Thursday, January 01, 2009

சினிமா புள்ளி விபர விளையாட்டு - Meme

ப்ளாக்கில் இது வரை வந்த தொடர் விளையாட்டுக்களிலேயே மிகவும் வெற்றிபெற்ற தொடர் என்று இதை சொல்லலாம். கிட்டத்தட்ட எழுதாதவர்களே இல்லை என்னுமளவுக்கு மிகப்பெரிய ரீச் ஆனா ஒரு தொடர். நாகர்ஜுனனால் ஆரம்பிக்கப்பட்டு போஸ்டன் பாலவின் மூலம் பாப்புலர் ஆனா இந்த Meme (எனக்கு நானே) நானும் தொடர்வதில் சந்தோஷமே. இந்த விளையாட்டை தொடர்வதற்கு என்னையும் அழைத்த கௌரி மற்றும் பூச்சான்டியார் இருவருக்கும் என் நன்றி. தொடர்ந்து வந்த கேள்விகள் போக இரண்டொரு கேள்விகள் எக்ஸ்ட்ரா கேட்டு பதில் சொல்லியிருக்கிறேன்.


1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
சரியாக நினைவில்லை.
1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
'முதல் மரியாதை' - அப்பா அம்மாவுடன் திருச்சியில் பார்த்ததாக நினைவு.
1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?
படம் பார்த்துவிட்டு வெளிய வரும்போது, என்னப்பா முதல் மரியாதைன்னு பேரு வச்சுட்டு எல்லாரும் மரியாதை இல்லாமல் பேசுறாங்க என்று நான் கேட்க எல்லோரும் சிரித்துவிட்டார்கள்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
ச-ரோ-ஜா

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
பொம்மலாட்டம். ஆன்-லைனில். நானா படேகருக்குப் பதில் அந்த கேரக்டரில் மம்மூட்டியை போட்டு தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியிட்டிருந்ததால் மிகப்பெரிய வெற்றிப்பெற்றிருக்கும் என்று தோன்றியது. இது போன்ற தரமான த்ரில்லர் படங்கள் மலையாளத்தில் நிச்சயம் வெற்றிபெறும்.

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
கதிர் இயக்கிய இதயம். நான் அதிக முறை பார்த்த சினிமாவும் இதுதான். படத்தின் இடையிடையே காட்சிகளின் பின்னணியில் கதிரின் குரலில் வரும் சின்ன சின்ன கவிதைகள் ரொம்பவும் பிடிக்கும்.
இந்த பாதங்கள் மண் மீது நடக்கவேண்டியவை அல்ல......
மலர்கள் மீது.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
விருமாண்டி. சண்டியர் என்று பெயர் வைத்ததை எதிர்த்து நடந்த போராட்டங்களும் கண்டனங்களும் ரொம்பவும் கீழ்த்தரமானவை. கமல் போன்ற பெரிய நடிகர்களே இந்த மாதிரி விஷயங்களில் பின்வாங்கும் போது , சிறு கட்சியாக இருந்தாலும் ஒரு அரசியல்வாதியை எதிர்ப்பது அவ்வளவு சுலபமல்ல என்பது புரிந்தது .

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
மிகவும் தாக்கிய தமிழ் சினிமா நிறைய உண்டு. அதில் சில, நாயகன், மௌன ராகம், லவ் டுடே, காதல் கொண்டேன், ஜூலி கணபதி, உன்னை சரணடைந்தேன். தாக்கிய தொழில்நுட்ப சம்பவம் - குட்டையாக வரும் அப்பு கமலும் வெள்ளையாக வரும் சிவாஜி ரஜினியும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறைய. கிட்டத்தட்ட பொழுதுபோக்கே அதுதான். தினத்தந்தியில் வரும் குருவியார் பதில்,வரலாற்று சுவடுகள், வாரமலரில் வரும் துணுக்குமூட்டை, வண்ணத்திரையில் வரும் குட்டி குட்டி சினிமா செய்திகள் ரொம்ப பிடிக்கும். இந்தியாவில் இருந்த வரையில் விகடன் தவறாமல் படிப்பேன். இப்பொழுதெல்லாம் ஆன்-லைனில் குமுதம், sify படிப்பதோடு சரி.

7. தமிழ்ச்சினிமா இசை?
பாடல் வரிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். இன்ன மாதிரியான இசை என்று குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இசையறிவு கிடையாது. அனைத்து வகை பாடல்களும் பிடிக்கும். இளையராஜாவின் பழைய பாடல்கள், ரகுமானின் புதிய பாடல்கள், யுவன் ஷங்கரின் அனைத்து பாடல்களும் பிடிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆரம்பத்தில் இல்லை. தற்போது நிறைய ஹிந்தி மற்றும் ஆங்கில படங்கள் பார்க்கிறேன். பிடித்த படங்கள் சத்யா, Wednesday, Monsoon Wedding, Phone Booth, American Gangster, Kill Bill, Gladiator, The Terminal, The Shawshank Redemption, 16 Blocks, The Prestige.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடித் தொடர்பு எதுவும் இல்லை

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தயாரிப்பில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரவு, தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா என்பது போகப்போகத்தான் தெரியும். இன்றைய நிலையில் கார்பொரேட் நிறுவனங்களால் நடிகர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதை தவிர வேறு ஒரு முன்னேற்றமும் கிடையாது. நடிகர்களின் கால்ஷீட்ஐ வாங்கி வைத்துக்கொண்டு கதைக்காக அலைகிறார்கள், இது ஒரு மோசமான போக்கு. அதே போல் இந்த நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளை வாங்கி வைத்திருக்கிறார்கள், தங்கள் நிறுவனம் தயாரிக்கும் அல்லது விநியோக உரிமை வாங்கும் படங்களை மட்டும் அதில் வெளியிட்டு, குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் சில நல்ல படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் செய்கிறார்கள். இதுவும் ஒரு மோசமான போக்கே. இது போன்ற விஷயங்களை தவிர்த்துப் பார்த்தால் இந்திய அளவில் பேசப்படும்படியான மெகா ஹிட் படங்களை வருங்காலத்தில் கோலிவுட் நிச்சயம் தரும் என்று தோன்றுகிறது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இது நிச்சயம் நடக்க வாய்ப்பு இல்லை. ஒரு வேலை நடந்தால், தமிழர்களுக்கு பைத்தியம் பிடித்தது போல் இருக்கும், மக்கள் நிறைய சிந்திப்பார்கள், அதனால் பல நல்ல ஆக்கப்பூர்வமான விஷயங்கள் தமிழ்நாட்டில் நடக்கும்.

12. தமிழ் திரையுலகை விட்டு ஒதுங்கியிருக்கும் அல்லது வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கலைஞர்களில் நீங்கள் அதிகம் விரும்பும் நபர்கள் யார் யார்?
நடிகர் பிரதாப் போத்தன், 'காக்கா' ராதாகிருஷ்ணன், 'இதயம்' கதிர், 'லவ் டுடே' பாலசேகரன், ஒளிப்பதிவாளர் அப்துல் ரகுமான்.

13. அதிக நாட்களாக நீங்கள் பார்க்க வேண்டிய லிஸ்டில் இருக்கும் படங்கள் எவை?
தண்ணீர் தண்ணீர், புன்னகை, அவள் அப்படித்தான், குரோசோவாவின் இகிரு, சத்யஜித் ரெயின் பதேர் பாஞ்சாலி.

இந்த விளையாட்டை தொடர்வதற்காக விதிமுறைப்படி நான் ஐந்து பேரை அழைக்கவேண்டும், ஜெஸிலா, ஜன்னல், கிறுக்கல் ஆகியோரை அழைக்கிறேன். எனக்கு தெரிந்து இந்த மூவரை தவிர அனைவரும் எழுதிவிட்டார்கள், ஆகையால் புதிதாக வந்த பதிவர்கள் யாரேனும் விருப்பமிருப்பின் இங்கிருந்து தொடரலாம்.

Picture Courtesy: Photo.net, SpbIndia, College Publisher, Tamil Oviyam, India Film, SeventyMM

2 comments:

Jazeela said...

நிலூ, உங்க பதிவு அருமை. பதில்களில் சிலதோடு நானும் ஒத்துப் போவேன். இது என்ன விளையாட்டு, எப்படி விளையாட வேண்டும். இதே கேள்விக்குதான் நானும் பதில் எழுத வேண்டுமா என்று எக்கச்சக்க சந்தேகங்கள். என்னை ஒதுக்கிவிடாமல் என்னையும் விளையாட்டில் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி.

Nilofer Anbarasu said...

//எக்கச்சக்க சந்தேகங்கள்//
ரொம்ப சிம்பிள். இந்த பதிவில் உள்ள கேள்விக்கு பதில் சொல்லப்போறீங்க, உங்க மலரும் நினைவுகளை பதிவிடப்போகிறீங்க. இந்த பதிவின் முதல் பத்தியில் உள்ள கௌரி, பூசான்டியார், பாலா லிங்க்ஐ கிளிக் செய்து பார்த்தால் இன்னும் தெளிவாக புரியும் :)