Sunday, December 14, 2008

எண்ணங்கள் ஆயிரம்: அறிவியலை மிஞ்சும் ஆன்மீகம்

புத்தகம்: எண்ணங்கள் ஆயிரம்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
விலை: ரூ.15

கண்ணதாசனுடைய பெரும்பாலான புத்தகங்களை படித்திருந்தாலும் இந்த புத்தகம் தான் என்னுடைய ஆல் டைம் பேவரைட். மிகப்பெரிய வீடாயினும் அதை திறப்பதற்கு ஒரு சிறிய சாவி வேண்டியிருப்பதைப் போல், 62 பக்கமே கொண்ட இந்த புத்தகம் உங்கள் மனதை திறக்கும் ஒரு சாவி என்றால் அது மிகையல்ல. புத்தகத்தை படிப்பதன் மூலம் நிச்சயம் உங்களுடைய எண்ணங்கள் விசாலமடையும். எதையும் தாங்கும் ஒரு பக்குவம் ஏற்ப்படும். படித்து முடிக்கும் போது, இந்த தலைப்பு எவ்வளவு பொருத்தமானது என்பதை நம்மால் உணர முடியும். நேற்று வந்த எழுத்தாளருடைய புத்தகங்கள் கூட 100 ரூ, 150 ரூபாய் விற்கும் போது 18 கட்டுரைகள் கொண்ட இந்த புத்தகம் வெறும் 15 ரூபாய்தான். நல்ல ஹோட்டல்களில் இன்றைக்கு ஒரு வேலை சாப்பாடு கூட 25 ருபாய் விற்ப்பதை நினைக்கும் போது இந்த புத்தகத்தின் விலை ஒரு ஆச்சரியமே.

2003வரை மொத்தம் 23 பதிப்புகள் வெளிவந்துள்ளன. February 2004ல் இந்த புத்தகத்தை வாங்கினேன். அன்றிலிருந்து இன்று வரை நான் படிப்பதற்காக வெளியூர் சென்ற போதும் சரி வேலை நிமித்தமாக வெளிநாடு வந்த போது சரி இந்த புத்தகமும் என்னோடு பயணித்திருக்கிறது. கிட்டத்தட்ட 20 முறைக்கு மேலேனும் படித்திருப்பேன், ஒரு முறை கூட அலுப்பு தட்டியதே இல்லை. இத்தனை முறை படிப்பதற்கு இது என்ன வேத நூலா என்று யாரேனும் கேட்டால், 'அதற்கும் மேலே' என்பதுவே என் பதிலாக இருக்கும்.

"சில ஆண்டுகளுக்கு முன்னாள் நண்பர் 'சோ' அவர்கள், தனது 'துக்ளக்' பத்திரிக்கையில் ஏதாவது எழுதவேண்டுமென்று கேட்டார். 'எண்ணங்கள் ஆயிரம்' என்ற தலைப்பையும் அவரே சொன்னார். சில காலம் அந்த தலைப்பில் எழுதிவந்தேன்." என்று இந்த புத்தகம் உருவான கதை பற்றி கவிஞரே முன்னுரையில் சொல்லுகிறார். பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பது தெரியாமலே எப்படி பெயர் வைக்கமுடியும் என்று பலரும் கேட்கும் நிலையில், பெயர் வைத்துவிட்டு பெயருக்கு தகுந்தாற்ப்போல் 18 குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறார் கவிஞர்.

18 கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்று சொல்லுவதைக் காட்டிலும் பலதரப்பட்ட எண்ணங்களை அழகாக எழுத்தாக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். தன்னம்பிக்கை, அரசியல், ஆன்மிகம், காமராஜர், நேரு, இந்திரா, இந்தியா, ஜனநாயகம் என்று ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொன்றை/ஒவ்வொருத்தரை எடை போடும் தராசாகவே தெரிகிறது.

நேருவைப் பற்றிய கட்டுரையில், மக்கள் அவர் மீது கொண்டிருந்த அன்பின் பிரதிபலிப்பாகவே உள்ளது. நேருவின் மறைவைப் பற்றிய இரண்டு பக்க கட்டுரையில்,
"உன் ஆசையின் விளைவே அரசியல் சட்டம். எங்கள் அனுபவத்தின் விளைவே அதில் நாங்கள் செய்யும் திருத்தம். கடலளவு மனம் படைத்த கருணைத் தலைவனே !. மன்னனாக பிறந்து, மனிதனாக வாழ்ந்து, தெய்வமாக மறைந்த மரகதச் சிலையே !. எங்கள் மனமே உன் கோவில். உன் திருமுகமே நாங்கள் ஆராதிக்கும் சிலை" என்கிறார். நேரு எப்படி வாழ்ந்தார், அவருடைய மறைவு எப்படிப்பட்ட ஒரு வெற்றிடத்தை நாட்டில் ஏற்படுத்தியிருந்தது என்பதற்கு இந்த கட்டுரை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

"கோழிக்குஞ்சைப் பிடித்துவிட்ட தைரியத்தில், யானையையும் பிடிக்க ஒருவன் தயாராகிறான். கேரம்போர்டில் வெற்றி பெற்றுவிட்ட மயக்கத்தில் கிரிக்கெட் பந்தயத்திற்கு ஒருவன் தயாராகிறான். நம்பிக்கை தரும் வெற்றிகளைக் காட்டிலும் தோல்விகள் அதிகம். நம்பிக்கையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள், மிருகங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். தங்கள் சக்திக்கேர்ப்பவே அவைகள் நம்பிக்கை வைக்கின்றன." என்று 'நம்பிக்கை' என்னும் கட்டுரையில் வெற்றியும் தோல்வியும் மனிதனின் மனதை எந்தளவுக்கு பாதிக்கின்றன என்று சொல்லுகிறார். இது போன்ற வரிகளை படிக்கும் போது, பக்கத்தின் இடதுபக்கமோ அல்லது வலதுபக்கமோ பென்சிலால் கோடுபோடுவது என் வழக்கம். இந்த புத்தகத்தை படித்து முடித்த்தபோது மொத்த புத்தகமும் கோடாகிப்போயிருந்தது. குழந்தையின் சிரிப்பைப்போல, சில வரிகள் சோர்வடையும் போதெல்லாம் நினைவில் வந்து சாமரசம் வீசுகின்றன. அப்படி அனுபவித்து படித்த வரிகள் சில...

"மனிதன் வெளியில் இருந்து விளையாடுகிறான்; தெய்வம் மறைந்து நின்று விளையாடுகிறது. தெய்வத்தை நம்புகிறவன், தோற்றாலும் ஜெயிக்கிறான்; நம்பாதவன் ஜெயித்தாலும் தோற்கிறான்."

"நீ கிறுக்கியதெல்லாம் ஓவியமானால், குறுக்கே நின்று அதை திருத்தியவனுக்குப் பெயர்தான் பகவான்."

"'நான்' என்று நினைக்காதீர்கள்; நினைத்தால் ஆண்டவன் 'தான்' என்பதைக் காட்டிவிடுவான்."

"எதிலிருந்து ஜனனம் நிகழ்கிறதோ, அதிலே ஆண்டவன் இருக்கிறான். அதில் ஆபாசம் என்ன இருக்கிறது."

"பத்து பேர்களின் தகத்தை தீர்த்து விட்டு பாறையைத் தோண்டிப் பாருங்கள்; தண்ணீர் கிடைக்கும்." என்கிறார். அறிவியலை மிஞ்சும் ஒரு ஆன்மீகமாகவே இந்த புத்தகம் எனக்கு தோன்றுகிறது.

இரவு ஏழு மணிக்கு மேல் தெருவின் மூலையில், சிம்மினி விளக்கின் வெளிச்சத்தில், ஒரு சிறிய லேகியத்தை காட்டி, உஷ்ணம், வாய்வு, பித்தம், என்று உலகில் உள்ள எல்லா வியாதிகளையும் சொல்லி அதற்கெல்லாம் ஒரே மருந்து இந்த லேகியம் என்று சிலர் விற்றுக்கொண்டிர்ப்பார்கள். அத்தனை வியாதியையும் அந்த லேகியம் குணமாக்குகிறதோ இல்லையோ இந்த புத்தகம் குணமாக்கும் என்பேன் காரணம், James Bryce சொன்னதைப் போல் "The worth of a book is to be measured by what you can carry away from it." இந்த புத்தகத்தில் இருந்து எனக்கு பிடித்த கட்டுரை ஒன்று இங்கே.

குறிப்பு: புத்தகத்தின் அட்டைப்படம் கிடைத்தால் போடலாம் என்று google image searchல் 'எண்ணங்கள் ஆயிரம்' என்று போட்டு தேடிப்பார்த்தேன், முதலில் வந்தது வாரணம் ஆயிரம் சூரியாதான். கடைசி வரை தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. நேரம் கிடைக்கும் போது ஸ்கேன் செய்து போடுகிறேன். நன்றி.

No comments: