரஜினிக்காக, பிரசாத் என்கின்ற கதாபாத்திரத்துக்காக எழுதிய வசனங்களை கேட்கும் போது ரொம்பவே இயல்பாய் இருக்கிறது. ஒரு காட்சியில், ரஜினியின் தந்தை பிரசாத்தை பத்தி என்ன நினைக்கிறன்னு கேட்பார், அதற்க்கு ஸ்ரீதேவி "சரியான வில்லன் மூஞ்சி" என்பார். ஸ்ரீதேவியை கல்யாணம் செய்யும் ஆசையில் ரஜினி சுற்றிவர, பாலச்சந்தரின் சேட்டையால் ரஜினியின் அப்பாவும் ஸ்ரீதேவியும் கல்யாணம் செய்துகொள்ள, ஸ்ரீதேவிக்கு தலைமகனாகிவிடுவார் ரஜினி. இந்த படத்தின் மொத்த கதையை நம் கவியரசர் வெறும் ஆறு வரியில் அழகாய் சொல்லியிருப்பார். இந்த ஆறு வரியை, இரண்டு இரண்டு வரிகளாக முக்கிய கதாபாத்திரங்களான கமல், ரஜினி, ஸ்ரீதேவி பாடும்படி படமாக்கியிருப்பார் கே.பி. படத்தில் வெவ்வேறு இடங்களில் இந்த வரிகள் வரும்.
கமல்: வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
ரஜினி: மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நிரலைகள்
ஸ்ரீதேவி: நிரலைகள் முடிந்ததெல்லாம் நெஞ்சில்வந்த நினைவலைகள்
நினைவலைகள் முடிந்தயிடம் தாய்மகனாம் சூழ்நிலைகள்
ஒரு காட்சியில் ரஜினியை பார்த்து ஸ்ரீதேவி "போடா கண்ணா.... போ" என்பார். இதுவே இன்னைக்கு ஒரு கதாநாயகி ரஜினியை பார்த்து சொல்லமுடியுமா? இப்படி அவ்வப்போது பல வசனங்கள் நம்மை நிகழ்கால சூப்பர்ஸ்டார் ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்க வைக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த பொய் படத்தில் விதிக்கு உருவம் கொடுத்திருப்பார் கே.பி. அதை சற்றே வித்தியாசமாக உணர்ந்தேன். 1976ல் வந்த இந்த படத்தை பார்த்த பிறகுதான் தெரிந்தது, இதெல்லாம் கே.பிக்கு ஜுஜுபி என்று. இந்த படத்தில் மனசாச்சிக்கு உருவம் கொடுத்திருக்கிறார். ரஜினி ஒவ்வொரு முறை தப்பு செய்த்தபிறகும், மனசாச்சி வந்து கேள்விகேட்கும், தவறை எல்லாம் வரவு வைத்துக்கொண்டே வரும். மனசாச்சிக்கு பைத்தியக்காரன் போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்திருப்பார். தவறு செய்த பிறகு ஒவ்வொரு முறையும் வந்து கேள்விகேட்கும் மனசாச்சி, ஏன் தப்பு செய்வதற்கு முன்பு வந்து எச்சரிக்காதா என்ற நம் நியாயமான கேள்விக்கு படத்தின் கடைசியில்
விதைக்கின்ற வேளையிலே விளங்காத மனசாட்சி...
விளைவுக்குப் பின்னாலே விரைந்துவரும் மனசாட்சி....
தனக்காகத் தன்னுடனே போராடும் மனசாட்சி....
தவறுபவன் கண்களுக்குப் பைத்தியந்தான் மனசாட்சி.
இந்த நாலு வரியில் பதில் சொல்லுகிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் அக்மார்க் கே.பி ரகம். ஸ்ரீதேவியின் அக்காவாக வரும் Y.விஜயா ஒரு துணை நடிகை, கமலுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, இயக்குனர் தூக்குப் போடும் காட்சியில் நடிக்க அழைப்பார், உடனே விஜயா கமலை பார்த்து "நா தூக்குல தொங்கிட்டு அப்புறமா வீட்டுக்கு வரேன். நீங்க போங்க." என்பார். கல்யாணத்துக்கு வயது ஒரு தடை இல்லை என்று ஸ்ரீதேவி சொல்லும்போது அங்கு வரும் ஒரு வயதானவர் "கீட்ஸ் சொல்லல, ஷெல்லி சொல்லல, நம்மூர் செல்வி சொல்லிட்டா" என்பார். இது போன்ற வசனங்களை கேட்கும்போது நம்மையும் அறியாமல் ஒரு புன்முறுவல் உதடுகளில் வந்து மறையும். ரஜினியின் அப்பாவாக ஒருவர் நடித்திருக்கிறார், பல படங்களில் பார்த்திருந்தாலும் பெயர் தெரியவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கு கணக்கச்சிதமாய் பொருந்துகிறார். அப்படியொரு நிதானமான நடிப்பு.

இந்த படத்தில் ரஜினியினுடைய நடிப்பை பார்த்த நமக்கு, சூப்பர்ஸ்டார் என்ற வட்டத்துக்குள் வந்த பிறகு ரஜினி சிரத்தை எடுத்து நடிப்பத்தை தவிர்த்து விட்டாரா? அல்லது இயக்குனர்கள் அவருடைய நடிப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லையா? என்ற சந்தேகம் வருகிறது. காரணம் இந்த படத்தில் அப்படியொரு அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி.

9 comments:

venkatramanan said...

2007 ஆக்ஸ்டில் 'இந்தியா டுடே' ஒரு ரஜினி சிறப்பிதழ் வெளியிட்டிருந்தனர். அதில் ஞாநியும் கூட 'நடிகனைக் கொன்ற சூப்பர்ஸ்டார்' என்ற கட்டுரையில் இதைக் கோடிட்டுக் காட்டியிருப்பார். நல்லதொரு விமர்சனம்.

அன்புடன்
வெங்கட்ரமணன்
பி.கு. 'நிலோஃபர் அன்பரசு'ங்கற உங்க புனைபெயர் யாருடைய தேர்வுன்னு தெரியலை, அதிலே நிச்சயம் ஒரு வசீகரம் இருக்கு! ஒரு எழுத்தாளத்தனம் இருக்குது பாஸ் :-)

கிரி said...

நல்ல விமர்சனம்.

எனக்கும் இந்த ரஜினி தற்போது இல்லாதது ரொம்ப வருத்தம்


ரஜினியின் இந்த நிலைமைக்கு காரணம் அவர்களது ரசிகர்களே... அவரை எந்த ஒரு புதிய முயற்சியும் எடுக்காதபடி செய்து விட்டார்கள். ரஜினியே விரும்பாமல் ஒரு வட்டத்திற்குள் சிக்கி கொண்டார், இனி அவரே நினைத்தாலும் வெளியே வர முடியாது.

Anonymous said...

His name is Kalkata Viswanathan.He has acted in several films in late 70's and early 80's like Vellai Roja.

நட்புடன் ஜமால் said...

அருமையா சொல்லியிருக்கீங்க.

அப்படியே பழைய நாட்களில் பயனித்துவிட்டேன்.

ரஜினியை பற்றி தாங்களும் ’கிரி’யும் சொன்னது சரியே.

அதுபோலவே நான் ‘சத்தியராஜையும்’ நினைத்து வருந்தியதுண்டு.

வண்ணத்துபூச்சியார் said...

நல்ல பதிவு.


எனது வருத்தம் கூட ரஜினி என்ற உண்மையான நடிகர் பற்றியது.

அவர் நடிப்பதை நிறுத்தி அல்லது நிறுத்தி வைக்கப்பட்டு ஆண்டு பலவாயிற்று.

ஜானியில் எத்தனை இயலபான நடிப்பு.பத்து முறையேனும் பார்த்திருப்பேன்.

பிரியாவில் அலட்டாத ஸ்டைல். எத்தனை அழகு.

தில்லு முல்லுவில் வயிறு புண்ணாகும் நகைச்சுவை நடிப்பு. அந்த Interview சீனுக்காக எத்தனை முறை பார்த்தேன் என எண்ண முடியாது.

கண்களாலேயே நடித்த முள்ளும் மலரும். கண்டிப்பாக பார்பவர் கண்கள் குளமாகும்.

உண்ர்ச்சிகளை கொட்டி வந்த எங்கேயோ கேட்ட குரல்.. அமைதியாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

நெற்றிக்கண், ராகவேந்திரர் என Different dimmensions and Contradiction confront characters என நீளும் பட்டியல்.

ஏன் இவையெல்லாம் யாராலும் மறக்க இயலவில்லை.??

அத்தனை இயல்பான நடிப்பு திறமை உள்ளது அவரிடம். அதை வெளிகொணர்ந்த திறைமையான இயக்குநர்கள்.

கை காலை அசைத்தால் சத்தம் வரும் ரஜினியே பார்க்க முடிகிறது.


சிவாஜி படத்திலும் ஷங்கர் ஏதாவது செய்வார் என நினைத்து தப்புதான்.

அதைவிட சிவாஜியில் நகைச்சுவை என்ற பெயரில் கோமாளித்தனமாக சித்தரிக்கப்பட்டது கண்டு நொந்து போனேன்.

இயக்குநர் பற்றாகுறையா..??? ஒரளவு இருக்கலாம். ஆனால் அவரை வைத்து பணம் பண்ணலாம் என்ற எண்ணமே எல்லோரிடமும் மேலோங்கிவிட்டது கண்கூடாக தெரிகிறது.

தொடர்ந்து எழுதினால் 10 பக்கத்திற்கு ஒரு பதிவே போடலாம் அவரது அபார நடிப்பும் எனக்குள்ள ஆதங்கமும் பற்றி.

இத்தனையும் அறிந்து அதனையும் இயல்பாக எடுத்து கொண்டு இறைவன் விட்ட வழி என அமைதியாக இருக்கிறாரோ ..?? என்னவோ..??


உலக திரைப்படங்களை எனது வலை பூ பார்கவும்.

நிறை / குறை சொல்லவும்.

வாழ்த்துக்கள்.

Nilofer Anbarasu said...

@ Venkatramanan...
//நல்லதொரு விமர்சனம்.//
வருகைக்கும் 'இந்தியா டுடே' பற்றிய தகவலுக்கும் ரொம்ப நன்றி வெங்கட்.
//உங்க புனைபெயர் யாருடைய தேர்வுன்னு தெரியலை,அதிலே நிச்சயம் ஒரு வசீகரம் இருக்கு! ஒரு எழுத்தாளத்தனம் இருக்குது பாஸ் :-)//
வெங்கட், உங்களின் இந்த வரியில் நான் ரொம்பவே நெகிழ்ந்து போனேன். திண்டுக்கலில் நான் படித்தபோது எனக்கு வகுப்பு எடுத்த ஒரு ஆசிரியரின் பெயர் நிலோஃபர், சராசரிக்கும் கீழான மாணவனாக இருந்த நான், அவரின் தனிப்பட்ட கவனத்தின் காரணமாகவே என் படிப்பில் பல நல்ல மாற்றங்கள் வந்தன. அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை, சில வருடங்களுக்கு முன்பு Om Shanti பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார் என்று நண்பர்கள் சொன்னார்கள். அன்பரசு என்னுடைய நண்பனின் பெயர். இரண்டையும் சேர்த்தே இந்த புனைப் பெயர்.

@ கிரி ...
//ரஜினியின் இந்த நிலைமைக்கு காரணம் அவர்களது ரசிகர்களே... அவரை எந்த ஒரு புதிய முயற்சியும் எடுக்காதபடி செய்து விட்டார்கள். ரஜினியே விரும்பாமல் ஒரு வட்டத்திற்குள் சிக்கி கொண்டார், இனி அவரே நினைத்தாலும் வெளியே வர முடியாது.//
கிரி, நீங்க சொன்ன இந்த காரணம்தான் மிகச்சரியான காரணம். ரசிகர்கள் தான் அவரை எந்த புது முயற்சியும் எடுக்க விடாமல் செய்துவிட்டனர்.

@ Anonymous ...
Thanks for your info anani.

@ நட்புடன் ஜமால் ...
//அதுபோலவே நான் ‘சத்தியராஜையும்’ நினைத்து வருந்தியதுண்டு.//
சத்தியராஜ், மிகக் சில படங்களிலேதான் நன்றாக நடித்திருப்பார் என்பது என் கருத்து.

@ வண்ணத்துபூச்சியார் ...
முதலில் உங்களுக்கு என்னுடைய நன்றியை சமர்பிக்கின்றேன். உங்களின் இந்த பெரிய மறுமொழியில் இருந்தே நீங்கள் பதிவை எவ்வளவு விரும்பி படித்தீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் கூறிய கருத்தோடு அப்படியே உடன்படுகிறேன். உங்கள் ப்லாக்ஐ பார்த்தேன், நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பீர்கள் போல, ரொம்பவே ரசித்து விமர்சனம் எழுதுகிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.

Anand said...

Good review.... :)

முரளிகண்ணன் said...

அந்த ரஜினியை நினைத்து ஏங்கும் பலரில் நானும் ஒருவன். மூன்று முடிச்சு, 16 வயதினிலே என கலக்கிய ரஜினி சூப்பர்

SUREஷ் said...

பாலச்சந்தரின் சேட்டையால்....