Saturday, July 17, 2021

கலைஞர் காவியம் - வாலி


    லைஞரின் வாழ்க்கை வரலாறு  தமிழ்நாட்டில் 20 வயதை கடந்தவர்கள் யாருக்கும்  அறியாத ஒன்றோ தெரியாத ஒன்றோ அல்ல. அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்து  இருப்பினும், அவரை பற்றி அனைவருக்கும் தெரியும். யாரேனும் தெரிந்து கொள்ள விரும்பினால், இருக்கவே இருக்கிறது அவர் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் அடங்கிய புத்தகம் 'நெஞ்சுக்கு நீதி'.  இப்படி நாடறிந்த ஒருவரை பற்றி நாம் (மீண்டும்) சொல்ல வரும் போது, அதுவும் அவர் முன்னிலையிலேயே அது புத்தகமாக வெளிவரும் போது, ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரையும் கவர வேண்டும். இந்த புத்தகம் அதை கச்சிதமாக செய்திருக்கிறது. தெரிந்த சம்பவங்களை கதையாக சொல்லாமல் கவிதையாக சொல்லியிருக்கிறது.  

புத்தகம்: கலைஞர் காவியம் 
எழுதியவர்: காவியக் கவிஞர் வாலி 
வெளியீடு: குமரன் பதிப்பகம் (2006)
விலை: ரூ 100

வாலி கலைஞரின்  மேல் கொண்ட காதல் தான் இந்த புத்தகம், சாதாரண மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் ஒருவரால் இப்படி எழுத முடியாது. வாலியின் வரிகளில் தான் எவ்வளவு அன்பு, எவ்வளவு காதல்;  கலைஞரின் மேல் காதல், கலைஞர் தமிழின் மேல் காதல், எல்லாம் சேர்ந்து நமக்கு புத்தகத்தின் மேல் காதலை ஏற்படுத்தும். பக்கத்துக்கு பக்கம் கவிதை மழை , வார்த்தைக்கு வார்த்தை புகழ்ச்சி. கலைஞரின் பெற்றோர், திருக்குவளை, பெரியார், அண்ணா, தி.மு.க, சினிமா, வசனம், தொல்காப்பியப்  பூங்கா என்று ஒவ்வொன்றையும் கவிதையாக்கியிருக்கிறார் வாலி.

நீ 
எவரோ யாரோ அல்ல;
நான் 
ஏழெட்டு வரிகளில் சொல்ல!

- என்று சொல்லும் வாலி, கலைஞர் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அணு அணுவாய் ரசித்து எழுதியிருக்கிறார். அவருடைய கவிதை நடை, சொல்லும் உவமை என எல்லாம் கலந்து நம்மை மயக்குகின்றன. ஏதோ அணைத்து கவிதைகளையும் இலக்கிய தரத்தில் மட்டுமே எழுதியிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். ஹைக்கூவும் உண்டு, நகைச்சுவையும் உண்டு.
உதாரணத்திற்கு, 

நீ
மேற்கு இல்லாத கிழக்கு;
வடக்கு வழிபடும் தெற்கு!

என்று அவருடைய அரசியல் ஆளுமையை சொல்லும் வாலி, அவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமணையில் அனுமதித்திருந்தபோது தொண்டர்களின் எண்ணத்தை இப்படி சொல்லுகிறார்.

சமீபத்தில் சிறு 
ஆரோக்கியக் குறைவால் 
அஞ்சாறு நாள்கள் 
அய்யா நீ சேர்ந்திருந்தாய் 
அப்பல்லோ;
அடடா!
அருந்தமிழ்த் தாய் 
அலைபாய்ந்து நின்றது 
அப்  பல்லோ;

ஆனாலும் எங்களை இப்படி நீ 
அச்சுறுத்தல் தப்பல்லோ;
21 பகுதிகள் கொண்ட இந்த புத்தகம் - கலைஞரின் தாய் தந்தை முதல் அவரது பிறப்பு,  இளமைப்பருவம், அரசியல், எழுத்து என அனைத்தையும் தொட்டு செல்கிறது. 
சிறு வயதில் படம் வரைந்துகொண்டிருந்த வாலியை கலைஞரின் படங்கள் தான் பாடல் எழுத தூண்டின என சொல்கிறார் . ஆனால் அதை வார்த்தையாய் சொல்லாமல் கவிதையாய் சொல்கிறார். 

பாலியத்தில் 
படம் வரைந்த என்னை - உனது 
படங்கள்தாம் 
பாட்டு வரையப்  பண்ணின;
நீ 
நிர்க்கச் சொல்லும் இடத்தில 
நிற்பவன் நான்;
இன்னமும் 
இருந்தமிழை - உன் 
காலடி நிழலில் நின்று 
கற்பவன் நான்;
நீயெனக்கு 
நிரம்பப் பிடித்தமானவன்; நான் 
உனக்குத் தெரியாமலே  
உன்னிடம் படித்த மாணவன்!

 தமிழக அரசியல் வரலாற்றை யாரேனும் எழுத துணிந்தால் கலைஞரை தவிர்த்து எழுத முடியாது என்பது கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் அறிந்த ஒன்று. 1940 முதல் 2018 வரை நேரடியாகவோ மறைமுகமாகவோ  தமிழக அரசியல் போக்கை தீர்மானித்தவராக இருந்திருக்கிறார். 1967ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை (அண்ணாவோடு இணைந்து) வீழ்த்தியவரும் அவரே, 1972ல் அ.தி.மு.க என்னும் கட்சி உதயமாவதற்கு காரணமானவரும் அவரே. அரசியல் ரீதியாக அவரின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இருக்கலாம் ஆனால் தமிழ்த்தாயின் தலைமகனாக ஒட்டு மொத்த தமிழ்நாடும் முழுமனதோடு அவரை ஏற்றுக்கொண்டனர், அந்த கரகரப்பான குரலில் இருந்து வெளிவரும் தமிழுக்காக காத்துக்கொண்டிருந்தனர், மயங்கிப்போய் கிடந்தனர். தமிழ் என்கிற ஒற்றை ஆயுதத்தை வைத்து அவர் வீழ்த்திய எதிரிகள் ஏராளம் ஏராளம், அவர் வென்ற வெகுஜனம் அனேகம் அனேகம்.இப்படி பலரும் ரசித்த கலைஞரை ஒரு கவிஞனும் ரசித்திருக்கிறார், தன்  தமிழால் அவரை இந்த புத்தகத்தில் ஆராதித்திருக்கிறார். நாம் அறிந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் தன்  தமிழால் புதுமையாய் சொல்லியிருக்கிறார்.

உதாரணத்திற்கு, 1924இல் கலைஞர் பிறந்தார் - இது நாடறிந்த செய்தி. அதையே வாலி 

அஞ்சுகம் 
அம்மையார் ..
மூன்றாம் முறையாக - 
முழுகாது நின்றார்;
மசக்கை நேர்ந்து -
மாங்காய் தின்றார் !

கதிர்க் கன்று ஒன்று 
கண்  விழித்தது; அது 
கண் விழித்த வேலை - இந்த 
மண் விழித்தது!

'பின்னாளில்' - இந்தத் 
தென்னாட்டில் நடக்கும்! - தன் 
பிள்ளையின் ஆட்சி! என ...
அந்நாளில் - 
அறிந்திருக்க நியாயமில்லை
அந்தப் பிள்ளைத்தாய்ச்சி!

நீங்கள் உரைநடையாய்  படித்து தெரிந்து கொண்ட ஒரு செய்தியை இப்படி கவிதையாய் படிக்கும் போது உங்களை அறியாமல் உங்கள் உதடுகள் சிரிக்கும்; உள்ளம் ரசிக்கும்.

அதேபோல், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கலைஞராலும், ஒரு ரூபாய்க்கு ஒரு போன் கால் தயாநிதியாலும் கொண்டுவரப்பட்டு மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற  திட்டம், அடித்தட்டு மக்கள் கொண்டாடிய திட்டம். இந்த திட்டத்தை வாலி இப்படி சொல்லுகிறார்.

நீ விருட்சம்; 
நினது  பேரன் விழுது;
என்ன காரணம் எனில் 
உன்னுடைய உதவி --
இரு ரூபாய்க்கு ஒரு கிலோ;
உன் பேரனின் உதவி --
ஒரு ரூபாய்க்கு ஒரு ஹலோ!

தமிழ்நாட்டில் இருந்துகொண்டே இந்திய அரசியலை தீர்மானித்தவர், இவரை பார்க்க சோனியாவும், ராகுலும், ஏனைய மத்திய அமைச்சர்களும் சென்னைக்கு பலமுறை வந்திருக்கிறார்கள். திரைப் பிரபலங்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், மடாதிபதிகள் என அனைவரும் இவரின் தரிசனத்திற்காக காத்துக்கிடந்த காலங்கள் உண்டு. இது போன்ற சம்பவங்களை புகழின் உச்சியில் வைத்து கொண்டாடுகிறார் வாலி. 

செங்கோட்டை 
உன் கோட்டை; 
தலைவா! அது 
தாண்டுமா நீ கிழித்த கோட்டை?

எது 
எப்படி யிருப்பினும் 
திருக்குவளை சொல்லி இனி 
தலையாட்டும் டில்லி!

நீ 
பரத நாட்டியமும் அறிந்தவன்;
பாரத நாட்டியமும் புரிந்தவன்! 
நான் சாதாரணமாக ஒரு விஷயத்தை உள்ளது உள்ளபடி சொன்னால் அது உண்மை. அதுவே கவிஞர்கள் சொன்னால் அது உரக்கச் சொல்லும் உண்மை.  கலைஞர் அரசு இயந்திரத்தை நன்கு  அறிந்தவர், இயற்கையாகவே நிர்வாக திறமை கொண்டவர் என்று நான் சொன்னால் அது உண்மை. அதையே வாலி உரக்கச் சொல்லும் போது..

காடாளும் அரிமா போல் 
கலைஞர் நோக்கு;
கடுகளவும் பிறழாது 
கலைஞர் நாக்கு;
நாடாளும் திறமையைத்தான் 
நாடே பேசும் 
நான்சொல்லிக் காட்டியாஊர் 
நிலவென் றேற்க்கும்?

இப்படி நிறைய உண்மைகளை உக்கச் சொல்லுகிறார்.

இந்த புத்தகத்தில் நாம் விரும்பத்தக்க ஒரு முரணும் இருக்கிறது. அணிந்துரைத்தான் அது. கலைஞரின் தமிழை நேசிக்கும் வாலி எழுதிய புத்தகத்திற்கு, கலைஞரின் அரசியலை அதிகம் எதிர்த்த சோ தான் அணிந்துரை வழங்கியிருக்கிறார். சோவின் அணிந்துரை இந்த புத்தகத்திற்கு ( சோவின் பாஷையில் 'புஸ்தகத்திற்கு') இன்னொரு ஹய்லைட். அவரே சொல்லுகிறார் "நானும் கலைஞரை பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். என் பார்வை, ஒரு விமர்சகனின் பார்வை; வாலியின் பார்வை ஒரு ரஸிகனின்   பார்வை.... என் விமர்சனங்கள் பற்றி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஏனெனில், அவை நேர்மையானவை. வாலியும், போலி அல்ல. மனதில் எழுந்த எண்ணங்களை அவர் எழுத்தில் வடித்திருக்கிறார்."

கிட்டத்தட்ட ஏழு பக்கங்கள் கொண்ட இந்த அணிந்துரை, முரண்களை நிராகரிக்காமல் அதே சமையம் உள்ளத்தில் உள்ள நேர்மையை சீர்தூக்கிப் பார்க்கும் ஒரு அற்புதமான அணிந்துரை.

நான் சொன்னது அனைத்தும், நான் அருந்தியபோது சிந்தியவைதான். முழுமையாக ரசிக்க நீங்கள் வாங்கி வாசித்து பார்க்கவேண்டும் என்பதுவே  எனது ஆசை.

நிறைவாக புத்தகத்தில் இருந்து மற்றும்மொரு கவிதை.

நீ 
தடியெடுத்த 
தந்தை பெரியாரையும்; போடப் 
பொடியெடுத்த 
பேரறிஞர் அண்ணாவையும்; ஒருங்கே 
படியெடுத்த மாதிரி 
பிறங்குகின்றாய்; அவர்கள் 
முடிவெடுத்த மாதிரி - எதிலும் 
முனைந்து இறங்குகின்றாய்!

உன் 
வெள்ளை உள்ளத்தைக் கண்டேன் 
ஒரு சேயுள்; உன் - 
வாஞ்சை உள்ளத்தைக் கண்டேன் 
ஒரு தாயுள்;
வண்ணத் தமிழ் 
வாழ்கிறது உன் வாயுள்; ஆதலால்-
வண்ணத்  தமிழ் போலே 
வளர்ந்து வரும் உன் ஆயுள்!
====================

1 comment:

Unknown said...

Beautiful comparison lies inthe last stanza of Poet Vaali for Mr
.karunanidhi.Touching rhyming words decorate the poem