Saturday, November 30, 2019

தண்ணீர் தேசம்: படிக்கப் படிக்க பரவசம்திகட்ட திகட்ட காதல்...
இனிக்க இனிக்க அறிவியல் ....
ததும்ப ததும்ப தன்னம்பிக்கை ....
ரசிக்க ரசிக்க தமிழ், இது தான் தண்ணீர் தேசம்.

இதை பலரும் படித்திருக்க கூடும், பலரும் படித்த இந்த நாவலை நான் பலமுறை படித்திருக்கிறேன்.
கடலை விரும்பும் காதலன், தண்ணீர் பயம் கொண்ட காதலி, நான்கு நண்பர்கள் மற்றும் ஒரு சுண்டெலி. இது  மனிதர்களை எதிர்த்து மனிதர்கள் போராடும் கதை அல்ல, இயற்கையை எதிர்த்து  காதலர்கள் போராடும் கதை. கடலை பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்திருக்கிறார் ஆசிரியர், அதை சொல்வதற்காக அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட களம் காதல், அதுவும் ஒரு மெல்லிய காதல், அதற்க்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக கதாபாத்திரத்தின் பெயர்கள் கலைவண்ணன் - தமிழ்ரோஜா. 

எதேர்சையாக காதலர்கள் இருவரும் மீனவ நண்பர்களுடன் படகில்  பயணிக்கிறார்கள், நான்காவது அத்தியாயத்தில் படகு பழுதாகிறது , நடுக்கடலில் தத்தளிக்கும் இவர்கள் கரை வந்து சேருகிறார்களா என்பதே   கதை. இயற்கையோடு அவர்கள் போராடும் ஒவ்வொரு தருணத்தையும் நாம் படிக்கும் போது  நம் இதயம் நின்று நின்று துடிக்கும் என்பது மட்டும் நிஜம். 

கதையை சொல்லிக்கொண்டு போகும் போதே இடை இடையே  அறிவியலையும் தன்னம்பிக்கையையும் சொரிகிக்கொண்டே செல்கிறார். கதையின் நாயகன் ஒரு பத்திரிகையாளன், அனைத்தையும் அறிவியல் கண் கொண்டு பார்க்கும் ஒரு அறிவாளி. நாயகியோ  பணக்கார வீட்டு பெண், இயற்கைக்கும் அவளுக்கும் வெகு தூரம், தண்ணீர் பயம் கொண்டவள்.  அவள் பயம் கொள்ளும் போதெல்லாம் கலைவண்ணன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எதிர்மறை எண்ணம் கொண்ட அனைவரும் படித்து பருகவேண்டிய மருந்து. படகு பழுதானபோது வாழ்வே முடிந்துவிட்டது என்று தமிழ் ரோஜா புலம்பும்போது அவன் சொல்லுவான்...

"வாழ்வை கற்பனை செய்.
சாவை கற்பனை செய்யாதே..

பூக்கள் காற்றில் உதிர்ந்தால் பூகம்பம் 
வந்துவிட்டதென்று புலம்பித்  திரியாதே.
உச்சிவானத்தில் நிலா வந்தால் தலையில் 
விழுந்துவிடுமோ என்று சந்தேகப்படாதே..
இன்பத்தைக் கற்பனை செய்து பார்.
துன்பத்தைப் எதார்த்தமாய்ப் பார்.

படகு பழுதானதொரு சின்னஞ்சிறு செய்தி..

உடனே இதுதான் வாழ்வின் கடைசி 
இரவென்று சுருங்கிப் போகாதே..
இன்பத்தை இரண்டாய்ப் பார்,
துன்பத்தை பாதியாய் பார்...
விரல் விழுந்துவிட்டால் அழுதுகொண்டிருக்கக் கூடாது. 
நகம் வெட்டும் நேரம் மிச்சம் என்று நினைத்துக் கொள்வோம்.
படகு பழுதானால் பதறிக் கொண்டிருக்கக் கூடாது.
கடலில் ஓர் இரவு என்ற கட்டுரைக்கு குறிப்பெடுப்போம்."

 மனிதர்கள் உடைந்து போகும் நேரங்களில் இது போன்ற தன்னம்பிக்கை வார்த்தைகள்  சொல்ல ஆள் இல்லாததே இன்று இருக்கும் பெரும் பிரச்சனை. படிக்கும்போதே இவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்துகிறதே, ஒவ்வொருவருக்கும் வாழ்வில்  இப்படி ஒரு நபர் உடன்  இருந்தால் !!!. 

இங்கே முழு கதையையும் சொல்வது என் நோக்கமல்ல ஆனால் சில உரையாடல்களை சொல்ல விரும்புகிறேன். அதில் முக்கியமான ஒன்று கலைவண்ணனுக்கும் தமிழ்ரோஜாவின் தந்தைக்கும் மருத்துவமனையில் நடக்கும் உரையாடல். இரண்டு யதார்த்தவாதிகள் வெவ்வேறு துருவத்தில் நின்று பேசும் காட்சி.

சிகரெட்டை புகைத்துக்கொண்டே அகத்தியர் சொல்லுவார்...
"தமிழை இன்னும் கொஞ்சம் மென்மையாய் கையாண்டிருக்கலாம்"..

கலைவண்ணனுக்கு அவரிடம் பிடித்தது அவர்  பெண், பிடிக்காதது அவர் பிடிக்கும் சிகரெட்... "இப்படி நீரச்சம் கொண்டவள் என்று நினைக்கவில்லை நான், நீரச்சம் நிரந்தர அச்சம் அல்ல. இந்தத் தண்ணீர் பயத்தை தவிர்த்தாக வேண்டும்"

"கவனம்! தூசு எடுக்கும் அவசரத்தில் கருமணியே தூர்ந்துவிடக்கூடாது. எனக்கு அவள் ஒரே பெண்".

"நான் சகாராவின் சகோதரன். பகல் சுடும் - இரவு குளிரும் - இதுதான் என் பயணம்.நான் பத்திரிகையாளன். பேனாவின் மூடி திறந்தபோதே என் மார்பையும் திறந்துவைத்துக் கொண்டவன்..."

"தமிழை மனம் செய்துகொண்டால் உங்கள் பாலைவனம் கடக்கச் சொந்த விமானம் ஒன்று தந்துவிட மாட்டேனா?"

"சொந்தத்தில் விமானம் வாங்கலாம்.
அனுபவம் வாங்க முடியுமா?
உங்கள் பணம் எனக்கு குடைவாங்கித் தரலாம்.
மலை வாங்கித் தர முடியுமா?"

அகத்தியர் அவன் தோள்தொட்டு  சொல்லுவார்... "பணம் இல்லாதவன்தான் பணத்தை மதிப்பதில்லை.

இவர்கள் பேசிக்கொள்வது மட்டும் ஒரு பத்து பக்கம் இருக்கும், முழு உரையாடலும் தர்க்கத்தின் உச்சம். நீங்கள் படித்தால் மட்டுமே ரசிக்க முடியும்.

படகு நின்று பதினான்கு நாள் ஆகியிருக்கும், கரை சேருவது கடினம் என்ற நிலையில் கலைவண்ணனுக்கு ஒரு யோசனை வரும், தங்களுடைய நிலையை ஒரு கடிதத்தில் எழுதி புட்டியில் வைத்து அடைத்து கடலில் எறிந்தால் என்ன என்று, யார் கண்ணிலாவது பட்டால் அவர்கள் உதவிக்கு வரக்கூடும் என்று சொல்லுவான். இசக்கி அத்தோடு தன தாய்க்கு ஒரு கடிதத்தையும் வைத்து அனுப்ப முடியுமா என்று கேட்பான், கடைசியில் ஆளுக்கு ஒரு கடிதம் எழுதுவது என்று முடிவாகும். அவர்கள் ஒவ்வொருவர் எழுதும் கடிதமும் ஒவ்வொரு குட்டி கதை.  உதாரணத்திற்கு பரதனின் கடிதம்.

அன்புள்ள மீனா. 
என் ஆசை மகளே. நீ பிறந்தது முதல் உன்னைப் பத்து நாட்களுக்குமேல் பார்க்காமலிருந்தது இப்போதுதான். ஒருவேளை, உன்னை இனிமேல் பார்க்கவே மாட்டேனோ என்று பயமாகவும் இருக்கிறது. உன் பிரசவத்திலேயே உன் தாயைப் பறிகொடுத்த நான் அப்போதே செத்திருப்பேன். ஆனால், உன் பிஞ்சுக்கைகளின் உத்தரவுக்குத்தான் நான் பிழைத்துக் கிடந்தேன்.

எனக்கு ஒரே ஓர் ஆசை இருந்தது தாயே. அந்தத் தகரப்பெட்டியில் நாப்தலின் உருண்டைகளுக்கு மேலே மடித்து வைக்கப்பட்டிருக்கும் உன்தாயின் பழைய பட்டுப் புடவையை, நீ வளர்ந்த பிறகு உனக்குக் கட்டி
அழகு பார்த்து.. உன்னில் உன் தாயைப் பார்க்க ஆசைப்பட்டேன். என் நியாயமான ஆசை அநியாயமான கனவாகவே அழிந்துவிடுமா? உன் தாயின் பிரிவை நான் தாங்காதது போலவே என் பிரிவை அவளும்
தாங்கவில்லைபோலும். கண்ணுக்குத் தெரியாத கைநீட்டி என்னை அழைத்துக் கொண்டேயிருக்கிறாள். கரை
வந்தால் உன்னோடு வாழ்வேன். என்னைக் கடல்கொண்டால் உன் தாயோடு சேர்வேன். 
படி மகளே படி. நம் இனத்தைப் பரம்பரைத் துயரிலிருந்து மீனவர்மகளே... மீட்கப் படி. ஒரு விதையைப் பூமி
பாதுகாப்பதைப் போல உன்னை உன் தாத்தா பாதுகாப்பார் என்று நம்புகிறேன். ஜென்மங்களில் எனக்கு
நம்பிக்கை இல்லை மகளே. இருந்தால் - எவ்வளவு வசதியாக இருக்கும்.

உன் அன்பு அப்பா,
பரதன்

கிட்டத்தட்ட ஒவ்வொரு கடிதமும் ஒரு மரண வாக்குமூலம் போல்  இருக்கும்.

அதே போல்  சலிமுக்கும் சுண்டெலிக்கும் உள்ள உறவு ஒரு தனிக்கதை... நான் சொல்வதை விட நீங்கள் படித்து ரசிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சேமித்த உணவுகள் அனைத்தும் தீர்ந்துவிடும் குடிதண்ணீர் உட்பட. அப்போது தமிழ்ரோஜாவின் கைப்பையில் இருந்து ஒரே ஒரு சாக்லெட் கண்டெடுக்கப்படும்... அது ஆறு பங்காய் பிரிக்கப்படும்போது.. வைரமுத்து இப்படி எழுதியிருப்பார்.

"சாக்லெட் பிளக்கப்பட்டது.
இந்தியா-பாகிஸதான்
பிரிவினையைவிட அது
கவனமாகவே
கையாளப்பட்டது.

அவரவர் துண்டு அவரவர்
கைக்கு வந்ததும், உயிருக்கு
அது ஓர் அமிர்தச் சொட்டு
என்றே அறியப்பட்டது."

சலீம் தனக்கான பங்கை எடுத்துக்கொண்டு சுண்டெலியை தேடி ஓடுவான். அது கொல்லப்பட்டிருக்கும், அதை பார்த்து அவன் கதறி அழும் போது கதையில் வார்த்தைகள் இப்படி வரும்...

"தண்ணீர் குடிக்காத தேகத்தில் எப்படித்தான் அவ்வளவு கண்ணீர் இருந்ததோ."
"ஒரு மனிதன் -
எத்தனை நாடுகள் கடந்தான். எத்தனை கடல்கள் கடைந்தான். எத்தனை பேரைக் கொன்றான். எத்தனை மகுடம் கொண்டான். எத்தனை காலம் இருந்தான். எத்தனை பிள்ளைகள் ஈன்றான் - என்பவை அல்ல அவன் எச்சங்கள்.


இவையெல்லாம் நான் என்ற ஆணவத்தின் நீளங்கள். 
அவன் இன்னோர் உயிருக்காக எத்தனைமுறை அழுதான் என்பதுதான், அவன் மனிதன் என்பதற்கான மாறாத சாட்சி.

சலீம் அழுதான்.

அது சுயசோகத்திற்காகச் சொட்டிய கண்ணீரன்று. சுண்டெலியின் மரணத்திற்காகச் சிந்தப்பட்ட சுத்தக் கண்ணீர்."

இதைபோல் ஏகப்பட்ட சம்பவங்கள் உண்டு, அரை கிலோ அரிசியை கொண்டு ஆறு பேர் (மன்னிக்கவும் சுண்டெலியை சேர்த்து ஏழு) ஐந்து நாள் உட்கொள்ள அவர்கள் கையாளும் யுக்தி, புயலுக்கு நடுவே எஞ்சி இருக்கும் இரண்டு தீக்குச்சிகளை கொண்டு தீப்பந்தம் ஏற்ற எடுக்கும் முயற்சி, படகை கடக்கும் ஒரு கப்பலின் கவனத்தை பெற அவர்கள் செய்யும் செயல், கடல் நீருக்கு நடுவே இருந்தாலும் மழை நீரை சேமித்து வைக்க அவர்கள் படும் பாடு என்று உயிர் வாழ்வதற்காக அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் இதிலாவது வென்றுவிடமாட்டர்களா என்று நம்மை பதறவைக்கும்.

உடம்பில் எத்தனை சதவிகிதம் நீர், பெர்முடாஸ் முக்கோணத்தின் மர்ம முடிச்சு, அம்மாவாசையில் கடல் ஏன் பொங்குகிறது, தீவு எப்படி ஏற்படுகிறது,  இடி எப்படி உருவாகிறது போன்ற அணைத்து கேள்விகளுக்கும் விஞ்ஞான விளக்கத்தை  கவிதை நடையில் வாசிக்கலாம்.... ரசிக்கலாம். நாவலின் பின்னட்டையில் உள்ள குறிப்பு சொல்வதைப்போல் இது 'தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம்'.

நாவலில் இருந்து எனக்கு பிடித்த சில வரிகள்...

"நிகழும் வரைக்கும்தான் ஒன்று அதிசயம். நிகழ்ந்த பிறகு அது சம்பவம்." 

"இந்த விஞ்ஞான நெருப்பு வீசப்பட்டவுடன், அதுவரை நம்பப்பட்டு வந்த பிசாசு இறந்துவிட்டது."

"அவன் தூக்கமுயன்றான். அவள் துவண்டு விழுந்தாள்.
கைதட்டிச் சிரித்தன அலைகள். நாடகம் பார்த்தன நண்டுகள்.
அவள் தரைமேல் மீனாய் வலைமேல் உருண்டாள்".

"செருப்புக் கடித்துச் செத்துப்போகும் தேகங்களை வளர்த்துவிட்டோம்.
தந்திவந்தால் இறந்துபோகும் இதயங்களை வளர்த்துவிட்டோம்.
உங்கள் பெண்ணும் விதிவிலக்கல்ல, அவள் ஈசல் உடம்புக்காரி காளான் மனசுக்காரி".

"சாதிக்கும் முளையிருந்தும் சோதிக்கும் முயற்சி இல்லை".

"ஒரு காதல் கடிதம் படிக்கப்படும்போதே எண்பது சதவிகிதம் கழிக்கப்பட வேண்டும்".

"பெண்மீது காதலும் வெற்றிமீது வெறியும் இல்லையென்றால் இன்னும் இந்த பூமி பிறந்த மேனியாகவே இருந்திருக்கும்".  

"அவள் அவனை நிஜமாய்க் கிள்ளிப் பொய்யாய் அழுதாள்".

இப்படி நிறைய உண்டு.
பொதுவாக கவிஞர்கள் ஆயிரம் வார்த்தைகளைக்கொண்டு சொல்லவேண்டிய ஒன்றை இரு அடியில் சொல்லிவிடுவார்கள். அது அவர்களுக்கு கை வந்த கலை. அவர்களிடம் உலகில் மூன்றில் ஒரு பகுதியை கொண்ட கடலை கொடுத்தால்? அதையும் சுருக்கி மேன்மை குறையாமல் ஒரு கோப்பையில் அடைந்திருக்கிறார் வைரமுத்து என்றே சொல்லவேண்டும். இந்த பதிவை எழுத்துவதற்கே எனக்கு ஒரு வாரம் ஆனது, 300 பக்கம் கொண்ட இந்த நாவலை எழுதுவதற்கு எதனை மாதங்களை , ஆண்டுகளை அவர் செலவிட்டிருப்பார் என்று நினைத்தால்
கடலைப்போலவே அவரும் ஆச்சரியமாய் இருக்கிறார்.

பெயர்: தண்ணீர் தேசம்
ஆசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து
விலை: ரூ.150

No comments: