Friday, January 08, 2010

வைகோ - நான் - போட்டோகிராபர்

கல்லூரி நாட்களை லேசாக நினைத்தால் கூட பலநூறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் முண்டியடித்துக்கொண்டு வந்து விழுகிறது. அதற்கு சாட்சியாய் சில புகைப்படங்களும்கூட. பூமியும் மனிதனின் மனமும் ஒன்று என்பது என் கருத்து. பூமிக்குள் புதைந்து கிடக்கும் பலப்பல ரகசியங்களைப்போல் மனதிலும் பலப்பல அழகிய நிகழ்வுகள் நவரசமாய் விரிந்து கிடக்கும்.இந்த நிகழ்வுகள் எப்போது வேண்டுமானாலும் யாரால் வேண்டுமானாலும் வெளிவரலாம். இந்த அழகான நிகழ்வுகள் நினைவில் தோன்றும்போது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று உடன்னிருந்தால் அந்த நிமிடங்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும். என் கல்லூரி நாட்களில் அப்படி மறக்க முடியாத சம்பவங்கள் நிறையவே உண்டு. அப்படிப்பட்ட புகைப்படங்களில் சில கீழே. ஆனால் இந்த படங்களை மட்டும் பார்க்கும் போது அந்த நிகழ்ச்சியை காட்டிலும் அந்த படத்தை எடுத்த முகம் தெரியாத கேமராமேன் தான் நினைவில் வருவார், காரணம் கீழே

முதல் படம்: இது காலேஜ்ல நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடியபோது எடுத்த படம். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் வைகோ. மேடைக்கு முன்னாள் உட்கார்ந்துகொண்டு எல்லா நிகழ்ச்சியையும் பார்த்துக்கொண்டிருந்தார். சரியாக ஏழு மணிக்கு எங்கள் டான்ஸ் ப்ரோக்ராம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் இடையில் யாரோ ஒரு ஐடியா மணி, முதலில் எல்லா Girls ப்ரோக்ராம்மையும் வைத்துவிட்டால் அவர்கள் சீக்கிரம் வீட்டுக்கு போவார்கள் அதற்கு பின்னர் பாய்ஸ் ப்ரோக்ராம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல அதன்படி ஒன்பது வரை contineousஆகா Girls ப்ரோக்ராம் அறங்கேற்றப்பட்டது. ஒன்பது ஐந்துக்கு வைகோ கிளம்பிவிட்டார். எங்களுக்கு ஒன்பது முப்பதுக்கு மேடையை கொடுத்தார்கள். சரி Girlsம் (வைகோவும்) இல்லாவிட்டாலும் பரவாயில்ல என்று மேடை ஏறி ஆடினோம். போட்டோகிராபருக்கு என் மேல் என்ன கோவமோ தெரியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் ஆடியிருக்கிறேன், ஆனால் அவர் ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்திருக்கிறார் அதுவும் ஆடிய ஐந்து பேரில் சரியாக என்னை மட்டும் கவர் செய்யாமல். படத்தை யாராவது பார்க்கும் போதோ அல்லது நான் காட்டும் போதோ ரைட் சைடுல பின்னால ஆடுறது நான்தான் அப்படீன்னு நானே அவர்கள் கேட்பதற்கு முன்னால் சொல்லிவிடுவேன். என்னுடன் பழகியவர்கள் நம்பி சிரிப்பார்கள், புதியவர்கள் நம்பியது போல் சிரிப்பார்கள்.

இரண்டாவது படம்: ஸ்போர்ட்ஸ் டே அன்று எடுத்த படம் இது. பாட்மிட்டன் போட்டியில் வெற்றிபெற்றதர்காக நாங்கள் மேடை ஏறினோம். ம.தி.மு.க தலைவர் வைகோவும், சூப்பர்ன்டென்ட் ஆப் போலீஸ் ஆபாஷ் குமார் I.P.Sம் விழாவின் முக்கிய விருந்தினர்களாக வந்திருந்தார்கள். வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வைகோ பரிசு வழங்கிக்கொண்டிருந்தார், எங்கள் பெயர் அடுத்த ஐந்து நிமிடத்தில் வரப்போகிறது என்று எங்களை அழைத்து மேடை அருகில் நிற்க சொன்னார்கள். சரியாக எங்கள் பெயர் வருவதற்கு முன்பு மேடையில் இருந்த ஒரு புரோபசர் புண்ணியவான், வைகோவை அமரும்படி கேட்டுக்கொண்டு அடுத்து வருபவர்களுக்கு ஆபாஷ் குமார் பரிசு வழங்குவார் என்று அறிவித்தார். அப்பொழுதெல்லாம் ஓரளவுக்கு வைகோவை தமிழகத்தின் இரண்டு பெரிய தலைவர்களுக்கான ஒரு மாற்று சக்தியாக மக்கள் பார்த்த காலம். அவரிடம் பரிசு வாங்குவதில் எனக்கும் ஒரு தனி சந்தோஷம் இருந்தது. அதை கெடுத்த அந்த புரோபசரை வாழ்த்திக்கொன்டிறுக்கும் போதே சக டீம் நண்பர்கள் மேடை ஏறி பரிசை தொட்டுக்கொண்டு போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள், சுதாரித்துக்கொண்ட நானும் மேடை ஏறி அவர்களோடு சேர்ந்துகொண்டேன். ஒரு வாரம் கழித்து, பரிசு வாங்கும் போட்டோ கைக்கு கிடைத்தது, பிரித்து பார்த்தேன், நான் நன்றாக தெரிந்தேன், ஆபாஷ் குமார் நன்றாக தெரிந்தார் ஆனால் வைகோவை காணோம். போட்டோகிராபர்ரின் திறமை அப்போதுதான் புரிந்தது, வைகோவை கவர் செய்யாமல் சரியாக எடுத்திருந்தார். வழக்கம்போல் இந்த படத்தை மற்றவர்களிடம் காட்டும் போதும், பின்னால கருப்பு துண்டு தெரியுதில்ல அதுதான் வைகோ அப்படின்னு நானேசொல்லிவிடுவதுண்டு.

மூன்றாவது படம்: இதுதான் எல்லாத்த விடவும் பெரிய ஹைலைட். நாலு வருஷம் படிப்பு முடிந்து அன்று காலேஜில் கான்வகேஷன் டே. சிறப்பு விருந்தினராக மீண்டும் அதே வைகோ. பொடாவில் கைதாகி சிறையிலிருந்த வைகோ, விடுதலையாகி கலந்துகொண்ட முதல் (அரசியல் சார) நிகழ்ச்சி என்பதால் பரபரபுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருந்தது. "இந்த கல்லூரி மேடையை எக்காரணத்தை கொண்டும் அரசியலுக்கு பயன்படுத்தமாட்டேன்.." என்று சொல்லி ஆரம்பித்த வைகோவின் உரையில் மாணவர்களும், பெற்றோர்களும் சொக்கிப் போனதென்னவோ உண்மை. பட்டமளிப்பு விழா ஆரம்பம் ஆனது, இந்த முறை எப்படியும் அவருடன் போட்டோ எடுத்துவிடவேண்டுமென நினைத்துக்கொண்டேன். வைகோவும், துணைவேந்தரும் மாறி மாறி ஒவ்வொரு மாணவருக்கும் பட்டத்தை கொடுத்துக்கொண்டிருந்தார்கள், வாங்கிய மாணவர்கள் இருவருக்கும் இடையே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்கள். நானும் சென்றேன், பட்டத்தை வாங்கினேன், புகைப்படம் எடுத்தேன், இந்த முறை எப்படியும் போட்டோவில் வைகோவுடன் நாம் நன்றாக தெரிவோம் என்று எண்ணிக்கொண்டு கீழே இறங்கி வந்தேன். விழா முடிந்தவுடன் காலேஜ் ஆபீஸ்ல் இருந்து வந்த ப்யூன் ஒருவர் கான்வகேஷன் போட்டோ வேண்டுமென்பவர்கள் ரூ 100 செலுத்தி அட்ரஸ் கொடுத்துவிட்டு போனால், கொரியரில் போட்டோ அனு்பப்படும் என்று சொன்னார். முதல் ஆளாக நூறு ரூபாயும் அட்ரஸ்ம் கொடுத்துவிட்டு வந்தேன். அனுப்புகிறார்கள், அனுப்புகிறார்கள் ஆறு வருடமாகி இன்னமும் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். "முதல்ல எல்லாம் காரணத்த சொல்லிட்டு அடிப்பானுங்க, ஒரு ஆறுதலா இருக்கும், இப்ப எல்லாம் காரணமே சொல்லாம அடிக்குரானுங்க" என்று வடிவேலு சொல்வது போல், முன்னாடி எல்லாம் எனாதானோனு எடுத்த போட்டோவயாவது காட்டுனானுங்க, ஒரு ஆறுதலா இருந்தது, இப்ப அதையும் காட்ட மாட்டேனுரானுங்க, நெனச்சாலே குறுகுறுன்னு இருக்கு. ஹும்ம்ம்.

KEYWORDS: P.S.R ENGINEERING COLLEGE, SIVAKASI, PSREC, SEVALPATTI.

3 comments:

செந்தில் நாதன் said...

ஹீ.ஹீ..நல்ல நடை.. மூன்றாவது பாரா முழுக்க புகை படத்த தேடிகிட்டே படித்தேன்..

Nilofer Anbarasu said...

@ செந்தில் நாதன் ...
//மூன்றாவது பாரா முழுக்க புகை படத்த தேடிகிட்டே படித்தேன்..//
நானே இன்னும் தேடிக்கிட்டுதான் இருக்கேன். எனக்கே இன்னும் கிடைக்கல :-)
வருகைக்கு நன்றி.

@ Anonymous ...
உங்கள் மறுமொழியில் உள்ள லிங்க் ஒரு அநாகரிகமான தளத்திற்கு அழைத்துச் செல்வதால் இங்கிருந்து நீக்கப்படுகிறது.

☼ வெயிலான் said...

வேதனையளிக்கும் செய்திகளை வேடிக்கையாக சொல்லியிருக்கிறீர்கள்!

நல்லவேளை வை.கோ எங்கள் கல்லூரிக்கு வரும்போது நான் படம் எடுக்க முயற்சிக்கவில்லை :)