Tuesday, June 23, 2009

ஒற்றுப்பிழை

உறையூர் மன்னன் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் உண்டான நடப்பை பற்றி படித்திருக்கிறோம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நண்பர்களாக இருந்தார்களாம், மன்னன் உயிர்விட்ட போது இவரும் உயிர்விட்டாராம். அவர்களுக்கு இடையே உள்ள அலைவரிசையை நினைக்கும்போது சற்றே மெய்சிலிர்க்க வைக்கிறது இல்ல. இப்படிதான் இன்று காலை எனக்கும் மெய்சிலிர்த்தது. கேலண்டர் பார்த்து தேதி கிழிக்கும் பழக்கம் எனக்கு அறவே கிடையாது. சில சமயங்களில் பிரதோஷம் எப்போ வருகிறது என்று பார்ப்பேன். அது கூட எப்போதாவதுதான். இன்று காலை வழக்கம் போல் கேலண்டரை கடந்து செல்லும் போது ஏதோ ஒரு உந்துதல் இன்றைய தேதி சீட்டை பார்க்கவேண்டுமென்று தோன்ற, மேல உள்ள தாள்களை கிழித்து பார்த்தால் எனக்கே ஆச்சர்யம் "கண்ணதாசன் பிறந்தநாள்" என்று போட்டிருந்தது. இது போல் சென்ற ஆண்டும் ஒரு விஷயம் இதே நாளில் நடந்ததால் புல்லரித்துவிட்டது. இந்த நாளில் அவர் சொன்ன குட்டி கதை ஒன்று உங்களுக்காக.
"குருகுல முறைக்கு பழையபடி திரும்பினாலொழிய நாடு உருப்படாது. ஒற்றுப்பிழை, அதற்கு ஒருத்தன் எழுதியிருந்தான், அதற்குப்பிறகுங்குறதுக்கு 'ப்'பண்ணாவ காணோம், அதற்க்குபிறகுன்னு எழுதியிருக்கான். அவனுக்குச்சொன்னேன் என்பதில் 'ச்'அண்ணாவை காணோம், அவனுக்குசொன்னேன்னு எழுதியிருக்கான். இந்த ஒற்றுப்பிழை இருக்குன்னு எல்லாத்தையும் திருதிப்புட்டு வாத்தியார் கீழ குறிப்பு போட்டிருக்கார் "ஒற்று்பிழை அதிகம்", 'ப்'பண்ணாவ காணோம். இந்த வாத்தியார்கிட்டதான் அவன் படிச்சாகணும்."
பின்குறிப்பு: நான் எழுதும் தமிழில் நிறைய ஒற்றுப்பிழை இருப்பதாக நண்பர்கள் சொல்வதுண்டு. திருத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் :-)

No comments: