Sunday, February 01, 2009

டீ கடை பெஞ்சு சுவர்

அலுவலகத்துக்குள் டீ காப்பி இருந்தாலும் சற்றே வெளியே வந்து அருகில் உள்ள டீ கடையில் டீ குடிப்பது வழக்கம். ஒரு நெடுஞ்சாலையில் உள்ள பெரிய மரத்துக்கு கீழே அந்த டீ கடை இருக்கும், கடையை சுற்றி எப்போதும் புதுப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும். புதுப் போஸ்டர்கள் என்றால் ஏதோ தினம் ஒன்று என நினைத்துவிட வேண்டாம். காலையில் இருக்கும் போஸ்டர் மதியம் இருக்காது, மதியம் இருக்கும் போஸ்டர் இரவு இருக்காது, அவ்வளவு வேகமாக ஒன்றின் மேல் ஒன்றாக மாறி மாறி ஒட்டிக்கொண்டிருப்பார்கள். அதிக மக்கள் பார்க்கும் இடம் என்பதாலேயே இந்த சிறப்பு, எவ்வளவு திருஷ்டிசுத்தி போட்டாலும் குறையாத கண்பார்வை கொண்ட இடம். அரசியல் கூட்டம், சினிமா தொடக்க விழா, போராட்டம், கண்டனம், காதுகுத்து என பல தரப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும். கொளுத்தும் வெயிலுக்கு இடையில் அந்த மரத்தின் நிழலில் இந்த போஸ்டர்களை படித்துக் கொண்டே டீ குடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி ஒரு நாள் பார்த்ததுதான் இந்த போஸ்டர். உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க சொல்லி ஒட்டப்பட்டிருந்தது. ஓட்டு போடுவது என்பது ஒரு குடிமகனுடைய முக்கிய கடமை அதை புறக்கணிப்பதென்பது மாபெரும் தவறு என்ற கருத்துடையவன் நான். இருந்தாலும் டீ குடித்துக்கொண்டே வாசிக்க ஆரம்பித்தேன். போஸ்டர்ரில் இருந்த மைய கருத்தோடு உடன்பாடில்லாவிட்டாலும் அந்த உக்கிரமான வார்த்தைகளுக்காக உலாபேசியில்* அதை படம் பிடித்தேன். அந்த வரிகள் கீழே.

உள்ளாட்சி தேர்தலின் நோக்கம்
அதிகாரத்தை பரவலாக்குவதல்ல,
ஊழலை பரவலாக்குவதே!
தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும்
உரிமைகொண்ட சட்டம் இயற்றவும்
நடைமுறைபடுத்தவும் அதிகாரம்கொண்ட
மக்கள் சர்வாதிகார மன்றங்களை
நிறுவ போராடுவோம்.

கக்கூசுக்கு கட்டண கழிப்பிடம்
குப்பை வார பிரெஞ்சு கம்பெனி
ஆரம்ப சுகாதாரத்துக்கு அமெரிக்க மிஷனரி
பாலம் போட மலேசிய கம்பெனி
ம…..புடுங்கவா மாநகராட்சி.
பொறுக்கிதின்ன போட்டி போடும்
மாநகராட்சி தேர்தலை புறக்கணிப்போம்.

விதை,உரம்,பூச்சிகொல்லிமருந்து வாங்க,
உணவு,தானியம்,காய்கறிகள்,
விலை நிர்ணயம் செய்வது
டாடா, அம்பானி, பன்னாட்டு கம்பெனி.
நெசவு,தீப்பெட்டி,கைவினை தொழிலின்
கழுதை நெறிப்பதும் பன்னாட்டு கம்பெனி.
உள்ளூர் பொருளாதாரத்தை பாதுகாக்க முடியாத
உதவாக்கரை உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்.

விவசாயிக்கே நிலம்,விலை பொருளுக்கு
விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம்,
இவையே கிராம மக்களுக்கான
உண்மையான அதிகாரங்கள்.
உள்ளாட்சி வழங்கும் அதிகாரம்
பொறுக்கி தின்பதற்கான அதிகாரமே.

விலை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய,
வெளி (நாட்டு கம்பெனி) ஆட்சி,
கக்கூஸ் ,சைக்கிள் ஸ்டாண்ட், சுடுகாடு
நிர்வாகம் பண்ண உள்ளாட்சி,
உள்ளாட்சி தேர்தலின் நோக்கமே
அதிகாரத்தை பரவலாக்குவதல்ல
ஊழலை பரவலாக்குவதே.

M.L.A சீட்டை ஏலம் விட்ட யோகியர்கள்
உள்ளாட்சி தலைவர் பதவியை ஏலம் விட்டவர்களை
குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளுவோம் என்கிறார்கள்,
பின்பக்க வாயில் சிரிப்பு வருதுங்கோ .
உள்ளாட்சி தேர்தலின் நோக்கமே
அதிகாரத்தை பரவலாக்குவதல்ல
ஊழலை பரவலாக்குவதே.

இதை யாரு எழுதினது அப்படின்னு நீங்க கேக்குறது புரியிது. போஸ்டரின் கீழே ம.க.இ.க - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு (யாருப்பா நீங்க?) என்றிருந்தது. இது இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. தமிழில் டைப் செய்ய தெரியாத காரணத்தால் அப்பொழுது ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தேன். அதன் தமிழாக்கமே இது.

*உலாபேசி - ஒரு சிறுகதையில் வினையூக்கி உலாபேசி என்ற வார்த்தையை பயன்படுத்தியிருப்பார். கவித்துவமாக இருந்ததால் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.

3 comments:

முரளிகண்ணன் said...

:-)))

nice one (tamil fond problem. sorry)

Nilofer Anbarasu said...

@ முரளிகண்ணன்...
:) __/\__

அர டிக்கெட்டு ! said...

ம.க.இ.க,
பு.மா.இ.மு,
பு.ஜ.தொ.மு,
வி.வி.மு
பெ.வி.மு
போன்ற அமைப்புகளை பற்றி அறிய
http://vinavu.wordpress.com
தளத்துக்கு செல்லவும்!
நன்றி