Saturday, July 17, 2021

கலைஞர் காவியம் - வாலி


    லைஞரின் வாழ்க்கை வரலாறு  தமிழ்நாட்டில் 20 வயதை கடந்தவர்கள் யாருக்கும்  அறியாத ஒன்றோ தெரியாத ஒன்றோ அல்ல. அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்து  இருப்பினும், அவரை பற்றி அனைவருக்கும் தெரியும். யாரேனும் தெரிந்து கொள்ள விரும்பினால், இருக்கவே இருக்கிறது அவர் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் அடங்கிய புத்தகம் 'நெஞ்சுக்கு நீதி'.  இப்படி நாடறிந்த ஒருவரை பற்றி நாம் (மீண்டும்) சொல்ல வரும் போது, அதுவும் அவர் முன்னிலையிலேயே அது புத்தகமாக வெளிவரும் போது, ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரையும் கவர வேண்டும். இந்த புத்தகம் அதை கச்சிதமாக செய்திருக்கிறது. தெரிந்த சம்பவங்களை கதையாக சொல்லாமல் கவிதையாக சொல்லியிருக்கிறது.  

புத்தகம்: கலைஞர் காவியம் 
எழுதியவர்: காவியக் கவிஞர் வாலி 
வெளியீடு: குமரன் பதிப்பகம் (2006)
விலை: ரூ 100

வாலி கலைஞரின்  மேல் கொண்ட காதல் தான் இந்த புத்தகம், சாதாரண மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் ஒருவரால் இப்படி எழுத முடியாது. வாலியின் வரிகளில் தான் எவ்வளவு அன்பு, எவ்வளவு காதல்;  கலைஞரின் மேல் காதல், கலைஞர் தமிழின் மேல் காதல், எல்லாம் சேர்ந்து நமக்கு புத்தகத்தின் மேல் காதலை ஏற்படுத்தும். பக்கத்துக்கு பக்கம் கவிதை மழை , வார்த்தைக்கு வார்த்தை புகழ்ச்சி. கலைஞரின் பெற்றோர், திருக்குவளை, பெரியார், அண்ணா, தி.மு.க, சினிமா, வசனம், தொல்காப்பியப்  பூங்கா என்று ஒவ்வொன்றையும் கவிதையாக்கியிருக்கிறார் வாலி.

நீ 
எவரோ யாரோ அல்ல;
நான் 
ஏழெட்டு வரிகளில் சொல்ல!

- என்று சொல்லும் வாலி, கலைஞர் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அணு அணுவாய் ரசித்து எழுதியிருக்கிறார். அவருடைய கவிதை நடை, சொல்லும் உவமை என எல்லாம் கலந்து நம்மை மயக்குகின்றன. ஏதோ அணைத்து கவிதைகளையும் இலக்கிய தரத்தில் மட்டுமே எழுதியிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். ஹைக்கூவும் உண்டு, நகைச்சுவையும் உண்டு.
உதாரணத்திற்கு, 

நீ
மேற்கு இல்லாத கிழக்கு;
வடக்கு வழிபடும் தெற்கு!

என்று அவருடைய அரசியல் ஆளுமையை சொல்லும் வாலி, அவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமணையில் அனுமதித்திருந்தபோது தொண்டர்களின் எண்ணத்தை இப்படி சொல்லுகிறார்.

சமீபத்தில் சிறு 
ஆரோக்கியக் குறைவால் 
அஞ்சாறு நாள்கள் 
அய்யா நீ சேர்ந்திருந்தாய் 
அப்பல்லோ;
அடடா!
அருந்தமிழ்த் தாய் 
அலைபாய்ந்து நின்றது 
அப்  பல்லோ;

ஆனாலும் எங்களை இப்படி நீ 
அச்சுறுத்தல் தப்பல்லோ;
21 பகுதிகள் கொண்ட இந்த புத்தகம் - கலைஞரின் தாய் தந்தை முதல் அவரது பிறப்பு,  இளமைப்பருவம், அரசியல், எழுத்து என அனைத்தையும் தொட்டு செல்கிறது. 
சிறு வயதில் படம் வரைந்துகொண்டிருந்த வாலியை கலைஞரின் படங்கள் தான் பாடல் எழுத தூண்டின என சொல்கிறார் . ஆனால் அதை வார்த்தையாய் சொல்லாமல் கவிதையாய் சொல்கிறார். 

பாலியத்தில் 
படம் வரைந்த என்னை - உனது 
படங்கள்தாம் 
பாட்டு வரையப்  பண்ணின;
நீ 
நிர்க்கச் சொல்லும் இடத்தில 
நிற்பவன் நான்;
இன்னமும் 
இருந்தமிழை - உன் 
காலடி நிழலில் நின்று 
கற்பவன் நான்;
நீயெனக்கு 
நிரம்பப் பிடித்தமானவன்; நான் 
உனக்குத் தெரியாமலே  
உன்னிடம் படித்த மாணவன்!

 தமிழக அரசியல் வரலாற்றை யாரேனும் எழுத துணிந்தால் கலைஞரை தவிர்த்து எழுத முடியாது என்பது கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் அறிந்த ஒன்று. 1940 முதல் 2018 வரை நேரடியாகவோ மறைமுகமாகவோ  தமிழக அரசியல் போக்கை தீர்மானித்தவராக இருந்திருக்கிறார். 1967ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை (அண்ணாவோடு இணைந்து) வீழ்த்தியவரும் அவரே, 1972ல் அ.தி.மு.க என்னும் கட்சி உதயமாவதற்கு காரணமானவரும் அவரே. அரசியல் ரீதியாக அவரின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இருக்கலாம் ஆனால் தமிழ்த்தாயின் தலைமகனாக ஒட்டு மொத்த தமிழ்நாடும் முழுமனதோடு அவரை ஏற்றுக்கொண்டனர், அந்த கரகரப்பான குரலில் இருந்து வெளிவரும் தமிழுக்காக காத்துக்கொண்டிருந்தனர், மயங்கிப்போய் கிடந்தனர். தமிழ் என்கிற ஒற்றை ஆயுதத்தை வைத்து அவர் வீழ்த்திய எதிரிகள் ஏராளம் ஏராளம், அவர் வென்ற வெகுஜனம் அனேகம் அனேகம்.இப்படி பலரும் ரசித்த கலைஞரை ஒரு கவிஞனும் ரசித்திருக்கிறார், தன்  தமிழால் அவரை இந்த புத்தகத்தில் ஆராதித்திருக்கிறார். நாம் அறிந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் தன்  தமிழால் புதுமையாய் சொல்லியிருக்கிறார்.

உதாரணத்திற்கு, 1924இல் கலைஞர் பிறந்தார் - இது நாடறிந்த செய்தி. அதையே வாலி 

அஞ்சுகம் 
அம்மையார் ..
மூன்றாம் முறையாக - 
முழுகாது நின்றார்;
மசக்கை நேர்ந்து -
மாங்காய் தின்றார் !

கதிர்க் கன்று ஒன்று 
கண்  விழித்தது; அது 
கண் விழித்த வேலை - இந்த 
மண் விழித்தது!

'பின்னாளில்' - இந்தத் 
தென்னாட்டில் நடக்கும்! - தன் 
பிள்ளையின் ஆட்சி! என ...
அந்நாளில் - 
அறிந்திருக்க நியாயமில்லை
அந்தப் பிள்ளைத்தாய்ச்சி!

நீங்கள் உரைநடையாய்  படித்து தெரிந்து கொண்ட ஒரு செய்தியை இப்படி கவிதையாய் படிக்கும் போது உங்களை அறியாமல் உங்கள் உதடுகள் சிரிக்கும்; உள்ளம் ரசிக்கும்.

அதேபோல், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கலைஞராலும், ஒரு ரூபாய்க்கு ஒரு போன் கால் தயாநிதியாலும் கொண்டுவரப்பட்டு மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற  திட்டம், அடித்தட்டு மக்கள் கொண்டாடிய திட்டம். இந்த திட்டத்தை வாலி இப்படி சொல்லுகிறார்.

நீ விருட்சம்; 
நினது  பேரன் விழுது;
என்ன காரணம் எனில் 
உன்னுடைய உதவி --
இரு ரூபாய்க்கு ஒரு கிலோ;
உன் பேரனின் உதவி --
ஒரு ரூபாய்க்கு ஒரு ஹலோ!

தமிழ்நாட்டில் இருந்துகொண்டே இந்திய அரசியலை தீர்மானித்தவர், இவரை பார்க்க சோனியாவும், ராகுலும், ஏனைய மத்திய அமைச்சர்களும் சென்னைக்கு பலமுறை வந்திருக்கிறார்கள். திரைப் பிரபலங்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், மடாதிபதிகள் என அனைவரும் இவரின் தரிசனத்திற்காக காத்துக்கிடந்த காலங்கள் உண்டு. இது போன்ற சம்பவங்களை புகழின் உச்சியில் வைத்து கொண்டாடுகிறார் வாலி. 

செங்கோட்டை 
உன் கோட்டை; 
தலைவா! அது 
தாண்டுமா நீ கிழித்த கோட்டை?

எது 
எப்படி யிருப்பினும் 
திருக்குவளை சொல்லி இனி 
தலையாட்டும் டில்லி!

நீ 
பரத நாட்டியமும் அறிந்தவன்;
பாரத நாட்டியமும் புரிந்தவன்! 
நான் சாதாரணமாக ஒரு விஷயத்தை உள்ளது உள்ளபடி சொன்னால் அது உண்மை. அதுவே கவிஞர்கள் சொன்னால் அது உரக்கச் சொல்லும் உண்மை.  கலைஞர் அரசு இயந்திரத்தை நன்கு  அறிந்தவர், இயற்கையாகவே நிர்வாக திறமை கொண்டவர் என்று நான் சொன்னால் அது உண்மை. அதையே வாலி உரக்கச் சொல்லும் போது..

காடாளும் அரிமா போல் 
கலைஞர் நோக்கு;
கடுகளவும் பிறழாது 
கலைஞர் நாக்கு;
நாடாளும் திறமையைத்தான் 
நாடே பேசும் 
நான்சொல்லிக் காட்டியாஊர் 
நிலவென் றேற்க்கும்?

இப்படி நிறைய உண்மைகளை உக்கச் சொல்லுகிறார்.

இந்த புத்தகத்தில் நாம் விரும்பத்தக்க ஒரு முரணும் இருக்கிறது. அணிந்துரைத்தான் அது. கலைஞரின் தமிழை நேசிக்கும் வாலி எழுதிய புத்தகத்திற்கு, கலைஞரின் அரசியலை அதிகம் எதிர்த்த சோ தான் அணிந்துரை வழங்கியிருக்கிறார். சோவின் அணிந்துரை இந்த புத்தகத்திற்கு ( சோவின் பாஷையில் 'புஸ்தகத்திற்கு') இன்னொரு ஹய்லைட். அவரே சொல்லுகிறார் "நானும் கலைஞரை பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். என் பார்வை, ஒரு விமர்சகனின் பார்வை; வாலியின் பார்வை ஒரு ரஸிகனின்   பார்வை.... என் விமர்சனங்கள் பற்றி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஏனெனில், அவை நேர்மையானவை. வாலியும், போலி அல்ல. மனதில் எழுந்த எண்ணங்களை அவர் எழுத்தில் வடித்திருக்கிறார்."

கிட்டத்தட்ட ஏழு பக்கங்கள் கொண்ட இந்த அணிந்துரை, முரண்களை நிராகரிக்காமல் அதே சமையம் உள்ளத்தில் உள்ள நேர்மையை சீர்தூக்கிப் பார்க்கும் ஒரு அற்புதமான அணிந்துரை.

நான் சொன்னது அனைத்தும், நான் அருந்தியபோது சிந்தியவைதான். முழுமையாக ரசிக்க நீங்கள் வாங்கி வாசித்து பார்க்கவேண்டும் என்பதுவே  எனது ஆசை.

நிறைவாக புத்தகத்தில் இருந்து மற்றும்மொரு கவிதை.

நீ 
தடியெடுத்த 
தந்தை பெரியாரையும்; போடப் 
பொடியெடுத்த 
பேரறிஞர் அண்ணாவையும்; ஒருங்கே 
படியெடுத்த மாதிரி 
பிறங்குகின்றாய்; அவர்கள் 
முடிவெடுத்த மாதிரி - எதிலும் 
முனைந்து இறங்குகின்றாய்!

உன் 
வெள்ளை உள்ளத்தைக் கண்டேன் 
ஒரு சேயுள்; உன் - 
வாஞ்சை உள்ளத்தைக் கண்டேன் 
ஒரு தாயுள்;
வண்ணத் தமிழ் 
வாழ்கிறது உன் வாயுள்; ஆதலால்-
வண்ணத்  தமிழ் போலே 
வளர்ந்து வரும் உன் ஆயுள்!
====================

Thursday, December 17, 2020

மயக்கும் தமிழில் தையல்நாயகி பதிகம்


சாமி  பாட்டு யார் வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் பாடல் ஒரு தெய்வீக தன்மையுடன் அமைவது அந்த கடவுளின் பரிபூரண ஆசிர்வாதம் இருந்தால் மட்டும் தான் முடியும். அப்படி ஒரு கடவுளின் பரிபூரண ஆசிர்வாதம் பெற்ற  ஒருவரால் பாடப்பட்டது தான் இந்த பாடல்.

பக்தி பாடல்களை படிக்கும் போது நம் மனம் இளக வேண்டும், சாமி இறங்கி வந்து அருள் தர வேண்டும். இது நடந்தால் மட்டும் தான் அது சாமி பாட்டு. இன்றைக்கு இணையத்தில் உள்ள பல பக்திபாடல்கள் இதற்க்கு விதிவிலக்கானவை, இரைச்சலான இசையும்  கொண்டவை. ஆனால் இந்த பாட்டு கிருஷ்ண  கவசத்திற்கு இணையான, வளமான வார்த்தைகள் கொண்டவை. செட்டிநாட்டு பகுதிகளில் இந்த பாடல் மிகவும் பிரபலம் ஆனால் அந்த பகுதியையும் தாண்டி இந்த பாடல் பெற வேண்டிய புகழை பெறவில்லை என்பது என்  வருத்தம். பத்து  பதிகங்கள் கொண்ட இந்த பாடலை படிக்கும் போது ஒரு நம்பிக்கையும் தெளிவும் பிறக்கும். ரசனையும் நம்பிக்கையும் இருப்பவர்கள் இந்த பதிவை மேலும் படிக்கலாம்.

முதலில் அம்மனை வர்ணித்து தொடங்கும் இந்த பாடல் போகப் போக நம் உள்ளத்தை அலங்கரிக்கும் என்பது உண்மை. ஒவ்வொரு பதிகத்திலும் கடவுளையே லேசான கோவத்தோடு கேள்வி கேட்டு அதற்கான பதிலையே வரமாக கேட்கும்படி அமைந்திருப்பது இந்த பாடலின் சிறப்பு.

புராணங்களில் நடந்த திருவிளையாடல் கதைகளை சொல்லி இன்னாருக்கு இன்ன இன்ன கொடுத்தாய், கவிபாடும் எனக்கென்ன கொடுத்தாய், என் வாழ்வில் துயரங்கள் நுழைவதற்கு ஏன்  விடுத்தாய்  என்று கேட்பார். அதற்க்கு விடையாக இனி வருங்காலம் செல்வங்கள் வரும்காலம் ஆக்கவருவாய் என்று முடிப்பார். புராண கதைகளை இரண்டு இரண்டு வரிகலில் சுருக்கி பாடல் அமைந்திருக்கும் விதம் ரொம்ப அழகாக இருக்கும்.

பால் கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப்
படித்துறையில் பால் கொடுத்தாய்
பச்சை வெற்றிலைதுப்பிக் கவிகாள மேகத்தைப்
பாட்டரசன் ஆக்கி வைத்தாய்

வேல்கேட்ட பிள்ளைக்குச் செந்தூரில் சமர்செய்ய
விருப்பமுடன் வேல் கொடுத்தாய்
விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள்
விலகிடும் வழி அமைத்தாய்

நூல்கேட்ட ஞானத்தில் நூறுகவி பாடுமெனை
நோக்கி நீ எது கொடுத்தாய்
நொடிப்பொழுதில் என்வாழ்வில் படிப்படியாய் துயரங்கள்
நுழைவதற்கு ஏன் விடுத்தாய்

வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள்
வரும் காலம் ஆக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 
அம்மனை 'தாய்'  என்று அழைப்பதுண்டு, ஆனால் தாய் என்று ஏன்  அழைக்கின்றோம் என்ற காரணம் பாட்டில் வரும். தெரிந்தோ தெரியாமலோ தான் செய்த பிழைகளை மன்னித்து வாயுவை (காற்றை) போல் வேகமாய் வந்து எனது துயர் தீர்த்து மகிழ்ச்சியினை அருளும்படி வரும் வரிகள் படிக்கும் போதே மகிழ்ச்சி தரும் வரிகள்.

தாவென்று கேட்டவுடன் கொடுப்பதனால் தானுன்னைத்
தாய் என்று சொல்லிவைத்தார்
தலைமகள்உன்  சந்நிதியில் கலைமகளின் அருளாலே
தமிழ்பாடி வரங்கள் பெற்றார்

சேய்ஒன்று எதிரினிலே கதறுவது கேட்காமல்
செவிமூடி நிற்கலாமோ?
சிறுபிழைகள் இருந்தாலும் மன்னித்து அருள்காட்டும்
தேவியவள் நீயல்லவோ

ஆயகலை அத்தனையும் அறிந்தவனை நோய்நொடிகள்
அணுகவிடல் முறையாகுமோ?
அரியதொரு செல்வத்தை உரியமகன் ஏற்காமல்
அனுதினமும் வாடலாமோ?

வாயுவென வேகமாய் வந்தெனது துயர்தீர்த்து
மகிழ்ச்சியினைக் கொடுக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 

***

தங்கநிகர் குணத்தோடு தைரியமும் தருகின்ற
தமிழ்ச் செல்வி போற்றி போற்றி
தரணியில் புகழ்காண வரமளிக்கும் சுந்தரியாம்
தாமரைப்பூ மாது போற்றி

மங்கையர்க்கு மாலைகளும் மன்னவர்க்கு வேலைகளும்
மகிழ்ந்தளிக்கும் அரசிபோற்றி
மாதரசி உண்ணாமலை அழகுசிவகாமி
மங்கை மீனாட்சி போற்றி

பொங்கிவரும் துயரத்தைப் பொடியாக்க ஓடிவரும்
அன்னபூரணி கல்யாணி போற்றி
யோகமுடன் வாழ்வுதரும் பூங்கொடியாம் விசாலாட்சி
புனித உமாதேவி போற்றி

மங்களங்கள் அத்தனையும் எங்களது வீடுவர 
மாதரசி கூட்டி வருவாய் – அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே 
வளம் காணவைக்கும் உமையே! 


இன்னொரு பதிகத்தில் தான் எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ விரும்புவதாக ஒரு பட்டியல் வரும், மனதை லேசாக்கும் பட்டியல் அது. உடனே நடக்கிறதோ இல்லையோ படிக்கும் போது சந்தோசம் கொடுக்கும் வரிகள் அவை. உதாரணத்திற்கு, அனைவரும் செல்வம் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டியிருப்போம், ஒருவேளை  கடவுள் தோன்றி எவ்வளவு செல்வம் வேண்டும் என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள்? பாடலில் கவிஞர் கேட்கிறார் மலை போல் செல்வதை குவித்து வைத்து  மற்றவருக்கு நான் உதவும் அளவு செல்வம் வேண்டும் என்று கேட்கிறார். ஆக எனக்கு வேண்டும் என்று கேட்கவில்லை, மற்றவருக்கு உதவ வேண்டும் என்று கேட்கிறார், மறுப்பதற்கு தான் மனம் வருமோ !!😊 செல்லும் இடமெல்லாம் கெளரவம் பெறவும், பகையை வெல்லவும், நிலையான புகழ் பெறவும், தன குரல் கேட்டவுடன் தெய்வமெல்லாம் ஓடோடி வரவேண்டும் என்று வேண்டுகிறார்.

மலைபோன்ற செல்வத்தை குவித்துவைத்திருந்து நான்
மற்றவர்க்கு உதவ வேண்டும்
மழலையின் குணத்தோடு முதுமையிலும் இளமையாய்
மகிழ்வோடு வாழ வேண்டும்.

கலைதவழும் மேடையெல்லாம் பூமாலை அணிந்து நான்
கௌரவம் பெறவும் வேண்டும்.
கவிபாடும் எனதுகுரல் கேட்டவுடன் தெய்வமெலாம்
காட்சி தந்து அருளவேண்டும்.

நிலையான புகழ்தந்து உற்றாரும் மற்றாரும்
நேசிக்கும் உறவு வேண்டும்.
நீ எனது துணையாகி நான் செல்லும் பாதைக்கு
நேர் வழிகள் காட்டவேண்டும்

வளையாடும் கரத்தழகி பகை வென்று எந்நாளும்
மறுக்காமல் காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே

ஒரு சில விஷயங்கள் குறிப்பிட்ட வயது வந்தவுடன் தான் புரியும். எல்லோருக்கும் எல்லாமும் பத்து  வயதுக்குள் புரிந்துவிட்டால் அனைவரும்  ஞானசம்பந்தர் ஆகியிருப்போம். ஆனால், தெரியாமல் செய்த தவறு ஒன்றல்ல இரண்டல்ல பல இருக்கும், பருவம் காரணமாக சில இருக்கும். வாழ்க்கையின் ஒரு  கட்டத்தில் அதை உணரும் போது மனம் ஆன்மீகத்தை நாடும், மன்னிப்பு கோரும், அதை கீழ்கண்ட வரிகளில் அருமையாக சொல்லியிருப்பார் கவிஞர்.

சிறுவயதில் உன்பெருமை தெரிந்திருந்தால் உன்னைச்
சேவித்து மகிழ்ந்திருப்பேன்!
தெரியாமல் செய்தபிழை அத்தனையும் மன்னிக்கத்
தேடிவந் தழுதிருப்பேன்!

புரியாமல் எடுத்த இப்பிறவிதனில் மங்கையரின்
போகத்தை அளந்திருந்தேன்!
பொன்னோடும் பெண்னோடும் வருமின்பம் போதுமெனப்
புரியாமல் வாழ்ந்திருந்தேன்!

திருநாளில் உன் பெருமை தெரிந்ததும் தொடர்ந்து நான்
செவ்வாயில் விரதம் வைத்தேன்!
தித்திக்கும் அருள்தன்னை சித்திக்க வரம்வேண்டி
சிங்காரப் பாட்டிசைத்தேன்!

பருவத்தில் நான்செய்த பாவத்தை மன்னித்துப்
பாவை நீ காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே!

சில நேரங்களில், வாழ்வில் பயம் சூழ்ந்த காலங்கள் வரும், கடவுளும் ஆலயமும் மட்டுமே நம்பிக்கை தரும் இடமாக இருக்கும். மனம் உருகி நம்மை நாமே கடவுளிடம் ஒப்படைக்கும் தருணங்கள் கூட நடப்பதுண்டு.  இருப்பது போதும் என்னும் எண்ணம் வரும் போது, இப்படியே மீதி காலம் இருந்தால் போதும் என்பதுவே நம் வேண்டுதலாக இருக்கும்.  சில பல உவமைகளோடு அழகாக வரும் பதிகம் இது, என்னை காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு, உன் கடமை என்று நிறைவு செய்து இருப்பார்.

திருக்கழுக் குன்றத்தில் கழுகுக்கும் மதியத்தில்
தினந்தோறும் சோறு உண்டு!
திருநாளாம் பொங்கலில் நந்தியெனும் காளைக்கும் 
தித்திக்கும் பொங்கல் உண்டு!

வருஷத்தில் ஒருநாளில் வடையோடு அன்னத்தை
வைரவரும் காண்ப துண்டு!
வளர்கின்ற புற்றுக்குள் ஒளிகின்ற பாம்புக்கும்
வார்க்கின்ற பாலு முண்டு!

அர்ச்சித்து வழிபட்டு அன்னையே உனையெண்ணும்
அடியேனுக் கென்ன உண்டு!
அன்று தினம் அளந்தபடி என்றைக்கும் நடந்திடவே
அருள்புரிய வேண்டும் அம்மா!

மரம் வைத்த நீதானே தண்ணீரும் விடவேண்டும்
மறந்திடல் முறையாகுமோ - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே!
வளம் காண வைக்கும் உமையே! 

இந்த உலகில் நாம் விரும்பிப் பிறப்பதில்லை, அதிலும் விரும்பி மனிதனாக பிறப்பதில்லை. ஏதோ ஒரு  சக்தியின் காரணமாகவே நாம் ஜனிக்கிறோம் மனித பிறவி எடுக்கிறோம். காரண கர்த்தா என்றொன்று  இல்லாமல் இது நடப்பதில்லை. ஆகா அந்த பிறப்புக்கும் பிறவிக்கும் காரணமான கர்த்தா தான் வாழ்வில் வழிநடத்தவும் உதவவும் வேண்டும், அது உன்னுடைய  கடமை என்று கடவுளிடம் சொல்லுகிறார் கவிஞர். 
கழுதையெனும் பிறவியை எடுத்தாலோ நிச்சயம்
கழுத்திலே பொதியிருக்கும்!
காளை மாடாகவே பிறந்திடின் நிச்சயம்
கழனியில் கால் இருக்கும்!

பழுதான பிறவியாம் நாயாகப் பிறந்தாலோ
பகலிரவு விழிக்க வேண்டும்!
பறவையாய்ப் பிறந்தாலும் மரங்களின் உச்சியில்
பதியங்கள் போட வேண்டும்!

அழுதாலும் தொழுதாலும் அன்னையே உனையன்றி
யாரெனக் குதவுவார்கள்?
ஆறறிவு கொண்டதோர் மனிதனாய் என்னை நீ
அகிலத்தில் படைத்த பின்னால்

வழிகாட்ட மறுப்பதும் நியாயமா? என் விழியில்
வடிந்து நீர் ஓடலாமா? - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே  
வளம் காண வைக்கும் உமையே. 

***

புல்லாகிப் பூடாகிப் புழுவாகி இருந்தாலோ
புலம்பியே தீர வேண்டும்!
பொன்னாக அணிகின்ற மனிதனாய்ப் பிறந்தநான்
புதுயுகம் காண வேண்டும்!

கல்லாக நிற்கின்ற தெய்வம்நீ இல்லையெனக்
காட்டிட விரைந்து வருக
கனதனம் நீதந்து காசினியில் புகழ்தந்து
காவலாய் நின்று அருள்க!

முள்ளாக மலராக மோதிடும் வாழ்க்கையில்
முற்றும் நான் நம்பி வந்தே!
மோதகப் பிரியனின் தாயான உன்னிடம்
முறையீடு செய்கின்றேன்!

பல்லக்கு பரிவாரம் பார்த்திடும் ராஜாங்க
பவனியை எனக்கு அருள்க - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே 
வளம் காண வைக்கும் உமையே!  
இந்த பாடலில் அந்த பத்தாவது பதிகம் ஒரு நிறைவான பதிகமாக இருப்பது இன்னொரு விஷேசம்.அம்பாளை தாயாகவும் தன்னை சேயாகவும்  பாவித்து வேண்டும் அந்த நான்கு வரிகள் பாடலின் உச்சம்.
எவருக்கு எதுவேண்டும் என்பதை அறிந்தநீ
ஏறிட்டுப் பார்க்கவில்லை!
இருகரம் கூப்பியுன் சந்நிதியில் நிற்கும்நான்
எதுகேட்டும் மாறவில்லை!

சிவல்புரியில் வாழ்கின்ற சிங்காரம் தந்ததோர்
செந்தமிழ் கவிதை மூலம்!
சீர்கொண்ட பதிகங்கள் பத்தையும் கேட்டுநீ
சிரமத்தை அகற்றவேண்டும்!

கவலைக்கு மருந்தாகும் கடவுளே உனைநம்பி
காலங்கள் போக்கிவிட்டேன்!
காப்பாற்ற வேண்டியது உன்பொறுப் பல்லாது
காசினியில் யார்பொறுப்பு?

மகன்கேட்டு தாய்எதுவும் மறுப்பதில் முறையில்லை
மனமிரங்கி வந்து அருள்க! - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே 
வளம் காண வைக்கும் உமையே.  

 

பதிவு முழுவதும் நான் ஆங்காங்கே 'கவிஞர்' 'கவிஞர்' என்று குறிப்பிட்டதை நீங்கள் கவனித்திருக்கக் கூடும்.

இந்த வளமான தமிழையும் 'கவிஞர்' என்ற வார்த்தையையும் உங்களுக்கு கவியரசர் கண்ணதாசனை நினைவு படுத்தியிருக்கும் என்பது எனக்கு தெரியும். நல்ல தமிழ் எப்போதும்  நல்லனவற்றை நினைவுபடுத்திக்கொண்டே தான் இருக்கும், அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால் இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் அல்ல, அவர் பிறந்த பகுதியை சேர்ந்த சிங்காரம் என்பவர். உங்களுக்கும் நாளிதழ்கள் மூலம் பரிச்சயமானவர் தான், புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், தினத்தந்தி புகழ்  என்கலை வித்தகர்   'சிவல்புரி' சிங்காரம் தான் அவர். நீங்களும் படியுங்கள் பயன்பெறுங்கள், படிக்கப் படிக்க வைத்தீஸ்வரன் கோவில் தையல்நாயகியை பார்க்க வேண்டும் என்ற ஆசை வரும், போய் பாருங்கள் வளமோடு வாழுங்கள். நன்றி.

Friday, September 04, 2020

தொண்டையில் முள்

 என் வீட்டில் எல்லோருமே பிறவி சைவம், நான் தான் முதலில் அசைவம் சாப்பிட ஆரம்பித்த ஆள், பக்கத்து வீட்டு மினர்வா ஆன்ட்டி மீன் சமைக்கும் போது அந்த வாடை வீட்டில் உள்ள அனைவருக்கும் உமட்ட எனக்கு மட்டும் பிடித்துப்போய்விட்டது, அவர்கள் வீட்டில் சாப்பிட்டது தான் முதல் அசைவ உணவு. பின்னர் அவர்கள் வீட்டில் செய்யும் போதெல்லாம் எனக்கு கொடுத்து அனுப்புவார்கள். அவர்கள் விரும்பி கொடுத்தாலும், அடிக்கடி வாங்குவது சரியல்ல என்று என் அம்மா அவர்களிடம் செய்முறை கேட்டு எனக்கு மட்டும் குறைந்த அளவு வாங்கி செய்து கொடுப்பார், ருசி பார்க்காமல் அவர் செய்தாலும் மிகவும் ருசியாக இருக்கும்.  


எனக்கு பத்து பதினோரு வயதிருக்கும், ஒரு முறை மீன் சாப்பிடும் போது முள் தொண்டையில் சிக்கிக்கொண்டது, நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அது வெளியே வரவில்லை. காலையில் மீன் வாங்கிய போது அது பக்கத்துக்கு வீட்டுக்கு கூட  தெரியாது ஆனால் தொண்டையில் முள் குத்திய பிறகு அது தெருவுக்கே தெரிந்துவிட்டது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வைத்தியம் சொன்னார்கள். அதன்படி வாழைப்பழத்தை அப்படியே விழுங்கினேன், வெள்ளை சோ(று)றை மெல்லாமல் முழுங்கினேன், எதற்கும் அந்த முள் அசைந்து கொடுக்கவில்லை. பின்னர் என் தந்தை மாலை அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்,  காத்திருக்கவில்லை உடனே அழைத்தனர், உள்ளே சென்றோம், டாக்டர் விஷயத்தை கேட்டுவிட்டு சிரித்துக்கொண்டே ஒரு tounge depressorஆல் நாக்கை அழுத்திக்கொண்டு உள்ளே டார்ச் அடித்துப் பார்த்தார், முள் தெரிந்தது. என்னை 'அ ..ஆ ஆ..' என்று சொல்ல சொல்லியவாறே ஒரு கத்திரிக்கோல் போன்ற ஒன்றை உள்ளே விட்டு முள்ளை எடுத்துவிட்டார். எனக்கும் உறுத்துதல் நின்று எளிதாக சுவாசம் விட முடிந்தது. பத்து ரூபாய் பீஸ் வாங்கிக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்து வெகு நாட்களுக்கு என் அம்மா '5ரூபாய்க்கு மீன் வாங்கி 10ரூபாய் கொடுத்து  முள் எடுத்தது நம்மளாதான் இருப்போம்' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். 


இப்போது, சரியாக 30 ஆண்டுகள் கழித்து, சென்ற வாரம், மீன் வாங்கி ரொம்ப நாள் ஆச்சு, மீன் வாங்கிட்டு வாங்க என்றாள் என் மனைவி. நானும் வாங்கி வந்தேன். என் மகனுக்கு இப்போது வயது பதினொன்று ஆகிறது, மதியம் சாப்பிடும் போது லேசாக இருமினான், என்ன என்றேன், 'தொண்டையில் லேசாக முள் மாட்டியது போல் இருக்கிறது' என்றான். இவன் இதுபோல் சொல்வது இயல்பு  என்பதால் லேசாக எடுத்துக்கொண்டேன். இரவு அதிகம் உறுத்துகிறது என்றான், தொண்டையின் மேல் பகுதியை வெளியே தொட்டு காண்பித்து அந்த இடத்தில உறுத்துவதாக சொன்னான். சரி என்று ஒரு வாழைப்பழம் கொடுத்து முழுங்கச்சொன்னோம், வெள்ளை சோறு கொடுத்தோம், எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு ஒரு வாந்தியும் எடுத்துவிட்டு தூங்கிவிட்டான். காலை எழுந்தவுடன் அதே பல்லவி, உறுத்துகிறது என்றான். சரி டாக்டரிடம் காண்பிக்கலாம் என்று முடிவு செய்தேன். பொதுவாக பெரிய மருத்துவமனைக்கு எப்போதும் நான் செல்வதில்லை, இருந்தாலும் இது Corona டைம்  என்பதால், அருகில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றேன்.  மருத்துவமனையின் மெயின் எண்ட்ரன்ஸ்க்கு வெளியே இரண்டு மீட்டர் இடைவெளியில் குறியீடுகள் போடப்பட்டிருந்தன, அதில் ஒரு 15 நிமிடம் காத்திருந்தோம். பின்னர் ஒரு நர்ஸ் வந்து எங்கள் இருவருக்கும் temperature  check  செய்தார், கைகள் இரண்டிலும்  Sanitiser தெளித்து உள்ளே  போகச் சொன்னார். சரியாக கதவருகே சென்ற போது 'சார் ஆரோக்யா சேது app இருக்கா  என்றார்'. நான் 'இல்லை' என்றேன். 'சாரி சார், App is  mandatory, நீங்க சைடுல நின்னு  இன்ஸ்டால் பண்ணீட்டு வாங்க' என்றார். இன்ஸ்டால் செய்து அவர்களிடம் காண்பித்துவிட்டு உள்ளே சென்று கன்சல்டேஷன் பீஸ் ருபாய் 600 கட்டிவிட்டு காத்திருந்தேன். 'ENT  டாக்டர்கு போன் பண்ணி இருக்கோம் ஒரு half-an-hour வந்து விடுவார்' என்றனர்.  டாக்டர் வந்தார், எங்களை உள்ள அழைத்தார், பிரச்னையை சொன்னோம். எங்கே குத்துகிறது என்று என் பையனிடம் கேட்டார். அதுவரை   மேல் பகுதியை தொட்டு காண்பித்த அவன், அவர் கேட்டவுடன், அதிலிருந்து ஒரு இன்ச் கீழிறக்கி தொண்டையின் கீழ் பகுதியை  தொட்டு காண்பித்தான். எனக்கே கொஞ்சம் தூக்கி வாரிப்போட்டது. டாக்டர் உடனே 'ஓ  மை  காட்..... He  is  showing  so  deep ... நான் ஏதோ consultation அப்படினு நினச்சு வந்தேன்... I  need  instruments... இங்க instruments இல்ல பெட்டெர்  நீங்க  என்னோட கிளினிக்கு வந்துருங்க' அப்படினு சொல்லி அவர் சொந்தமாக நடத்தும்  கிளினிக் அடையாளத்தை சொல்லி  கிளம்பிவிட்டார்.

அவரை பின்தொடர்ந்து அவரது கிளினிக்ஐ சென்றடைந்தோம்.  நாக்கை கையில் பிடித்துக்கொண்டு கண்ணாடி போன்ற ஒன்றை  வைத்து முதலில் பார்த்தார், gloves மாட்டிக்கொண்டு விரல் வைத்துப் பார்த்தார்.  நன்றாக பார்த்துவிட்டேன் எதுவும் தென்படவில்லை என்றார். என் பையனோ  உறுத்துவது நிற்கவில்லை என்று திடமாக சொன்னான். குத்துன  இடம் புண்ணாக  இருந்தால் கூட உறுத்துவது போல்   இருக்கும், டேப்லெட் எழுதியிருக்கேன் குடுங்க சரியாகிடும் என்றார்.   400 ரூபாய்க்கு மாத்திரை மருந்து எழுதியிருந்தார். வீட்டிற்கு வந்த பிறகு இரவு  உறங்குவதற்கு முன்பு எப்படி இருக்கிறது என்று கேட்டேன், அப்படியே தான் இருக்கிறது என்றான். ஒரே யோசனையோடு உட்கார்ந்திருந்தேன், மதியம் வாங்கிய பலாச்சுளையில் இரண்டு மீதம் இருந்தது, எங்கள் யாருக்கும் அதை சாப்பிட விருப்பமில்லை.  இவன் என்ன நினைத்தானோ, அந்த இரண்டு சுளையையும்  எடுத்து சாப்பிட்டான். சாப்பிடும் போது ஒரு  இரண்டு முறை இறுமினான், உறுத்துகிறது போலும் என்று நினைத்துக்கொண்டேன். சற்று நேரம் கழித்து என்னருகில் வந்தான், பலாப்பழம் சாப்பிடும் போது லேசா இருமுச்சு அதுக்கப்புறம் தொண்டை free  ஆகிடுச்சு என்றான். சுத்தமாக எதுவும் செய்யவில்லை என்று தெளிவாக சொன்னான். பலாச்சுளையை சாப்பிடும்போது அது முள்ளை  உள்ளே கொண்டு சென்றிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.  டாக்டரால் செய்ய முடியாததை இந்த பலாச்சுளை செய்துவிட்டது. இந்த பலாச்சுளையை மதியமே கேட்டான், நான் தான் டாக்டர் கிட்ட போறோம், வாந்தி ஏதும் எடுத்துவைக்காதே... இப்ப சாப்பிட வேண்டாம் என்றேன். யோசித்துப்பார்த்தால் அப்பொழுதே கொடுத்து இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. 

இதிலிருந்து தெரிந்துகொண்ட சில விஷயங்கள்,

1. என் தந்தை அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை. அவர் என்னை திட்டவே இல்லை ஆனால் நான் என் பையனை நன்றாக திட்டினேன்.

2. என் அளவுக்கு என் பையனுக்கு சகிப்புத்தன்மை இல்லை. டாக்டர் தொட்டவுடனேயே கத்த  ஆரம்பித்துவிட்டான்.

3. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என்று சொல்லக்கூடிய  பரம்பரையாக வரும் வியாதியை போல் இது ஒரு பரம்பரை நிகழ்வாக இருக்குமோ!! என்று கூட தோன்றுகிறது.

எது எப்படியோ, என் அம்மா சொன்ன மாதிரி '300 ரூபாய்க்கு மீன் வாங்கி 1000 ருபாய் டாக்டர்க்கு கொடுத்தது நானாகத்தான் இருப்பேன்'.
Thursday, August 13, 2020

விலாசம்

 நிறைய கடைகளில் குறிப்பாக ஹோட்டல்களில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும், அந்த கடையின் பெயரை டம்ளர்களில் பொறித்திருப்பார்கள்.  சென்னையில் நான் வேலை பார்த்தபோது பூந்தமல்லி ரோட்டில் (Chetpet) உள்ள ஒரு உணவகத்துக்கு அடிக்கடி செல்வதுண்டு, அந்த உணவகத்தில் உள்ள பொருட்களில் "இது  ஹோட்டலில் திருடப்பட்டது' என்று பொறித்திருப்பார்கள்.  யாரேனும் எடுத்துச் சென்றால் உபயோகிக்க முடியாது என்ற நோக்கில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் நான் சொல்ல வருவது இது போன்ற ஒன்று அல்ல,  "பெயர் வெட்டுதல்"  என்கிற இரண்டு வார்த்தையை மிகவும்  நேர்த்தியான முறையில் தமிழகத்தின் ஒரு பகுதியை சேர்ந்த மக்கள்  பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு எழுத்தை (initial) வைத்து அந்த பொருளின் காலத்தையும் அவர்களுடைய முனோர்களையும் (குறைந்தது இரண்டு  தலைமுறை) தெரிந்துகொள்ளும்படி பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஏதோ தங்கத்திலும் ,  வெள்ளியிலும் விலையுயர்ந்த பொருட்களில் மட்டும் தான் போடுவார்கள் என்று எண்ணுவீர்களாயின் அது தவறு, நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத விலை குறைந்த சிறு பொருட்களில் கூட வெட்டியிருப்பார்கள். 

தட்டு, கரண்டி தொடங்கி, மர சாமான்கள், மங்கு சாமான்கள், பீங்கான் சாமான்கள், கல்லு சாமான்கள், பித்தளை சாமான்கள் இரும்பு சாமான்கள் தொட்டு வெள்ளி சாமான்கள் வரை தொடரும். சாதாரண கர்ச்சீப் திரைச்சீலைகளில் கூட உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

உதாரணத்திற்கு எனக்கு சட்டென நினைவுக்கு வரும் சில பொருட்கள்.

*சாவி *மேசை *நாற்காலி *சங்கு *விளக்கு *அம்மி *குழவி *ஆட்டுக்கல் *அலமாரி *ஜாடி *கைப்பை *கோலாட்டக்குச்சி *மெத்தை *தலையணை *பாய் *வடிகட்டி  இன்னபிற.

கல் மற்றும் மர சாமான்களில் விலாசத்தை செதுக்கி மை தீட்டியிருப்பார்கள், சில்வர் மற்றும் வெள்ளி சாமான்களில் பொறித்திருப்பார்கள், துணிகளில் ஒன்று பின்னியிருப்பார்கள் அல்லது அழியாத மையால் எழுதியிருப்பார்கள்.

சரி, இதனால் என்ன பயன்?

1. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த அந்த காலத்தில் யாரேனும் ஒரு பொருளை (சிறு பொருளாக இருந்தாலும் கூட) எங்கேனும் மறந்து வைத்துவிட்டால், இந்த விலாசத்தை பார்த்து எளிதில் அவரிடம் ஒப்படைக்க முடியும்.

2. நான்கு ஐந்து மருமகள்கள் இருந்தால் இன்னாருடைய பொருள் என்பது  எளிதில் தெரியும்.

3. யார் யாருக்கு கொடுத்தது என்பதையும் எப்போது வாங்கப்பட்டது என்பதையும் கண்டறிய முடியும்.

4. ஒருவேளை கடையில் வாங்காமல் இன்னொரு குடும்பத்திடம் இருந்து வாங்கியிருந்தால், அந்த விலாசத்தை அடித்துவிட்டு மேலே இவர்களுடைய பெயரை போடுவார்கள், ஆகா யாரிடம் இருந்து வாங்கினோம் என்பது 50 ஆண்டுகள் கழித்துக்கூட தெரிந்துகொள்ளலாம்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான பயன் இதுதான். என் வீட்டில் ஒரு பொருள் கீழே விழுந்து உடைந்துவிட்டால், நாங்கள் உடனே பார்ப்பது பெயரைத்தான். என் வீட்டுப் பொருளை அவளோ (மனைவியோ) அல்லது அவள் வீட்டுப் பொருளை நானோ உடைத்துவிட்டால் "எங்க ஆயா வீட்டு சாமானை உடைச்சுட்டீங்களே" என்று அவளும் "எங்க அப்பத்தா காலத்து சாமானை உடைச்சுட்டியே" என்று நானும் சொல்லி வரும் சண்டை கிட்டத்தட்ட ஒரு வாரம் போகும் என்றால் இதன் முக்கியத்துவத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.

எனக்கு விபரம் தெரிந்து ஒரு திருமணம் பேசி முடித்த உடன் முக்கியமான வேளைகளில் ஒன்று பெயர் வெட்டுபவரை அழைப்பதுதான். மூன்று எழுத்துக்கு காலணா  அல்லது நான்கு எழுத்துக்கு எட்டணா என்று கூலி நிர்ணயித்துவிட்டு புதிதாக வாங்கிய சீர்வரிசை சாமான்கள் எல்லாவற்றிலும் பெயர் வெட்டுவார்கள். ஒரு சிறு தவறு கூட நிகழாமல்  இரு கால்களுக்கு நடுவில் வைத்து அவர்கள் பெயர் வெட்டும் அழகே தனி, அப்படி ஒரு நேர்த்தியான முறையில் அது இருக்கும். இது அவர்களுக்கு முக்கிய தொழிலாக இருக்காது, ஏதாவது பாத்திர கடைகளில் வேலை செய்துகொண்டு இதை பகுதி நேர வேலையாக செய்வார்கள். ஒரு சிறிய சுத்தியலும்  , சில வகையான ஆணிகளும் நல்ல பயிற்சியும் தான்  மூலதனம். காலப்போக்கில் அழிந்த கலைகளில்  இதுவும் ஒன்று, இன்றைக்கு சில கடைகளில் மிஷின் மூலம் வெட்டுகிறார்கள், ஏதோ  அடையாளத்துக்கு ஒரு குறி போட்டதுபோல் இருக்கிறது, எவ்வித அழகும் அதில் இல்லை. நகைக்கடையில் வாங்கும் நகையில் கூட கடையின் பெயரை எதோ கிறுக்கிதான் வைக்கீறார்களே தவிர அழகாக போடுவதில்லை. 

இப்படி வெட்டும் சாமான்களை எல்லாம் திருமணத்தின் போது  பரப்பி வைப்பார்கள். திருமணத்திற்கு  வந்தவர்கள் குறிப்பாக பெண்கள்  முகூர்த்தம்  முடிந்த பிறகு அந்த சாமான்களை எல்லாம் பார்த்து விட்டு செல்வார்கள். இப்போது எல்லாம் இது எல்லா கல்யாணத்திலும்  நடப்பதில்லை, வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில திருமணங்களில் மட்டும் பார்க்கலாம். கொரோனாவுக்கு பின்பு திருமணமே (விமர்சையாக) நடக்குமா என்று இருக்கும் சூழ்நிலையில் சாமான் பரப்புவதெல்லாம் நடக்காத காரியம், அப்படியே பரப்பினாலும் அதை அவர்களே பார்த்துக்கொள்ளவேண்டியது தான்.

எது எப்படி இருந்தாலும் இந்த பழக்கம் தொடரவேண்டும் என்பது எனது விருப்பம். அடுத்த தலைமுறையினருக்கு முன்னோர்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு  இந்த  பழக்கம் ஒரு கருவியாக இருக்கும் என்பது என் எண்ணம்.Saturday, November 30, 2019

தண்ணீர் தேசம்: படிக்கப் படிக்க பரவசம்திகட்ட திகட்ட காதல்...
இனிக்க இனிக்க அறிவியல் ....
ததும்ப ததும்ப தன்னம்பிக்கை ....
ரசிக்க ரசிக்க தமிழ், இது தான் தண்ணீர் தேசம்.

இதை பலரும் படித்திருக்க கூடும், பலரும் படித்த இந்த நாவலை நான் பலமுறை படித்திருக்கிறேன்.
கடலை விரும்பும் காதலன், தண்ணீர் பயம் கொண்ட காதலி, நான்கு நண்பர்கள் மற்றும் ஒரு சுண்டெலி. இது  மனிதர்களை எதிர்த்து மனிதர்கள் போராடும் கதை அல்ல, இயற்கையை எதிர்த்து  காதலர்கள் போராடும் கதை. கடலை பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்திருக்கிறார் ஆசிரியர், அதை சொல்வதற்காக அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட களம் காதல், அதுவும் ஒரு மெல்லிய காதல், அதற்க்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக கதாபாத்திரத்தின் பெயர்கள் கலைவண்ணன் - தமிழ்ரோஜா. 

எதேர்சையாக காதலர்கள் இருவரும் மீனவ நண்பர்களுடன் படகில்  பயணிக்கிறார்கள், நான்காவது அத்தியாயத்தில் படகு பழுதாகிறது , நடுக்கடலில் தத்தளிக்கும் இவர்கள் கரை வந்து சேருகிறார்களா என்பதே   கதை. இயற்கையோடு அவர்கள் போராடும் ஒவ்வொரு தருணத்தையும் நாம் படிக்கும் போது  நம் இதயம் நின்று நின்று துடிக்கும் என்பது மட்டும் நிஜம். 

கதையை சொல்லிக்கொண்டு போகும் போதே இடை இடையே  அறிவியலையும் தன்னம்பிக்கையையும் சொரிகிக்கொண்டே செல்கிறார். கதையின் நாயகன் ஒரு பத்திரிகையாளன், அனைத்தையும் அறிவியல் கண் கொண்டு பார்க்கும் ஒரு அறிவாளி. நாயகியோ  பணக்கார வீட்டு பெண், இயற்கைக்கும் அவளுக்கும் வெகு தூரம், தண்ணீர் பயம் கொண்டவள்.  அவள் பயம் கொள்ளும் போதெல்லாம் கலைவண்ணன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எதிர்மறை எண்ணம் கொண்ட அனைவரும் படித்து பருகவேண்டிய மருந்து. படகு பழுதானபோது வாழ்வே முடிந்துவிட்டது என்று தமிழ் ரோஜா புலம்பும்போது அவன் சொல்லுவான்...

"வாழ்வை கற்பனை செய்.
சாவை கற்பனை செய்யாதே..

பூக்கள் காற்றில் உதிர்ந்தால் பூகம்பம் 
வந்துவிட்டதென்று புலம்பித்  திரியாதே.
உச்சிவானத்தில் நிலா வந்தால் தலையில் 
விழுந்துவிடுமோ என்று சந்தேகப்படாதே..
இன்பத்தைக் கற்பனை செய்து பார்.
துன்பத்தைப் எதார்த்தமாய்ப் பார்.

படகு பழுதானதொரு சின்னஞ்சிறு செய்தி..

உடனே இதுதான் வாழ்வின் கடைசி 
இரவென்று சுருங்கிப் போகாதே..
இன்பத்தை இரண்டாய்ப் பார்,
துன்பத்தை பாதியாய் பார்...
விரல் விழுந்துவிட்டால் அழுதுகொண்டிருக்கக் கூடாது. 
நகம் வெட்டும் நேரம் மிச்சம் என்று நினைத்துக் கொள்வோம்.
படகு பழுதானால் பதறிக் கொண்டிருக்கக் கூடாது.
கடலில் ஓர் இரவு என்ற கட்டுரைக்கு குறிப்பெடுப்போம்."

 மனிதர்கள் உடைந்து போகும் நேரங்களில் இது போன்ற தன்னம்பிக்கை வார்த்தைகள்  சொல்ல ஆள் இல்லாததே இன்று இருக்கும் பெரும் பிரச்சனை. படிக்கும்போதே இவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்துகிறதே, ஒவ்வொருவருக்கும் வாழ்வில்  இப்படி ஒரு நபர் உடன்  இருந்தால் !!!. 

இங்கே முழு கதையையும் சொல்வது என் நோக்கமல்ல ஆனால் சில உரையாடல்களை சொல்ல விரும்புகிறேன். அதில் முக்கியமான ஒன்று கலைவண்ணனுக்கும் தமிழ்ரோஜாவின் தந்தைக்கும் மருத்துவமனையில் நடக்கும் உரையாடல். இரண்டு யதார்த்தவாதிகள் வெவ்வேறு துருவத்தில் நின்று பேசும் காட்சி.

சிகரெட்டை புகைத்துக்கொண்டே அகத்தியர் சொல்லுவார்...
"தமிழை இன்னும் கொஞ்சம் மென்மையாய் கையாண்டிருக்கலாம்"..

கலைவண்ணனுக்கு அவரிடம் பிடித்தது அவர்  பெண், பிடிக்காதது அவர் பிடிக்கும் சிகரெட்... "இப்படி நீரச்சம் கொண்டவள் என்று நினைக்கவில்லை நான், நீரச்சம் நிரந்தர அச்சம் அல்ல. இந்தத் தண்ணீர் பயத்தை தவிர்த்தாக வேண்டும்"

"கவனம்! தூசு எடுக்கும் அவசரத்தில் கருமணியே தூர்ந்துவிடக்கூடாது. எனக்கு அவள் ஒரே பெண்".

"நான் சகாராவின் சகோதரன். பகல் சுடும் - இரவு குளிரும் - இதுதான் என் பயணம்.நான் பத்திரிகையாளன். பேனாவின் மூடி திறந்தபோதே என் மார்பையும் திறந்துவைத்துக் கொண்டவன்..."

"தமிழை மனம் செய்துகொண்டால் உங்கள் பாலைவனம் கடக்கச் சொந்த விமானம் ஒன்று தந்துவிட மாட்டேனா?"

"சொந்தத்தில் விமானம் வாங்கலாம்.
அனுபவம் வாங்க முடியுமா?
உங்கள் பணம் எனக்கு குடைவாங்கித் தரலாம்.
மலை வாங்கித் தர முடியுமா?"

அகத்தியர் அவன் தோள்தொட்டு  சொல்லுவார்... "பணம் இல்லாதவன்தான் பணத்தை மதிப்பதில்லை.

இவர்கள் பேசிக்கொள்வது மட்டும் ஒரு பத்து பக்கம் இருக்கும், முழு உரையாடலும் தர்க்கத்தின் உச்சம். நீங்கள் படித்தால் மட்டுமே ரசிக்க முடியும்.

படகு நின்று பதினான்கு நாள் ஆகியிருக்கும், கரை சேருவது கடினம் என்ற நிலையில் கலைவண்ணனுக்கு ஒரு யோசனை வரும், தங்களுடைய நிலையை ஒரு கடிதத்தில் எழுதி புட்டியில் வைத்து அடைத்து கடலில் எறிந்தால் என்ன என்று, யார் கண்ணிலாவது பட்டால் அவர்கள் உதவிக்கு வரக்கூடும் என்று சொல்லுவான். இசக்கி அத்தோடு தன தாய்க்கு ஒரு கடிதத்தையும் வைத்து அனுப்ப முடியுமா என்று கேட்பான், கடைசியில் ஆளுக்கு ஒரு கடிதம் எழுதுவது என்று முடிவாகும். அவர்கள் ஒவ்வொருவர் எழுதும் கடிதமும் ஒவ்வொரு குட்டி கதை.  உதாரணத்திற்கு பரதனின் கடிதம்.

அன்புள்ள மீனா. 
என் ஆசை மகளே. நீ பிறந்தது முதல் உன்னைப் பத்து நாட்களுக்குமேல் பார்க்காமலிருந்தது இப்போதுதான். ஒருவேளை, உன்னை இனிமேல் பார்க்கவே மாட்டேனோ என்று பயமாகவும் இருக்கிறது. உன் பிரசவத்திலேயே உன் தாயைப் பறிகொடுத்த நான் அப்போதே செத்திருப்பேன். ஆனால், உன் பிஞ்சுக்கைகளின் உத்தரவுக்குத்தான் நான் பிழைத்துக் கிடந்தேன்.

எனக்கு ஒரே ஓர் ஆசை இருந்தது தாயே. அந்தத் தகரப்பெட்டியில் நாப்தலின் உருண்டைகளுக்கு மேலே மடித்து வைக்கப்பட்டிருக்கும் உன்தாயின் பழைய பட்டுப் புடவையை, நீ வளர்ந்த பிறகு உனக்குக் கட்டி
அழகு பார்த்து.. உன்னில் உன் தாயைப் பார்க்க ஆசைப்பட்டேன். என் நியாயமான ஆசை அநியாயமான கனவாகவே அழிந்துவிடுமா? உன் தாயின் பிரிவை நான் தாங்காதது போலவே என் பிரிவை அவளும்
தாங்கவில்லைபோலும். கண்ணுக்குத் தெரியாத கைநீட்டி என்னை அழைத்துக் கொண்டேயிருக்கிறாள். கரை
வந்தால் உன்னோடு வாழ்வேன். என்னைக் கடல்கொண்டால் உன் தாயோடு சேர்வேன். 
படி மகளே படி. நம் இனத்தைப் பரம்பரைத் துயரிலிருந்து மீனவர்மகளே... மீட்கப் படி. ஒரு விதையைப் பூமி
பாதுகாப்பதைப் போல உன்னை உன் தாத்தா பாதுகாப்பார் என்று நம்புகிறேன். ஜென்மங்களில் எனக்கு
நம்பிக்கை இல்லை மகளே. இருந்தால் - எவ்வளவு வசதியாக இருக்கும்.

உன் அன்பு அப்பா,
பரதன்

கிட்டத்தட்ட ஒவ்வொரு கடிதமும் ஒரு மரண வாக்குமூலம் போல்  இருக்கும்.

அதே போல்  சலிமுக்கும் சுண்டெலிக்கும் உள்ள உறவு ஒரு தனிக்கதை... நான் சொல்வதை விட நீங்கள் படித்து ரசிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சேமித்த உணவுகள் அனைத்தும் தீர்ந்துவிடும் குடிதண்ணீர் உட்பட. அப்போது தமிழ்ரோஜாவின் கைப்பையில் இருந்து ஒரே ஒரு சாக்லெட் கண்டெடுக்கப்படும்... அது ஆறு பங்காய் பிரிக்கப்படும்போது.. வைரமுத்து இப்படி எழுதியிருப்பார்.

"சாக்லெட் பிளக்கப்பட்டது.
இந்தியா-பாகிஸதான்
பிரிவினையைவிட அது
கவனமாகவே
கையாளப்பட்டது.

அவரவர் துண்டு அவரவர்
கைக்கு வந்ததும், உயிருக்கு
அது ஓர் அமிர்தச் சொட்டு
என்றே அறியப்பட்டது."

சலீம் தனக்கான பங்கை எடுத்துக்கொண்டு சுண்டெலியை தேடி ஓடுவான். அது கொல்லப்பட்டிருக்கும், அதை பார்த்து அவன் கதறி அழும் போது கதையில் வார்த்தைகள் இப்படி வரும்...

"தண்ணீர் குடிக்காத தேகத்தில் எப்படித்தான் அவ்வளவு கண்ணீர் இருந்ததோ."
"ஒரு மனிதன் -
எத்தனை நாடுகள் கடந்தான். எத்தனை கடல்கள் கடைந்தான். எத்தனை பேரைக் கொன்றான். எத்தனை மகுடம் கொண்டான். எத்தனை காலம் இருந்தான். எத்தனை பிள்ளைகள் ஈன்றான் - என்பவை அல்ல அவன் எச்சங்கள்.


இவையெல்லாம் நான் என்ற ஆணவத்தின் நீளங்கள். 
அவன் இன்னோர் உயிருக்காக எத்தனைமுறை அழுதான் என்பதுதான், அவன் மனிதன் என்பதற்கான மாறாத சாட்சி.

சலீம் அழுதான்.

அது சுயசோகத்திற்காகச் சொட்டிய கண்ணீரன்று. சுண்டெலியின் மரணத்திற்காகச் சிந்தப்பட்ட சுத்தக் கண்ணீர்."

இதைபோல் ஏகப்பட்ட சம்பவங்கள் உண்டு, அரை கிலோ அரிசியை கொண்டு ஆறு பேர் (மன்னிக்கவும் சுண்டெலியை சேர்த்து ஏழு) ஐந்து நாள் உட்கொள்ள அவர்கள் கையாளும் யுக்தி, புயலுக்கு நடுவே எஞ்சி இருக்கும் இரண்டு தீக்குச்சிகளை கொண்டு தீப்பந்தம் ஏற்ற எடுக்கும் முயற்சி, படகை கடக்கும் ஒரு கப்பலின் கவனத்தை பெற அவர்கள் செய்யும் செயல், கடல் நீருக்கு நடுவே இருந்தாலும் மழை நீரை சேமித்து வைக்க அவர்கள் படும் பாடு என்று உயிர் வாழ்வதற்காக அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் இதிலாவது வென்றுவிடமாட்டர்களா என்று நம்மை பதறவைக்கும்.

உடம்பில் எத்தனை சதவிகிதம் நீர், பெர்முடாஸ் முக்கோணத்தின் மர்ம முடிச்சு, அம்மாவாசையில் கடல் ஏன் பொங்குகிறது, தீவு எப்படி ஏற்படுகிறது,  இடி எப்படி உருவாகிறது போன்ற அணைத்து கேள்விகளுக்கும் விஞ்ஞான விளக்கத்தை  கவிதை நடையில் வாசிக்கலாம்.... ரசிக்கலாம். நாவலின் பின்னட்டையில் உள்ள குறிப்பு சொல்வதைப்போல் இது 'தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம்'.

நாவலில் இருந்து எனக்கு பிடித்த சில வரிகள்...

"நிகழும் வரைக்கும்தான் ஒன்று அதிசயம். நிகழ்ந்த பிறகு அது சம்பவம்." 

"இந்த விஞ்ஞான நெருப்பு வீசப்பட்டவுடன், அதுவரை நம்பப்பட்டு வந்த பிசாசு இறந்துவிட்டது."

"அவன் தூக்கமுயன்றான். அவள் துவண்டு விழுந்தாள்.
கைதட்டிச் சிரித்தன அலைகள். நாடகம் பார்த்தன நண்டுகள்.
அவள் தரைமேல் மீனாய் வலைமேல் உருண்டாள்".

"செருப்புக் கடித்துச் செத்துப்போகும் தேகங்களை வளர்த்துவிட்டோம்.
தந்திவந்தால் இறந்துபோகும் இதயங்களை வளர்த்துவிட்டோம்.
உங்கள் பெண்ணும் விதிவிலக்கல்ல, அவள் ஈசல் உடம்புக்காரி காளான் மனசுக்காரி".

"சாதிக்கும் முளையிருந்தும் சோதிக்கும் முயற்சி இல்லை".

"ஒரு காதல் கடிதம் படிக்கப்படும்போதே எண்பது சதவிகிதம் கழிக்கப்பட வேண்டும்".

"பெண்மீது காதலும் வெற்றிமீது வெறியும் இல்லையென்றால் இன்னும் இந்த பூமி பிறந்த மேனியாகவே இருந்திருக்கும்".  

"அவள் அவனை நிஜமாய்க் கிள்ளிப் பொய்யாய் அழுதாள்".

இப்படி நிறைய உண்டு.
பொதுவாக கவிஞர்கள் ஆயிரம் வார்த்தைகளைக்கொண்டு சொல்லவேண்டிய ஒன்றை இரு அடியில் சொல்லிவிடுவார்கள். அது அவர்களுக்கு கை வந்த கலை. அவர்களிடம் உலகில் மூன்றில் ஒரு பகுதியை கொண்ட கடலை கொடுத்தால்? அதையும் சுருக்கி மேன்மை குறையாமல் ஒரு கோப்பையில் அடைந்திருக்கிறார் வைரமுத்து என்றே சொல்லவேண்டும். இந்த பதிவை எழுத்துவதற்கே எனக்கு ஒரு வாரம் ஆனது, 300 பக்கம் கொண்ட இந்த நாவலை எழுதுவதற்கு எதனை மாதங்களை , ஆண்டுகளை அவர் செலவிட்டிருப்பார் என்று நினைத்தால்
கடலைப்போலவே அவரும் ஆச்சரியமாய் இருக்கிறார்.

பெயர்: தண்ணீர் தேசம்
ஆசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து
விலை: ரூ.150