Thursday, August 13, 2020

விலாசம்

 நிறைய கடைகளில் குறிப்பாக ஹோட்டல்களில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும், அந்த கடையின் பெயரை டம்ளர்களில் பொறித்திருப்பார்கள்.  சென்னையில் நான் வேலை பார்த்தபோது பூந்தமல்லி ரோட்டில் (Chetpet) உள்ள ஒரு உணவகத்துக்கு அடிக்கடி செல்வதுண்டு, அந்த உணவகத்தில் உள்ள பொருட்களில் "இது  ஹோட்டலில் திருடப்பட்டது' என்று பொறித்திருப்பார்கள்.  யாரேனும் எடுத்துச் சென்றால் உபயோகிக்க முடியாது என்ற நோக்கில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் நான் சொல்ல வருவது இது போன்ற ஒன்று அல்ல,  "பெயர் வெட்டுதல்"  என்கிற இரண்டு வார்த்தையை மிகவும்  நேர்த்தியான முறையில் தமிழகத்தின் ஒரு பகுதியை சேர்ந்த மக்கள்  பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு எழுத்தை (initial) வைத்து அந்த பொருளின் காலத்தையும் அவர்களுடைய முனோர்களையும் (குறைந்தது இரண்டு  தலைமுறை) தெரிந்துகொள்ளும்படி பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஏதோ தங்கத்திலும் ,  வெள்ளியிலும் விலையுயர்ந்த பொருட்களில் மட்டும் தான் போடுவார்கள் என்று எண்ணுவீர்களாயின் அது தவறு, நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத விலை குறைந்த சிறு பொருட்களில் கூட வெட்டியிருப்பார்கள். 

தட்டு, கரண்டி தொடங்கி, மர சாமான்கள், மங்கு சாமான்கள், பீங்கான் சாமான்கள், கல்லு சாமான்கள், பித்தளை சாமான்கள் இரும்பு சாமான்கள் தொட்டு வெள்ளி சாமான்கள் வரை தொடரும். சாதாரண கர்ச்சீப் திரைச்சீலைகளில் கூட உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

உதாரணத்திற்கு எனக்கு சட்டென நினைவுக்கு வரும் சில பொருட்கள்.

*சாவி *மேசை *நாற்காலி *சங்கு *விளக்கு *அம்மி *குழவி *ஆட்டுக்கல் *அலமாரி *ஜாடி *கைப்பை *கோலாட்டக்குச்சி *மெத்தை *தலையணை *பாய் *வடிகட்டி  இன்னபிற.

கல் மற்றும் மர சாமான்களில் விலாசத்தை செதுக்கி மை தீட்டியிருப்பார்கள், சில்வர் மற்றும் வெள்ளி சாமான்களில் பொறித்திருப்பார்கள், துணிகளில் ஒன்று பின்னியிருப்பார்கள் அல்லது அழியாத மையால் எழுதியிருப்பார்கள்.

சரி, இதனால் என்ன பயன்?

1. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த அந்த காலத்தில் யாரேனும் ஒரு பொருளை (சிறு பொருளாக இருந்தாலும் கூட) எங்கேனும் மறந்து வைத்துவிட்டால், இந்த விலாசத்தை பார்த்து எளிதில் அவரிடம் ஒப்படைக்க முடியும்.

2. நான்கு ஐந்து மருமகள்கள் இருந்தால் இன்னாருடைய பொருள் என்பது  எளிதில் தெரியும்.

3. யார் யாருக்கு கொடுத்தது என்பதையும் எப்போது வாங்கப்பட்டது என்பதையும் கண்டறிய முடியும்.

4. ஒருவேளை கடையில் வாங்காமல் இன்னொரு குடும்பத்திடம் இருந்து வாங்கியிருந்தால், அந்த விலாசத்தை அடித்துவிட்டு மேலே இவர்களுடைய பெயரை போடுவார்கள், ஆகா யாரிடம் இருந்து வாங்கினோம் என்பது 50 ஆண்டுகள் கழித்துக்கூட தெரிந்துகொள்ளலாம்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான பயன் இதுதான். என் வீட்டில் ஒரு பொருள் கீழே விழுந்து உடைந்துவிட்டால், நாங்கள் உடனே பார்ப்பது பெயரைத்தான். என் வீட்டுப் பொருளை அவளோ (மனைவியோ) அல்லது அவள் வீட்டுப் பொருளை நானோ உடைத்துவிட்டால் "எங்க ஆயா வீட்டு சாமானை உடைச்சுட்டீங்களே" என்று அவளும் "எங்க அப்பத்தா காலத்து சாமானை உடைச்சுட்டியே" என்று நானும் சொல்லி வரும் சண்டை கிட்டத்தட்ட ஒரு வாரம் போகும் என்றால் இதன் முக்கியத்துவத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.

எனக்கு விபரம் தெரிந்து ஒரு திருமணம் பேசி முடித்த உடன் முக்கியமான வேளைகளில் ஒன்று பெயர் வெட்டுபவரை அழைப்பதுதான். மூன்று எழுத்துக்கு காலணா  அல்லது நான்கு எழுத்துக்கு எட்டணா என்று கூலி நிர்ணயித்துவிட்டு புதிதாக வாங்கிய சீர்வரிசை சாமான்கள் எல்லாவற்றிலும் பெயர் வெட்டுவார்கள். ஒரு சிறு தவறு கூட நிகழாமல்  இரு கால்களுக்கு நடுவில் வைத்து அவர்கள் பெயர் வெட்டும் அழகே தனி, அப்படி ஒரு நேர்த்தியான முறையில் அது இருக்கும். இது அவர்களுக்கு முக்கிய தொழிலாக இருக்காது, ஏதாவது பாத்திர கடைகளில் வேலை செய்துகொண்டு இதை பகுதி நேர வேலையாக செய்வார்கள். ஒரு சிறிய சுத்தியலும்  , சில வகையான ஆணிகளும் நல்ல பயிற்சியும் தான்  மூலதனம். காலப்போக்கில் அழிந்த கலைகளில்  இதுவும் ஒன்று, இன்றைக்கு சில கடைகளில் மிஷின் மூலம் வெட்டுகிறார்கள், ஏதோ  அடையாளத்துக்கு ஒரு குறி போட்டதுபோல் இருக்கிறது, எவ்வித அழகும் அதில் இல்லை. நகைக்கடையில் வாங்கும் நகையில் கூட கடையின் பெயரை எதோ கிறுக்கிதான் வைக்கீறார்களே தவிர அழகாக போடுவதில்லை. 

இப்படி வெட்டும் சாமான்களை எல்லாம் திருமணத்தின் போது  பரப்பி வைப்பார்கள். திருமணத்திற்கு  வந்தவர்கள் குறிப்பாக பெண்கள்  முகூர்த்தம்  முடிந்த பிறகு அந்த சாமான்களை எல்லாம் பார்த்து விட்டு செல்வார்கள். இப்போது எல்லாம் இது எல்லா கல்யாணத்திலும்  நடப்பதில்லை, வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில திருமணங்களில் மட்டும் பார்க்கலாம். கொரோனாவுக்கு பின்பு திருமணமே (விமர்சையாக) நடக்குமா என்று இருக்கும் சூழ்நிலையில் சாமான் பரப்புவதெல்லாம் நடக்காத காரியம், அப்படியே பரப்பினாலும் அதை அவர்களே பார்த்துக்கொள்ளவேண்டியது தான்.

எது எப்படி இருந்தாலும் இந்த பழக்கம் தொடரவேண்டும் என்பது எனது விருப்பம். அடுத்த தலைமுறையினருக்கு முன்னோர்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு  இந்த  பழக்கம் ஒரு கருவியாக இருக்கும் என்பது என் எண்ணம்.No comments: