40 வயதிற்கு பிறகு பல மாற்றங்கள், உடலிலும் மனதிலும்.
அதில் ஒன்று தெய்வ நம்பிக்கை.
எப்போதும் ஆஸ்திகனாகவே நான் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மீதான நம்பிக்கை என்பது மாறி மாறி எனக்கு இருந்திருக்கிறது. எனக்கு தெரிந்து 7வது 8வது படிக்கும் போது வெள்ளை uniform சட்டையில் உள்ள மேல் பாக்கெட்டில் கற்பக விநாயகர் படத்தை வெகு நாட்கள் வைத்துக்கொண்டிருந்தது நினைவு இருக்கிறது.
ராயவரத்தில் படிக்கும் போது, ஹாஸ்டெலுக்கு நேர் எதிரே ஊரணிக்கு அருகில் ஒரு மரத்தடி பிள்ளையாரை அங்கு இருந்த ஒவ்வொரு நாளும் போகும் போதும் வரும் போதும் கும்பிட்டு விட்டு தான் சென்றிருக்கிறேன்.
17 / 18 வயது இருக்கும் போது, ஊரில் உள்ள சிவன் கோவில் நம்முடைய முன்னோர்கள் காட்டியது என்பது தெரியவந்த போது, என்னையும் அறியாமல் பிரதோஷ வழிபாட்டின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டு, சிவகாசியில் படித்தபோது, ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் விரதம் இருந்து, மாலை சங்கரன்கோவில் சென்று தரிசனம் செய்த பிறகே சாப்பிடுவேன்.
இதற்க்கு இடையில் பழனி, திருப்பதி, திருவண்ணாமலை, தாய் மூகாம்பிகை, குருவாயூர், மும்பையில் உள்ள சித்தி விநாயக், கோல்கட்டாவில் உள்ள காளி, உடுப்பி கிருஷ்ணன், காசி, கயா என்று பிரசித்தி பெற்ற அணைத்து ஸ்தலங்களுக்கு போய் வந்திருக்கிறேன். பல ஆறு, குளம் , கடல் என நீர் நிலைகளில் புனித நீராடி வந்திருக்கிறேன்.
இந்த நிலையில், இப்படி இருந்த வழிபாட்டு முறையில், கடந்த சில ஆண்டுகளாக ஒரு மாற்றத்தை உணர்கிறேன். யாரும் சொல்லி இந்த மாற்றம் வரவில்லை, தானாகவே நிகழ்திருப்பதாகவே உணர்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், தாய் தந்தையின் மறைவுக்கு பிறகு இந்த மாற்றம் நிகழ்திருப்பதாக உணர்கிறேன். இப்போது எல்லாம் வெளியூர் கோவில்களுக்கு எல்லாம் அதிகம் செல்வதில்லை, அல்லது செல்லவே இல்லை என்றும் சொல்லலாம். அதே நேரத்தில், என் வழிபாட்டில் நம்பிக்கையோ பக்தியோ குறைந்துவிடவில்லை. மாறாக, எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கீழ்கண்ட வரிசையிலேயே என்னுடைய வழிபாடு என்பது மாறி இருக்கிறது.
1. வீட்டு தெய்வம்:
எங்கள் பகுதிகளில் இதை 'படைப்பு' என்று சொல்லுவார்கள். நமக்கு முந்தைய தலைமுறைகளில் வாழ்ந்து மறைந்த ஒருவரைத் தெய்வமாகக் கருதி வழிபடுவது இது. பொதுவாக, நான்கு முதல் ஆறு தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களாக இருப்பார்கள். சில வீடுகளில், இந்த வழிபாட்டிற்கென்றே தனி அறையும் இருக்கும்.
என் பெற்றோர்களாலும், ஐயா, அப்பத்தாக்களாலும் வழிபடப்பட்டவர்கள் என்பதாலேயே, இந்த வீட்டு தெய்வத்தின் மீது எனக்கும் நம்பிக்கையும் பக்தியும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் வழிபட்ட தெய்வத்தை நாமும் தொடர்ந்து வழிபடுகிறோம் என்பதில் ஒரு மனநிறைவு இருக்கிறது.
2. பித்ரு தெய்வம்:
என் வழிபாட்டு முறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது பித்ரு தெய்வ வழிபாடுதான். நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை வழிபடும்போது, அவர்களுடைய ஆசீர்வாதம் நமக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை கிடைக்கிறது. நம்மை வளர்த்து, வாழ வழிகாட்டியவர்களை நினைவுகூர்ந்து வணங்கும்போது, அவர்களை மீறி நமக்கு என்ன நடந்துவிடப்போகிறது என்ற ஒருவிதமான பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது.
அமாவாசை, மாத பிறப்பு, வருடாந்திர திதி, மகாளய பக்க்ஷம், போன்ற நாட்களில் இவர்களை வழிபட மறப்பதில்லை.
3. குல தெய்வம்:
தலைமுறை தலைமுறையாக வழிபாடு செய்யப்பட்டு வரும் தெய்வம் என்றால் அது குலதெய்வம்தான்.
நம் முன்னோர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வீடுகளில் வாழ்ந்திருக்கலாம். அவர்கள் வாழ்ந்த வீடுகள் எங்கே இருந்தன என்பதுகூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் அனைவரும் வழிபட்ட இடம் இதுவாகத்தான் இருந்திருக்கக்கூடும். அந்தத் தொடர்ச்சியே குலதெய்வ வழிபாட்டின் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட ஈர்ப்பை ஏற்படுத்தியது.
கத்தப்பட்டு பூஜையன்றும், சிவராத்திரி அன்றும் முடிந்தவரை வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுவிடுவதுண்டு.
4. இஷ்ட தெய்வம்:
இப்படி நான் உணர்ந்த தெய்வம் தான் கும்பகோணத்துக்கு அருகில், ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள கல் கருடன். எந்த ஜோசியரும் சொல்லி இங்கு செல்லவில்லை, நானாகவே உணர்ந்து வழிபடும் தெய்வம். இரண்டு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை இங்கே எப்படியும் ஒரு முறை சென்று விடுவதுண்டு.
இந்த நான்கு வழிபாடுகள் போதும்!
இந்த தெய்வங்கள் போதும் என்ற அடிப்படையில், இவைகளை மட்டுமே பிரதானமாக வழிப்பட்டு வருகிறேன்.
இது என்ன தருகிறது?,
மிகப் பெரிய நம்பிக்கையை தருகிறது. 'இது போதும்' என்ற எண்ணத்தை தருகிறது. 'இன்றைக்கு அளந்தபடி என்றைக்கும் அளந்திட வேண்டும்' என்பதே என்னுடைய பிரதான வேண்டுதலாகவும் இருக்கிறது.
'நீ கிறுக்கியதெல்லாம் கோலம் என்றால் அதை குறுக்கே நின்று திருத்தியவனுக்கு பேர் தான் ஆண்டவன்' என்று கண்ணதாசன் சொல்லுவார், அந்த ஆண்டவன் வேறு யாருமில்லை; என்னைப் பொறுத்தவரை, இந்த நால்வர்தான்!.
நான் கிறுக்கிக்கொண்டே போகிறேன், இவர்கள் அதை கோலமாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்.



2 comments:
அருமையான பதிவு தம்பி
Super
Post a Comment