Saturday, February 14, 2009

பொய்கால் குதிரை

லாஜிக் இல்லா மேஜிக் என்ற வார்த்தை எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்த படத்திற்கு கரெக்ட்டா பொருந்தும். எந்த லாஜிக்கும் இல்லாமல் சிரிப்பு ஒன்றையே மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள். மெய்மறந்து ஒரு இரண்டரை மணி நேரம் நாம் சிரிப்பதுவே இயக்குனர் சிகரம் + கிரேசி கூட்டணியின் வெற்றி. கிரேசி மோகன் எழுதிய A Marriage Made In Saloon நாடகத்தை அப்படியே படமாக எடுத்திருக்கிறார் கே.பி. திரைக்குமுன்னே கவிஞர் வாலியையும், கதாநாயகனாக ராமகிருஷ்ணாவையும், நகைச்சுவை நடிகராக சார்லியையும் இப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமாகியிருக்கிறார்கள்.

படத்தின் ஜீவநாடியே 'பந்தய' சம்பந்தமாக வரும் வாலிதான். எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டி சும்மா பூந்து விளையாடுகிறார். பந்தயம் என்றால் சாதரணமான பந்தயம் அல்ல, ஆந்திராவில் என்.டி.ஆர் ஜெயிப்பாரா தோப்பாரா? அந்த பொண்ணு வடநாடா தென்னாடா போன்ற ரசிக்கும்படியான பந்தயங்கள். அதிலும் அந்தகால சினிமா,அரசியல் தெரிந்தவர்கள் சற்று அதிகமாகவே பந்தயத்தையும் வசனத்தையும் ரசிக்கலாம். அந்த அளவுக்கு நிகழ்காலத்தோடு ஒட்டிப்போகும் வசனங்கள். ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக கதாநாயகனே இவரை பந்தயத்திற்கு இழுக்க சும்மா சூடு பிடிக்கிறது படம். பந்தயத்தில் ஜெயிப்பதற்காக இவர்களுக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் கதையே.

வசனம் கிரேசி மோகன், தன்னுடைய இயல்பான நகைச்சுவையை இழக்காமல் அதேசமயம் கே.பி விரும்பும் எதார்த்தத்துடன் எழுதியிருக்கிறார். உதாரணத்திற்கு ஒன்று, ஹீரோ தன் அப்பாவிடம் நீங்கள் ஊருக்கு போயிட்டு திரும்பிவரதுகுள்ள ஒரு பெண்ணை காதலித்து காட்டுகிறேன் என்று சொல்லுவர், அதற்க்கு அவுங்க அப்பா "பரிட்சையிலதான் கஜினி ஸ்டைல்ல படைஎடுக்குற, அட்லீஸ்ட் காதல்லயாவது ரஜினி ஸ்டைல்ல சுருசுருப்பா இரு" என்பார். அதேபோல் கல்லூரியில் காதல் என்பதை ஒரு பாடமாக வைத்ததற்கு மாணவன் எதிர்ப்பு தெரிவிக்க, சக மாணவன் ஒருவன் எழுந்து "கமலஹாசன் கல்வி மந்திரியா வந்து சிலபஸ்ச எல்லாம் மாத்தினப்போ என்ன தூங்கிக்கிட்டு இருந்தியா" என்பர். இந்த இரண்டு வசனத்தையும் அடுத்து அடுத்து கேட்கும்போது ரஜினி, கமல் என்ற இரண்டு மிகப்பெரிய நடிகர்கள் தங்களை எப்படி ஆரம்ப காலத்தில் நிலைநிருதிகொன்டார்கள் என்பது புரிகிறது. ரஜினி ஸ்டைல், கமல் ரொமான்ஸ்.

நாயகியாக 'வத்தலகுண்டு' விஜி. நான் ஒரு ஊனமுற்றவரைதான் திருமணம் செய்துகொள்வேன் என்று மேடையில் சபதம் எடுத்துக்கொள்ளும் போதும் சரி, கிளைமாக்ஸ்ல், கொள்கையை தூக்கி குப்பையில போடுங்க என்று சொல்லும்போதும் சரி க்யூட்.....க்யூட்....க்யூட். கிளைமாக்ஸ்ல் விஜி, வாலியை பார்த்து, இவருக்கு பந்தயம் வைக்கிறத தவற வேற என்ன தெரியும் என்று கேட்க "பந்தயம் வச்சா என்னம்மா தப்பு, ராமாயணத்துல இல்லையா, வில்ல உடைக்கிறவுங்களுக்குதான் என் பொண்ணு ஜானாகிய கொடுப்பேன்னு ஜனகர் பெட்டு வைக்கலையா, சம்பந்தம் வச்சா பெட்டு, ஜனகர் வச்சா சுயம்வரமா?" என்று எதிர்வாதம் செய்யும் இடம் யதார்த்தத்தை மீறி ரசிக்கவைக்கும் இடம். நாயகன் ராமகிருஷ்ணா நல்ல எதார்த்தமான நடிப்பு ப்ளஸ் புதுமுகத்திற்கு உண்டான லேசான வெட்கம இரண்டும் கலந்து அருமையாக கேரக்டரோடு பொருந்திப் போகிறார் அல்லது பொருத்தி இருக்கிறார் கே.பி. முடி திருத்தும் இடத்தில் வாலி, ராமகிருஷ்ணா, ரவீந்தர், கமல் ஆகிய நான்கு பேருக்கு இடையில் காதல் பற்றி நடக்கும் விவாதம் எத்தனை முறை ஒன்ஸ் மோர் கேட்டாலும் தகும். ஸ்டாக்(Stock) கேரக்டர்கள் அமைப்பதில் தான் நம்பர் ஒன் என்பதை அப்போதே நிருபித்து இருக்கிறார் கே.பி. மூன்று முடிச்சு படத்தில் மனச்சாட்சி, பொய் படத்தில் விதி போல் இதில் புகைப்படமாய் இருக்கும் கமல். கமலுக்கும் முடி திருத்துபவரான ரவீந்தருக்கும் இடையில் ஒரு கற்பனை உலகத்தை படைத்தது இருவரும் பேசிக்கொளும் படி அமைத்திருப்பது இன்றும் புதுமையே.

ஒரு தலைமுறையின் புத்திசாலித்தனம் அடுத்த தலைமுறையினருக்கு காமன்சென்ஸ் என்று சொல்லுவார்கள். பல தலைமுறைகள் தாண்டி இப்போதும் கூட இந்த கதையும் திரைக்கதையும் பார்த்தல் புத்திசாலிதனமாகவே தெரிகிறது.

2 comments:

venkatramanan said...

நல்லதொரு விமர்சனம்!
//ஒரு தலைமுறையின் புத்திசாலித்தனம் அடுத்த தலைமுறையினருக்கு காமன்சென்ஸ் என்று சொல்லுவார்கள்.// உணர்ந்து ரசித்து வரிகள்.

திரைப்படத்தை இங்கு கண்டு களிக்கலாம்!

அன்புடன்
வெங்கட்ரமணன்

Nilofer Anbarasu said...

@ venkatramanan ...
தொடர் வருகைக்கு நன்றி வெங்கட்ராமன். இந்த ப்லாக்ஐ கூகிள் ரீடரில் subscribe செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன், அதற்கும் ஒரு நன்றி :)